CWG 2026 : இந்தியாவுக்காக பதக்கங்களை குவித்த 2 தமிழர்கள் – பிரவின் சித்ரவேல் – செல்வ பிரபு சாதனை
கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 2 பதக்கங்களை வென்று தமிழக வீரர்கள் சாதனை படைத்தனர். மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில், தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப்பதக்கத்தையும் செல்வ பிரபு திருமரன் வெண்கலப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தனர்.
கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஆகஸ்ட் 1, 2026 இன்று நடைபெற்ற பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில், கனடாவின் ஸ்கார்லெட் சவானா டெல்காடோவை வீழ்த்தி இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் தங்கப் பதக்கத்தை வென்றார்.
குறிப்பிடத்தக்க வகையில், காமன்வெல்த் போட்டியில் குத்துச்சண்டையில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். அதைத் தொடர்ந்து, பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் அயர்லாந்தின் மைக்கேலா வால்ஷை வீழ்த்தி ஜாஸ்மின் லம்போரியா இந்தியாவின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.
இதையும் படிக்க : CWG 2026: இந்தியாவிற்கு வரப்போகும் மேலும் 2 பதக்கங்கள்.. பைனலில் களமிறங்கும் இரு சிங்கங்கள்!




இந்தியாவுக்காக பதக்கங்களை குவித்த 2 தமிழர்கள்
தடகளப் பிரிவிலும் இந்திய வீரர்கள் வரலாறு படைத்தனர். ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில், தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தூரம் தாண்டி தனது சிறந்த தனிப்பட்ட சாதனையைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதே போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் செல்வ பிரபு திருமரன் 16.52 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஒரே போட்டியில் இரண்டு தமிழக வீரர்கள் பதக்கம் வென்றதால், கிளாஸ்கோ மைதானமே இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது. ஜமைக்காவின் ஜோர்டான் ஸ்காட் தங்கப் பதக்கத்தை வென்றார்.
பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா
இந்திய வீரர்கள் இதுவரை அபாரமான திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். பளுதூக்குதல், ஜூடோ, ஈட்டி எறிதல், தடகளம் மற்றும் குத்துச்சண்டை ஆகிய பிரிவுகளில் இந்தியா மொத்தம் 27 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 7 தங்கம், 13 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். ஜூடோவில் இரண்டு தங்கப் பதக்கங்கள் வெல்லப்பட்ட நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளுக்குப் பிறகு பதக்க எண்ணிக்கை மேலும் உயர்ந்தது.
இதையும் படிக்க : CWG 2026: இந்தியாவுக்குத் தங்க வேட்டை… ஜூடோவில் தங்கம் வென்ற ஹர்ஷ் சிங் மற்றும் அஸ்மிதா டே
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றிலேயே இந்தியாவின் மிகச் சிறந்த குத்துச்சண்டை நிகழ்வாக இது அமையவுள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் 1, 2026 இன்று, 10 இந்திய குத்துச்சண்டை வீரர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, தங்களுக்குப் பதக்கங்களை உறுதி செய்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக் வீராங்கனை லவ்லினா போர்கோஹைனுடன் இணைந்து, சாக்ஷி சவுத்ரி, பிரீத்தி பவார், ஜாஸ்மின் லம்போரியா, பிரியா கங்காஸ், அருந்ததி சவுத்ரி, ஜடுமணி சிங், சச்சின் சிவாச், அங்குஷ் பங்கல் மற்றும் நரேந்தர் பெர்வால் ஆகிய குத்துச்சண்டை வீரர்களும் தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் உள்ளனர். பர்மிங்காம் 2022 போட்டிகளில் இந்தியா வென்ற ஏழு பதக்கங்கள் என்ற சாதனையை நமது குத்துச்சண்டை வீரர்கள் முறியடித்துள்ளனர்.
இப்போட்டிகளில், இந்தியாவின் நட்சத்திர விளையாட்டு வீரரான நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதேவேளையில் யாஷ்வீர் சிங் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். மேலும், தேஜஸ்வின் சங்கர் டெகாத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் டெகாத்லான் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.