CWG 2026 தங்கம் வென்ற ப்ரீத்தி பவார், ஜாஸ்மின் லம்போரியா… வெற்றிக்குப் பின்னால் குடும்பத்தின் போராட்டம்!
காமன்வெல்த் விளையாட்டு 2026 தொடரில் பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ப்ரீத்தி பவார் தங்கப் பதக்கம் வென்ற நிலையில், அதனைத் தொடர்ந்து 57 கிலோ எடைப்பிரிவில் ஜாஸ்மின் லம்போரியாவும் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். அவர்களது பின்னணி குறித்து பார்க்கலாம்.
காமன்வெல்த் விளையாட்டு 2026 தொடரில் இந்தியாவின் குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவில் ப்ரீத்தி பவார் தங்கப் பதக்கம் வென்ற நிலையில், அதனைத் தொடர்ந்து 57 கிலோ எடைப்பிரிவில் ஜாஸ்மின் லம்போரியாவும் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். ஹரியானா மாநிலம் பிவானி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ப்ரீத்தி பவார். இவர் 8ஆம் வகுப்பு படிக்கும் போது முதல் குத்துச்சண்டை போட்டிகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
இந்த நிலையில் ப்ரீத்தியின் தந்தையும், ஹரியானா காவல்துறையில் உதவி ஆய்வாளருமான சோம்வீர் சிங், தனது மகளின் வெற்றி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார். தனது மகள் தங்கம் வென்றது குறித்து தெரிவித்த அவர், இது எங்கள் குடும்பத்தின் வெற்றி மட்டுமல்ல, இந்தியாவின் வெற்றி. என் மகளின் மாமாவே அவரது பயிற்சியாளராக இருந்து வழிகாட்டினார். குடும்பத்தின் முழு ஆதரவும் அவருக்கு கிடைத்தது. இந்த தங்கப் பதக்கம் இன்னும் பல வெற்றிகளின் தொடக்கம் மட்டுமே என்றார்.
இதையும் படிக்க : CWG 2026: இந்தியாவிற்கு வரப்போகும் மேலும் 2 பதக்கங்கள்.. பைனலில் களமிறங்கும் இரு சிங்கங்கள்!




ஒலிம்பிக் வாய்ப்பை தவறவிட்ட ப்ரீத்தி
மேலும் பேசிய அவர், உடல்நலக் குறைவு காரணமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது ப்ரீத்திக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. அந்த கவலை அவர் நீண்ட நாட்கள் மனதில் வைத்திருந்தார். ஒருநாள் அவரது கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்று நாங்கள் எப்போதும் உற்சாகப்படுத்தினோம். இன்று காமன்வெல்த் தங்கத்தின் மூலம் அந்த கனவு நனவாகியுள்ளது. அடுத்த இலக்கு ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்வதுதான் ன்றார்.
குத்துச்சண்டை பாரம்பரியத்தை தொடரும் ஜாஸ்மின் லம்போரியா
மற்றொரு தங்கப் பதக்கம் வென்ற ஜாஸ்மின் லம்போரியா, குத்துச்சண்டை போட்டிகளில் சாதித்த புகழ்பெற்ற குடும்பத்தை சேர்ந்தவர். அவரது கொள்ளு தாத்தா கேப்டன் ஹவா சிங், இந்தியாவின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரது நெருங்கிய உறவினர்களான சந்தீப் சிங் மற்றும் பர்விந்தர் சிங் ஆகியோர் தேசிய சாம்பியன்களாகவும், சர்வதேச அளவில் விளையாடியவர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.
இதையும் படிக்க : CWG 2026: இந்தியாவுக்குத் தங்க வேட்டை… ஜூடோவில் தங்கம் வென்ற ஹர்ஷ் சிங் மற்றும் அஸ்மிதா டே
இந்த நிலையில் ஜாஸ்மின் லம்போரியாவின் பயிற்சியாளரான சந்தீப் சிங், 2016 ஆம் ஆண்டு ஜாஸ்மின் குத்துச்சண்டை பயிற்சியை தொடங்கியபோதே அவரது திறமையை உணர்ந்ததாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் அவரது குடும்பத்தில் புகழ்பெற்ற வீரர்கள் இருப்பதால் அவருக்கு அழுத்தங்கள் இருந்தாலும், கடின உழைப்பும், சரியான வழிகாட்டுதலும் அவரை இன்று காமன்வெல்த் தங்கப் பதக்க நாயகியாக மாற்றியுள்ளது என்றார். இந்த வெற்றியின் மூலம், ப்ரீத்தி பவார் மற்றும் ஜாஸ்மின் லம்போரியா ஆகிய இருவரும் இந்திய மகளிர் குத்துச்சண்டையின் புதிய நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர்.