ICC Ranking: ஐசிசி டெஸ்ட் தரவரிசை! டாப் 10ல் பண்ட், கில்.. ரஹ்மத் ஷா புது சாதனை!
ICC Test Rankings: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நவம்பர் 11, 2026 அன்று வெளியான புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் 10 இடங்களில் உள்ள இந்தியர்கள். ஆப்கானிஸ்தானின் ரஹ்மத் ஷா தனது நாட்டின் முதல் வீரராக டாப் 10ல் நுழைந்து சாதனை படைத்தார். பந்துவீச்சில் பும்ரா, ஆல்-ரவுண்டரில் ஜடேஜா ஆகியோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக் கொண்டனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று அதாவது 2026 நவம்பர் 11ம் தேதி சமீபத்திய டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையை வெளியிட்டது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் 2 இந்திய பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மற்றும் இந்திய கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) ஆகியோர் முதல் 10 இடங்களில் உள்ள இரண்டு இந்தியர்கள் ஆவர். இருப்பினும், முதல் 5 இடங்களுக்குள் எந்த இந்திய பேட்ஸ்மேனும் இல்லை. ரிஷப் பண்ட் (713 மதிப்பீட்டுப் புள்ளிகள்) எட்டாவது இடத்திலும், சுப்மன் கில் (697 மதிப்பீட்டுப் புள்ளிகள்) பத்தாவது இடத்திலும் உள்ளனர். சமீபத்திய தரவரிசையில் இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் தலா ஒரு இடம் சரிந்துள்ளனர். இதற்கிடையில், இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13வது இடத்தில் உள்ளார்.
ALSO READ: கிடைக்காத வாய்ப்பு.. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த முகமது ஷமி!
டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், தென்னாப்பிரிக்காவின் டெம்பா பவுமா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உள்ளனர். இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஹ்மத் ஷா, ஐசிசி டெஸ்ட் வீரர் தரவரிசையின் எந்தவொரு பிரிவிலும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த தனது நாட்டின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.




ஆப்கானிஸ்தான் வீரர் ஆதிக்கம்..
ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரஹ்மத் ஆடிய 173 ரன்கள், டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அவரை ஆறு இடங்கள் முன்னேற்றி ஏழாவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதுவே அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த இடமாகும். இது ரஹ்மத்தின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஐந்தாவது டெஸ்ட் சதமாகும். இதன் மூலம் 33 வயதான ரஹ்மத், தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் மற்றும் இலங்கையின் கமிண்டு மெண்டிஸ் ஆகியோரை முந்தி தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
சரிந்தாரா பும்ரா..?
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 5வது இடத்தில் நீடிக்கிறார் . ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சு தரவரிசையில் முன்னிலை வகிக்கிறார். தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன், நியூசிலாந்தின் மாட் ஹென்றி மற்றும் இங்கிலாந்தின் ஆலி ராபின்சன் ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர்.
ALSO READ: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. முக்கிய வீரர்களை களமிறக்கிய நியூசிலாந்து அணி!
டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, ஜான்சனுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் மற்றொரு இந்திய வீரரான வாஷிங்டன் சுந்தர், ஏழாவது இடத்தில் உள்ளார்.