Koodalur: வேண்டிய வரம் அருளும் கூடலூர் அழகிய பெருமாள் கோயில்!
தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கூடல் அழகிய பெருமாள் கோயில், வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அசுரனை வதம் செய்த பின் விஷ்ணு எழுந்தருளிய இடம் இது. சிற்றரசரின் கனவில் தோன்றிய பெருமாள், கோயில் அமைக்க வழி வகுத்தார் என சொல்லப்படுகிறது.

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மிக அழகான இயற்கை எழில் நிறைந்த ஒரு இடமாக உள்ளது. இந்த ஊரில் அமைந்திருக்கும் கூடலூரில் கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில் உள்ளது. இங்கு மூலவராக கூடல் அழகிய பெருமாள், உற்சவராக சுந்தரராஜர், தாயாராக மகாலட்சுமி ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோயிலின் தல விருட்சமாக புளிய மரம் உள்ளது. இக்கோயில் தினமும் காலை 7:00 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்த கூடல் அழகிய பெருமாள் கோயிலில் சிறப்புகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
கோயிலின் தல புராணம்
சிவனிடம் வரம் பெற்ற அசுரன் தேவர்களை துன்புறுத்திய நிலையில் அவனிடமிருந்து தங்களை காக்கும் படி தேவர்கள் மகாவிஷ்ணுவை நாடினர். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அசுரனை அழிப்பது குறித்து ஆலோசனை நடத்த மகாவிஷ்ணு தேவர்களை அழைத்தார். தொடர்ந்து அவனை அழித்த விஷ்ணு பகவான் தேவர்களின் வேண்டுதல்களுக்கு இணங்க இங்கேயே எழுந்தருளினார். காலப்போக்கில் அவருக்கு நடந்து வந்த வழிபாடுகள் மறைந்து போனது.
இதையும் படிங்க: பித்ரு தோஷத்தை போக்கும் சீனிவாச பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?
பிற்பகுதியில் இந்த பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் மதுரை கூடலழகர் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். அவரை தினமும் தரிசித்து விட்டு தான் எந்தவிதமான பணிகளையும் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த மன்னருக்கு தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் கூடல் அழகருக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனை பற்றி தனக்கு வழிகாட்டும்படி அவர் பெருமாளிடம் வேண்டினார். அவரது கனவில் தோன்றிய கூடலழகர் இந்த இடத்தை சுட்டிக்காட்டி கோயில் எழுப்பும்படி கூறினார்.
அதன் பின்னர் மன்னர் தான் கனவில் கண்ட அமைப்பில் பெருமாளுக்கு கோயில் எழுப்ப அவருக்கு கூடலழகர் என்ற திருநாமம் கிடைத்தது.
இதையும் படிங்க: சிவன், பெருமாள் இணைந்த உருவம்.. சங்கரநாராயணர் கோயில் சிறப்புகள்!
கோயிலின் சிறப்புகள்
இந்த கோயிலில் கூடலழகர் ராமாயணம் மற்றும் கிருஷ்ணரின் லீலைகளை விளக்கும் சிற்பங்களுடன் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் அஷ்டாங்க விமானத்தின் கீழ் எழுந்தருளியுள்ளது சிறப்பான ஒற்றாக பார்க்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் பெருமாள் நின்ற கோலத்தில் தாயார்களுடன் காட்சி தருகிறார்.
இக்கோயிலில் இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் வாசனை திரவியம் மற்றும் நல்லெண்ணெய் சேர்ந்த கலவையால் காப்பிட்டு பூஜை செய்யப்படுகிறது. இல்வாழ்க்கை பிரச்சினையால் பிரிந்த தம்பதியர்கள் அல்லது அவரது குடும்பத்தினர் மீண்டும் சேர்வதற்கு சுவாமிக்கு துளசி மாலை வஸ்திரம் சாற்றி வழிபட்டு வேண்டிக் கொண்டால் பலன் கிடைக்கும் என்பது தீராத ஐதீகமாக உள்ளது.
மேலும் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை வேண்டுபவர்களும் இந்த கோயிலுக்கு அதிக அளவில் வருகை தருகிறார்கள். சுவாமி சன்னதிக்கு எதிராக கல் தீப ஸ்தம்பம் ஒன்று உள்ளது . திருக்கார்த்திகை அன்று இதில் தீபம் ஏற்றி விசேஷ பூஜை நடைபெறுகிறது. இங்கே சித்திரை மாத பௌர்ணமி தொடங்கி கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.