நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்.. 10 வயது சிறுவன் வெட்டி கொலை.. சேலத்தில் பயங்கர சம்பவம்!
Salem Crime: சேலம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு மர்ம கும்பல் வீடு புகுந்து வெட்டியதில் 10 வயது சிறுவன் பலத்த வெட்டு காயம் அடைந்து உயிரிழந்தார். இதில், அவரது தாய்க்கும் தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ளது கருக்கானூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சத்யா. இவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். சத்யாவுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். சத்யா அந்த பகுதியில் உள்ள கரும்பு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக, ஆலையின் அருகே உள்ள வீட்டில் சத்தியா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை ( ஏப்ரல் 23) மர்ம நபர்கள் சிலர் சத்யாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பலத்த ஆயுதங்களால் சத்யாவை வெட்ட முயன்றனர். அப்போது, சத்தம் கேட்டு வந்த அவரது 10 வயது மகனை வெட்டுவதற்காக அந்த கும்பல் பாய்ந்தது. உடனே, அந்த மர்ம கும்பலை சத்தியா தடுத்து நிறுத்த முயன்றார். இதில், சத்யாவை தலை உள்ளிட்ட இடங்களில் அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில், பலத்த ரத்த காயம் அடைந்த சத்தியா சுருண்டு விழுந்தார்.
தாய் – மகன் மீது கொலை வெறி தாக்குதல்
உடனே, அந்த கும்பல் 10 வயது சிறுவன் என பாராமல் சத்யாவின் மகனை கண்ட துண்டமாக வெட்டியது. இதில், கழுத்தில் பலத்த வெட்டு காயம் அடைந்த அந்த சிறுவன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இந்த சம்பவம் நடந்த சத்தம் கேட்டு ஆலையின் அருகே இருந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இது குறித்து, அந்த பகுதி போலீசார் ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: நெரிசலில் சிக்காமல் சென்னை திரும்பனுமா? இந்த விஷயங்களை கொஞ்சம் பிளான் பண்ணுங்க!




சிறுவன் பரிதாப பலி – தாய்க்கு சிகிச்சை
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சத்யா மற்றும் அவரது 10 வயது மகன் ஆகியோரை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மர்ம கும்பல் வெட்டியதில் தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் அடைந்த சத்தியா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலைக்கான காரணம் குறித்து விசாரணை
இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவம் எதற்காக நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: விஜய்யுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்கும் நிலை பாஜகவுக்கு ஏற்படாது… தேசிய தலைவர் நிதின் நபீன்!