வைபவ் சூர்யவன்ஷியுடன் போட்டியா? முதன்முறையாக மனம் திறந்த சஞ்சு சாம்சன்
Sanju Samson Breaks Silence : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன், அதிரடியாக அரை சதம் கடந்து தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்தார். இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன், அதிரடியாக அரை சதம் கடந்து தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்தார். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து முதல் விக்கெட்டுக்கு 88 ரனக்ள் சேர்த்தனர். இதில் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார்.
வைபவ் சூர்யவன்ஷியுடன் போட்டியா?
இதன் மூலம் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்தார். குறிப்பாக சஞ்சு சாம்சனுக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என்ற பலரது கருத்துகளுக்கும் அவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பதிலளித்தார்.
இதையும் படிக்க : IND vs AFG: சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை மெய்டன்.. முதலிடத்தை தொட்ட பும்ரா!




இந்த நிலையில் போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சஞ்சு சாம்சனிடம், துவக்க வீரர் இடத்திற்கான அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷியுடன் நடைபெறும் போட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சஞ்சு சாம்சன், “இந்த போட்டி வெளியுலகத்துக்கு மட்டுமே. ஆனால் விளையாடும்போது ஒரே அணியாக நாட்டுக்காக ஒன்றாக விளையாடுகிறோம் என்றார்.
மேலும் பேசிய அவர், வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா தனக்கு போட்டியாளர்கள் அல்ல அவர்கள் தன்னுடைய சக வீரர்கள் என்றும் சாம்சன் குறிப்பிட்டார். முதலில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் தங்களுடைய நோக்கம். ஒரு வீரருக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது, மற்றொருவருக்கு கிடைக்கவில்லை என்று நினைத்து மனவருத்தம் அல்லது எதிர்மறை எண்ணத்துடன் இருப்பது அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்றார்.
‘அவர்கள் வெளியுலகத்துக்கு மட்டும் போட்டியாளர்கள்’
மேலும், ஒரு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக மற்றொரு வீரரிடம் அது ஏன் வழங்கப்பட்டது என்று நினைத்து வருத்தப்படுவது போன்ற மனநிலை அணியில் இருக்கக்கூடாது. இணையத்தில் வெளியாகும் கருத்துகளை தான் பெரிதாக கவனிப்பதில்லை. சில நேரங்களில் முன்னாள் வீரர்களின் கருத்துகள் தன்னுடைய கவனத்துக்கும் வந்துவிடும் என்றார்.
இதையும் படிக்க : Asian Games 2026: கிரிக்கெட் முதல் மல்யுத்தம் வரை.. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய தடகள வீரர்களின் அட்டவணை!
தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் ரோபோக்கள் இல்லை. விமர்சனங்கள் கடந்த காலத்தில் என்னை பாதித்துள்ளது. இந்தியாவில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களைச் சுற்றியுள்ள வெளிப்புற கருத்துகள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அந்த சூழலில் தங்களுடைய மனநிலையை தெளிவாக வைத்துக்கொண்டு போட்டிக்கு தயாராக வேண்டும் என்றார்.
விமர்சனங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளும் அளவுக்கு அனுபவம் பெற்றுவிட்டேன். அதே நேரத்தில், அந்த கருத்துகளை அதிகமாக கவனித்துக் கொண்டிருந்தால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தான் இப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
“ஒரு ஷாட் அடிப்பதற்கு முன்பே, நான் அவுட் ஆகிவிட்டால் மீண்டும் சமூக வலைதளங்களில் என்ன பேசுவார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தால் என்னால் பேட்டிங் செய்ய முடியாது. அதனால் அதைப் பற்றி கவலைப்படாமல், ‘பரவாயில்லை’ என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்” என்றும் சாம்சன் தெரிவித்தார்.