மாசி பெளர்ணமி… திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்!
Tiruvannamalai Arunachaleswarar Temple: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மாசி மாதத்தில் வரும் பெளர்ணமியில் பக்தர்கள் கிரிவலம் வருவதற்கான உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பக்தர்கள் கிரிவலம் பாதையில் கிரிவலம் வந்து உண்ணாமுலையம்மன் அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்து வழிபாடு மேற்கொள்ளலாம்.
திருவண்ணாமலை ஸ்ரீ உண்ணாமுலையம்மன் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படும். இதற்காக திருவண்ணாமலை மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவது வழக்கமாகும். அதன்படி, அவர்கள் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு உள்ள கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்த பின்னர் உண்ணாமுலையம்மன் அருணாச்சலேஸ்வரரை வழிபாடு மேற்கொள்வர். இதே போல, மற்ற விசேஷ நாட்களிலும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படும். இந்த நிலையில், மாசி மாதத்துக்கான பெளர்ணமி நாளை செவ்வாய்க்கிழமை ( மார்ச் 3) வருவதால் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.
கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம் அறிவிப்பு
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் வருவார்கள். அவர்களின் வசதிக்காக கிரிவலம் வருவதற்கான உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது அதன்படி, இன்று திங்கள் கிழமை ( மார்ச் 2) 6:29 மணிக்கு தொடங்கி நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5:52 மணிக்கு பௌர்ணமி நிறைவு பெறுகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வர உகந்த நேரம் ஆகும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 2026 மாசி மகம் எப்போது?.. மார்ச் 2 அல்லது மார்ச் 3?.. குழப்பங்களும்.. முழு விளக்கமும்!




கோவிலில் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு
மாசி மாத பௌர்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை ( மார்ச் 3) அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதே போல, அன்று நாள் முழுவதும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது.
பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடுகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமிக்காக வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், பக்தர்களுக்காக குடிநீர், கழிவறை, மருத்துவ வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன. இதே போல, கிரிவலம் செல்லும் பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார்
மேலும், கிரிவல பாதையில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை செல்லாமல் இருப்பதற்காக தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், கிரிவலம் தொடங்கி முடியும் வரை பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த இடத்தை மாவட்ட காவல் துறையின் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் படிக்க: 2026 மாசி மகம் விரதமுறை.. செய்ய வேண்டியவையும்.. தவிர்க்க வேண்டியவையும்..