ஐபிஎல் சூதாட்ட அவதூறு வழக்கு: தோனியின் சாட்சியத்தை எங்கு பதிவு செய்வது? – நீதிமன்றம் கருத்து
IPL Betting Case : ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான அவதூறு வழக்கில் , கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் சாட்சியத்தை எந்த இடத்தில் பதிவு செய்வது என்பதைத் தற்போதைய நிலையில் தீர்மானிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை, அக்டோபர் 9 : ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான அவதூறு வழக்கில், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் சாட்சியத்தை எந்த இடத்தில் பதிவு செய்வது என்பதைத் தற்போதைய நிலையில் தீர்மானிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாட்சி விசாரணையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலிக்கலாம் எனக் கூறிய நீதிமன்றம், வழக்கின் விசாரணையை அக்டோபர் 29, 2026 அன்று ஒத்தி வைத்துள்ளது.
தோனியின் சாட்சியத்தை எங்கு பதிவு செய்வது?
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாகவும் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் அவரது கருத்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக கூறி, சம்பத்குமாருக்கு எதிராக ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தோனி வழக்குத் தொடர்ந்திரு்தார்.
இதையும் படிக்க : IND vs PAK: ஹாங்காங் சிக்ஸஸ் 2026.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது..?




இந்த வழக்கு தொடர்புடைய சிடி ஆதாரங்களை எழுத்துப்பூர்வ ஆவணமாக செய்வதற்கான செலவாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரியில் தோனிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே சம்பத்குமார் உயர் நீதிமன்றத்தில் 3 இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தார். அதில், தோனியின் சாட்சியத்தைப் பதிவு செய்யும்போது, அதைக் கண்காணிக்க ஒரு நீதித்துறை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் தோனியிடம் நடத்தப்படும் விசாரணை முழுவதையும் வீடியோ பதிவு செய்து, அதன் நகல்களைத் தனக்கும் அந்த நீதித்துறை அதிகாரிக்கும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தோனி பிரபல கிரிக்கெட் வீரர் என்பதற்காக, அவரது சாட்சியத்தை 5 ஸ்டார் ஹோட்டலிலோ தனியார் பங்களாவிலோ பதிவு செய்யக் கூடாது என்றும் நீதிமன்ற வளாகத்திலோ அல்லது அரசுக் கட்டடத்திலோ மட்டுமே சாட்சிப் பதிவு நடைபெற வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்குமாறு தோனிக்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு மீதன விசாரணை அக்டோபர் 9, 2026 இன்று நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடர் முன் விசாரணைக்கு வந்தன. இந்த நிலையில் தோனி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிட்ட இடத்தில்தான் சாட்சியம் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கக் கூடாது என வாதிட்டார். பொது இடத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டால் ரசிகர்கள் பெருமளவில் திரண்டு, தேவையற்ற சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படக்கூடும் என்றும் வாதிட்டார்.
இதையும் படிக்க : 2026 Hockey Tournament: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் வெளியேறிய பாகிஸ்தான்! வங்கதேச அணிக்கு அடித்த லக்..
வழக்கின் ஆவணங்கள் சுமார் 12 ஆண்டுகள் பழமையானவை என்பதால் அவற்றை மொழிபெயர்ப்பதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிடி சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் உள்ள ஆதாரங்களைத் தவிர மற்றவை மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறிய அவர், மனுக்களுக்குப் பதிலளிக்கக் கூடுதல் அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்சி விசாரணையை வீடியோ பதிவு செய்யும் கோரிக்கையைப் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார். ஆனால், சாட்சியம் எந்த இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்ய இயலாது எனக் கூறினார். சம்பத்குமாரின் மனுக்களுக்கு தோனி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 29, 2026 தேதிக்கு ஒத்திவைத்தார்.