AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பழனியில் தீச்சட்டி எடுத்த ஜப்பான் பக்தர்கள்… நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு!

Palani Muurgan Temple: பழனியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் பால் குடம் எடுத்தும், தீச்சட்டி எடுத்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதே போல, தமிழகத்தில் உள்ள ஆறுபடை முருகன் வீடுகளுக்கு செல்ல உள்ளதாக அந்த பக்தர்கள் குழு தெரிவித்தது.

பழனியில் தீச்சட்டி எடுத்த ஜப்பான் பக்தர்கள்… நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு!
பழனியில் தீச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்திய ஜப்பான் பக்தர்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 26 Feb 2026 16:37 PM IST

தமிழகத்தில் உள்ள ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் நடைபெறும் தைப்பூசம், சூரசம்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இதே போல, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். இதனால், இந்த கோவிலானது பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பழனி அடிவாரத்தில் உள்ள கிரி வீதியில் அமைந்திருக்கும் புலிப்பாணி சித்தர் ஆசிரமத்துக்கும் நேரில் சென்று வழிபாடு மேற்கொள்கின்றனர்.

பழனிக்கு வருகை தந்த ஜப்பான் பக்தர்கள்

இங்கு, பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் உள்ளிட்டவை நடைபெறுகிறது. இந்த நிலையில், ஜப்பான் நாட்டை சேர்ந்த சுமார் 50- க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பழனி முருகன் கோவிலுக்கு தரிசனத்துக்காக வருகை தந்திருந்தனர். அவர்கள் புலிப்பாணி ஆசிரமத்தில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர். இந்த வழிபாட்டின் போது, அந்த சுற்றுலா பயணிகள் தமிழ் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சட்டை மற்றும் சேலை அணிந்து வந்திருந்தனர். இதில், 25 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் என 50 பேர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க: அனுமன்.. முருகன்.. செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்ய வேண்டிய கடவுள்களும், பலன்களும்!

பால்குடம் மற்று தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பக்தர்கள்

இதைத் தொடர்ந்து, அந்த பக்தர்கள் சுவாமிக்கு பால்குடம் எடுத்து கிரி வீதி, சன்னதி வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். பின்னர், திருஆவினன்குடி கோயில், குழந்தை வேலாயுத சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொண்டனர். இதன் பின்னர் பழனி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற மாசி திருவிழா தேரோட்டத்தில் பங்கேற்று அக்னி சக்தி எடுத்து ஓம் சக்தி, பராசக்தி கோசுத்துடன் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர்.

ஜப்பான் பக்தர்களின் வழிபாட்டை வியப்புடன் பார்த்த மக்கள்

வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் தமிழகத்துக்கு வருகை தந்து சுவாமிக்கு தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தியதை அந்த பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். இந்த பக்தர்கள் குழுவானது தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலுக்கு செல்ல உள்ளதாகவும், அங்கேயும், இது போன்று பால் குடம் மற்றும் தீச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: உங்கள் ஜாதகத்தில் சுக்கிர தோஷம்?.. அறிகுறிகளும்.. எளிய தீர்வுகளும்.. முழு விவரம்!!

Follow Us