IPL 2027: சிஎஸ்கே பயிற்சியாளர் குழுவில் மாற்றம்.. விலகிய மைக் ஹஸ்ஸி! காரணம் என்ன..?
CSK Coaching Revamp: ஐபிஎல் 2027 சீசனுக்காக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நீண்டகால பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி நீக்கப்பட்டுள்ளார். தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்குப் பதிலாக ஜாகீர் கான் பொறுப்பேற்றுள்ளார். மேலும், பந்துவீச்சு பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். பீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஃபாஸ்டரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஐபிஎல் 2027 சீசனுக்கு (IPL 2027) தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் பயிற்சியாளர் குழுவில் பெரிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது அணியின் பயிற்சி ஊழியர்களிலும் மற்றொரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மைக்கேல் ஹஸ்ஸி, பேட்டிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஹஸ்ஸி இருந்து வந்தார். தற்போது அவருக்குப் பதிலாக யார் நியமிக்கப்படுவார் என்ற ஆர்வம் நிலவுகிறது.
ALSO READ: ஐபிஎல் சூதாட்ட அவதூறு வழக்கு: தோனியின் சாட்சியத்தை எங்கு பதிவு செய்வது? – நீதிமன்றம் கருத்து
கடந்த ஐபிஎல் 2026 சீசனுக்குப் பிறகு சிஎஸ்கே அணியின் பயிற்சி ஊழியர்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 18 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் ஃபிளெமிங் விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், எரிக் சைமனுக்குப் பதிலாக மோஹித் சர்மா அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.




மைக்கேல் ஹஸ்ஸி சிஎஸ்கே அணியை விட்டு விலகுகிறாரா?
தற்போது, மைக்கேல் ஹஸ்ஸியும் பயிற்சி ஊழியர் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, சிஎஸ்கே அணி நிர்வாகம் ஹஸ்ஸிக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், சிஎஸ்கே-வை விட்டு வெளியேறிய பிறகும், ஹஸ்ஸியின் ஐபிஎல் வாழ்க்கை முடிவுக்கு வரும் எனத் தெரியவில்லை. தகவல்களின்படி, ஹஸ்ஸி மற்ற ஐபிஎல் அணிகளுடன் நல்ல பழக்கம் உள்ளதால் வேறு அணியில் எதிர்பார்க்கலாம். எனவே, வரவிருக்கும் ஐபிஎல் 2027 சீசனில் மைக்கேல் ஹஸ்ஸி எந்த அணியின் பயிற்சி ஊழியர் குழுவில் இடம்பெறுவார் என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது.
பீல்டிங் பயிற்சியாளர் யார்..?
சிஎஸ்கே அணியின் பயிற்சி ஊழியர்களில் ஹஸ்ஸியைத் தவிர வேறு பல மாற்றங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஃபாஸ்டரின் எதிர்காலமும் நிச்சயமற்றதாக உள்ளது. அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்பஸ்ஸின் அறிக்கையின்படி, கடந்த 2026 ஐபிஎல் சீசனுக்கு முன்பு ஃபாஸ்டர் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். எனவே, வரவிருக்கும் சீசனுக்கும் ஃபாஸ்டர் தக்கவைக்கப்படுவாரா அல்லது மேலும் மாற்றங்கள் இருக்குமா என்பதைப் பார்ப்பது முக்கியமானதாக இருக்கும்.
ALSO READ: டெல்லி அணியில் பண்ட் இதற்கு சரியாக இருப்பார்.. ட்விஸ்டை உடைத்த கங்குலி!
சிஎஸ்கே-வில் நீண்ட காலம் பயணித்த ஹஸ்ஸி:
மைக்கேல் ஹஸ்ஸிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நீண்டகாலத் தொடர்பு உண்டு. ஹஸ்ஸி முதன்முதலில் 2008-ல் ஒரு வீரராக அணியில் சேர்ந்தார். 2009 சீசனைத் தவிர, ஹஸ்ஸி 2010 முதல் 2013 வரை சிஎஸ்கே அணியில் அங்கம் வகித்தார். இந்தக் காலகட்டத்தில், ஹஸ்ஸி ஆரஞ்சு தொப்பியையும் வென்றார். அதன்பிறகு, 2014-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி, 2015-ல் மீண்டும் சிஎஸ்கே அணிக்குத் திரும்பினார். ஹஸ்ஸி சிஎஸ்கே அணிக்காக மொத்தம் 64 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தப் போட்டிகளில், ஹஸ்ஸி சுமார் 41 சராசரி மற்றும் 123 ஸ்டிரைக் ரேட்டுடன் 2,213 ரன்கள் எடுத்தார். ஒரு வீரராகப் பங்களித்ததோடு மட்டுமல்லாமல், ஹஸ்ஸி சிஎஸ்கே அணிக்காகப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.