2026 ஜனவரி டூ ஜூலை வரை தெரு நாய்க்கடியால் 24 பேர் உயிரிழப்பு.. பிரச்சனக்கு தீர்வு இந்த ஆண்டு இறுதிக்குள் இலக்கு எட்டப்படும்..
தமிழகத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 6 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டதாகவும், 34 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு கடந்த ஏழு மாதங்களில் 4.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு நாய்க்கடி பாதிப்பு குறைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 24, 2026: தமிழகத்தில் தெருநாய் தொல்லையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, கிட்டத்தட்ட 4.6 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தெருநாய் தொல்லை அதிகரித்து வருவதால், சாலையோரங்களில் மக்கள் நடமாடவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
தெருநாய் தொல்லை தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதில், என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தெரு நாய்க்கடியால் 24 பேர் உயிரிழப்பு:
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 6 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டதாகவும், 34 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு கடந்த ஏழு மாதங்களில் 4.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு நாய்க்கடி பாதிப்பு குறைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 28 ஆயிரம் பேரும், நெல்லையில் 23 ஆயிரம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 19 ஆயிரம் பேரும் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மற்றும் கோவை மாவட்டங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தலா 20 ஆயிரமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாய்க்கடித்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்:
இந்தப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான அளவு நாய்க்கடி தடுப்பு மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. நாய் கடித்த பிறகு, நான்கு தவணைகளில் ரேபிஸ் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, காகித அளவில் அரசின் அறிக்கைகள் இருந்தாலும், நேரடிக் களத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என உயர்நீதிமன்றம் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தது.
இதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
3 லட்சம் நாய்களுக்கு ஏபிசி அறுவை சிகிச்சை:
ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 35 நாய்களுக்கு ஏபிசி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச அறுவை சிகிச்சை எண்ணிக்கை இதுவாகும். சென்னையில் மட்டும் 52 ஆயிரத்து 226 நாய்களுக்கு ஏபிசி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தூத்துக்குடி காவல் மரண விவகாரம்.. 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்.. பிரேதப் பரிசோதனையில் வெளிவருமா உண்மை?
மேலும், நாய்களுக்கு நோய் ஏற்படாமல் இருப்பதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஒரு தடுப்பூசியின் விலை 9 ரூபாய் மட்டுமே என்பதால் போதுமான அளவில் அவற்றை வாங்கி இருப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர், அந்த நாய்கள் மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலேயே கொண்டு சென்று விடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு எட்டப்படும்:
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு கிட்டத்தட்ட 150 சதவீதம் அதிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம்தான் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
“இது உயிர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், ஒரே நாளில் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அதே நேரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் பின்பற்றியாக வேண்டும்,” என குறிப்பிடப்பட்டது.
சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் இது தொடர்பாகப் பேசும்போது, “நாள் ஒன்றுக்கு 100 முதல் 110 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, அவற்றை பிடித்த இடத்திலேயே மீண்டும் விடுகிறோம். நாள்தோறும் மேற்கொள்ளப்படும் கருத்தடை அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை வரும் காலங்களில் 350 ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்,” என தெரிவித்தார்.
சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?
இதற்காக அம்பத்தூர், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய நான்கு இடங்களில் கூடுதலாக இனக்கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட உள்ளன. மேலும், ஆக்ரோஷமான நாய்களைப் பிடித்து பராமரிப்பதற்காக மணலி மற்றும் பெரும்பாக்கத்தில் தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும், இதில் 500 நாய்கள் வரை பராமரிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, அதிகளவில் குப்பைகள் சேரும் இடங்களிலும் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் அதிகளவில் குப்பைகள் உற்பத்தியாகும் பகுதிகளில் தெருநாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.