2027 World Cup: பிசிசிஐ ரோஹித், கோலிக்கு இந்திய அணியில் இடமளிக்குமா..? உலகக் கோப்பை திட்டம் இதுதான்!
Rohit Sharma Virat Kohli future: வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெறுவது குறித்து விவாதம் வலுக்கிறது. பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ், வீரர்களின் வயது தடையல்ல என்றும், உடற்தகுதி மற்றும் சிறப்பான செயல்திறனே முக்கிய தேர்வு அளவுகோல் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். யஷஸ்வி மற்றும் சுப்மன் கில்லின் கேப்டன்சி குறித்தும் பேசியுள்ளார்.
வருகின்ற 2027ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் (Rohit Sharma) இடம்பெறுவார்களா என்ற விவாதம் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பல பேச்சுக்களும் செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, ரோஹித்தின் இடத்தில் யஷஸ்விக்கு வாய்ப்பளிக்க ஒரு முழுமையான திட்டத்தை வகுத்திருந்தது. ஆனால், இங்கிலாந்தில் தனது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக ரோஹித் சர்மா தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். முன்னதாக, பிசிசிஐ (BCCI) தலைவர் மிதுன் மன்ஹாஸ், ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் (Indian Cricket Team) ரோஹித் மற்றும் கோலி உடற்தகுதி மற்றும் செயல்திறனின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வயது ஒரு தடையாக இருக்காது என்று தெளிவுபடுத்தினார். தற்போது, மீண்டும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார்.
ALSO READ: வீரர்களின் உடற்தகுதி முதல் 2027 உலகக் கோப்பை வரை.. தலைமைத் தேர்வாளராக ஓஜா சந்திக்கும் சவால்கள்..!
உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்களின் தேர்வு, அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் அமையும். 2027 ஒருநாள் உலகக் கோப்பையானது 2027 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது. இந்திய அணி தற்போது நியூசிலாந்திற்கு ஒரு பெரிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதற்கு முன்னதாக, மிதுன் மன்ஹாஸ் ஸ்போர்ட்ஸ்ஸ்டாரிடம், “என்னைப் பொறுத்தவரை, உடற்தகுதி மற்றும் செயல்திறனே தேர்வுக்கான அளவுகோலாக இருக்க வேண்டும். வயது ஒரு பொருட்டாகவே இருக்கக்கூடாது. ஒரு வீரர் உடற்தகுதியுடன், சிறப்பாகச் செயல்பட்டு, நாட்டிற்காகப் போட்டிகளை வென்று கொடுத்தால், அதுவே முக்கியம்” என்று கூறினார்.




பிசிசிஐ தலைவர் என்ன கூறினார்?
இந்தியாவின் இரண்டு ஜாம்பவான் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இப்போது அவர்கள் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார்கள். 2023-ல், ரோஹித் சர்மாவின் தலைமையில், இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
ALSO READ: 4 நாட்களில் அடுத்த டி20 தொடர்.. நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் இந்தியா!
கில் கேப்டன்ஷி குறித்து பேசிய பிசிசிஐ தலைவர், “சுப்மன் கில், இந்திய அணியைத் தவிர, கடந்த 2-3 ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். கில் உலகக் கோப்பை பயணத்தைத் தொடங்கும் போது இந்த அனுபவம் அவருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். விராட், ஹர்திக் மற்றும் ரோஹித் ஆகியோர் அணியில் இருப்பது அவருக்கு நன்மை பயக்கும். மேலும், ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். அவராலும் அணியை வழிநடத்த முடியும். சுப்மன் அனுபவம் வாய்ந்தவர். அவரைச் சுற்றி அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது அவருக்குப் பயனளிக்கும்.” என்று கூறினார்.