2027 World Cup: ரோஹித், கோலி உலகக் கோப்பை பயணத்திற்கு வயது தடையா? பிசிசிஐ விளக்கம்!
Rohit Sharma Virat Kohli 2027 World Cup: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி 2027 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்த சந்தேகங்கள் எழுகின்றன. ஆனால், பிசிசிஐ தலைவர் வயது ஒரு தடையல்ல என்கிறார்; உடற்தகுதியும் செயல்திறனுமே முக்கியம். அனுபவமிக்க வீரர்கள் இளம் அணியுடன் இருப்பது பலம். அதேசமயம், முன்னாள் வீரர் முகமது கைஃப், இந்தியா உலகக் கோப்பையை வெல்ல பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மேம்பாடு அவசியம் என வலியுறுத்துகிறார்.
வருகின்ற 2027ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கவிருக்கும் 2027 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் (ICC ODI World Cup 2027) இந்தியாவின் ஜாம்பவான் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி (Virat Kohli) விளையாடுவது குறித்த சந்தேகங்கள் அடிக்கடி எழுந்து வருகின்றனர். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முடிவடைந்த ஒருநாள் தொடரில் இருவரும் தலா ஒரு சதம் அடித்ததன் மூலம், அவர்களின் எதிர்காலம் குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 2027 உலகக் கோப்பையின் போது கோலிக்கு 39 வயதாகவும், ரோஹித் சர்மாவுக்கு 40 வயதுக்கு மேலாகவும் இருக்கும். இருப்பினும், அணித் தேர்வில் வயது ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் நம்புகிறார்.
ALSO READ: கோலியால் தனியாக உலகக் கோப்பையை வெல்ல முடியாது: முன்னாள் வீரர் கொடுத்த எச்சரிக்கை
பிசிசிஐ தலைவர் கூறியது என்ன..?
இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ், “இது தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் முடிவைப் பொறுத்தது, எனவே வாரியம் குறித்து எங்களால் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் எனது தனிப்பட்ட கருத்தின்படி, வயது அல்ல, உடற்தகுதி மற்றும் செயல்திறன் மட்டுமே தேர்வுக்கான ஒரே அளவுகோலாக இருக்க வேண்டும். ஒரு வீரர் உடற்தகுதியுடன் இருந்து நாட்டிற்காக போட்டிகளில் வெற்றி பெற்றுத் தந்தால், நாம் அந்த ஒரு அம்சத்தில் கவனம் செலுத்த வேண்டும். இளம் கேப்டன் சுப்மன் கில்லின் தலைமையில் ரோஹித், கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற அனுபவமிக்க வீரர்கள் இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பும்ரா பந்துவீச்சுத் துறையை வழிநடத்த முடியும் முக்கியமான நேரங்களில் அழுத்தத்தைச் சமாளிப்பதில் அவர்களின் அனுபவம் அணிக்கு ஒரு பலம்” என்று கூறினார்.




முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியது என்ன..?
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இந்த மாபெரும் போட்டித்தொடர் குறித்து முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் முகமது கைஃப் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதில், “தென்னாப்பிரிக்காவின் சூழ்நிலைகள் பெரிதும் மாறிவிட்டன. பேட்டிங்கிற்கு ஏற்ற விக்கெட்டுகள் அதிகமாக உள்ளன. எனவே, பந்துவீச்சாளர்களை விட பேட்ஸ்மேன்களே அங்கு ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. அதனால்தான், சிறந்த பந்துவீச்சுத் துறையைக் கொண்ட அணி இந்தத் தொடரில் சிறந்து விளங்கும்” என்று கூறினார்.
ALSO READ: ரோகித் சர்மா, விராட் கோலி வரிசையில் திலக் வர்மா – புதிய சாதனை
தொடர்ந்து பேசிய கைஃப், “அனைவரின் கவனமும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீதுதான் உள்ளது, அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். ஆனால், இந்தியா உலகக் கோப்பையை வெல்ல விரும்பினால், அவர்கள் தங்களது பந்துவீச்சு மற்றும் பீல்டிங் துறைகளை மேம்படுத்த வேண்டும். அவையே மிகவும் முக்கியமான இரண்டு அம்சங்கள்” என்று கூறினார்.