Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Angala Parameshwari: சிலிர்க்க வைக்கும் தெய்வீகம்.. இந்த அங்காள பரமேஸ்வரி கோயில் தெரியுமா?

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் அருகே அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலின் வரலாறு பொன்மேனி என்பவரின் வறுமை மற்றும் மகிசுரன் என்பவருடனான ஆதிக்கம் ஆகியவற்றை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இக்கோயில் சென்னையில் இருந்து சரியாக 38 கிலோ மீட்டர் தொலைவில் அமையப் பெற்றிருக்கிறது.

Angala Parameshwari: சிலிர்க்க வைக்கும் தெய்வீகம்.. இந்த அங்காள பரமேஸ்வரி கோயில் தெரியுமா?
அங்காள பரமேஸ்வரி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 09 Aug 2025 16:58 PM

பராசக்தியான பார்வதி தேவியின் ஒரு அம்சமாக கருதப்படுபவர் அங்காள பரமேஸ்வரி. இவர் தமிழ்நாட்டில் அங்காளம்மன், அங்காள பரமேஸ்வரி, பூங்காவனத்தம்மன், பெரியாண்டிச்சி, பெரியாயி என பல்வேறு பெயர்களில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அங்காள பரமேஸ்வரி சிவபெருமானை காப்பதற்காக பார்வதி தேவி எடுத்த அவதாரமாக கருதப்படுகிறார். இப்படியான அங்காள பரமேஸ்வரி திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் அருகே கோயில் கொண்டிருக்கிறார். எந்தக் கோயில் ஆனது தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலையில் 2 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்த கோயிலின் சிறப்புகள் பற்றி நாம் காணலாம்.

கோயில் உருவான வரலாறு

வறுமை காரணமாக பொன்மேனி என்ற விவசாயி தனது நிலத்தை மகிசுரன் என்பவனிடம் அடமானம் வைத்தார். அதே நிலத்தில் வேலை பார்த்து தனது குடும்பத்தை காப்பாற்றியும் வந்தார். அசுர குணம் கொண்ட மகிசுரன் ஊர் மக்கள் அனைவரிடமும் இப்படி நிலத்தை அடமானமாக வாங்கிக் கொண்டு அவர்கள் சொத்தை வட்டி மேல் வட்டி போட்டு அபகரித்து வந்தான். இப்படியான நிலையில் பொன்மேனியாலும் கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் கோபம் கொண்டு அவரை மகிசுரன் அடித்தான்.

தொடர்ந்து ஊர் மக்கள் முன்னிலையில் நீ ஊருக்கு வெளியே இருக்கும் பூங்காவனத்தை சிவராத்திரி அன்று ஒரு நாள் இரவில் உழுது விதைத்து நீர் பாய்ச்ச வேண்டும். அதனை பொழுது விடுவதற்குள் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தொலைத்து விடுவேன் என எச்சரித்தான். ஆனால் பூங்காவனம் என்பது தீய சக்திகள் நிறைந்த இடமாகும். அதனால் மகிசுரனிடம் அடிவாங்கி வாழ்வதைவிட ஒரே நாளில் மடிந்து போவது எவ்வளவு மேல் என தீர்மானித்த பொன்மேனி சிவராத்திரி இரவில் அந்த இடத்தை அடைந்தான்.

Also Read: Kamakshi Amman: ஏலக்காய் மாலை வழிபாடு.. திருமண வரன் அருளும் காமாட்சி அம்மன்!

தன் இஷ்ட தெய்வமான கருமாரியை வேண்டிக் கொண்டு நிலத்தை உழ ஆரம்பித்தான். அப்போது வயதான தம்பதிகள் அங்கு உள்ள மரத்தின் கீழ் அமர்ந்தனர். அதில் மூதாட்டிக்கு தண்ணீர் தாகம் எடுத்த நிலையில் அவரே நிலை கண்டு வருத்தப்பட்ட பொன்மேனி நேராக தண்ணீர் எடுக்க சென்றான். திரும்பி வந்து பார்த்தபோது மூதாட்டியை காணவில்லை. அவன் அதிர்ச்சியுடன் முதியவர் இருந்த பக்கம் திரும்பிய போது அங்கு அவரும் இல்லை.

பின்னர் மீண்டும் பொன்மேனி உழும் வேலையை தொடங்கினான். அப்போது ஓரிடத்தில் கலப்பை மீது ஏதோ பட்டு ரத்தம் வெளிப்பட்டது. இதனைக் கண்டு பொன்மேனி மயங்கி விட்டான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. அதில் நான் அங்காள பரமேஸ்வரி சிவனுடன் முதியவள் வடிவத்தில் வந்தேன். இங்கு மண் கூற்றாக மாறிவிட்டேன். அதனால் பயப்பட வேண்டாம்.  ஏர்முனை என்னை குத்தியதால் ரத்தம் வெளிப்பட்டது.

வறுமையில் வாடிய நீ என்னை வேண்டியதால் ஈசனுடன் இங்கு வந்தேன். என்னை உழுது நான் இங்கு இருப்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டிய நீ இனிமேலும் என்னையும் சிவனையும் பூஜிக்கும் பேரு பெருவாய் என கேட்டது.  சிறிது நேரத்தில் அங்கிருந்த மண்ணெல்லாம் விலகி புற்று தெரிந்தது. அந்த அம்மன் இருந்தது பூங்காவனத்தில் தோன்றியதால் இவள் பூங்காவனத்தம்மன் என அழைக்கப்படுகிறாள்.

Also Read: Vekkaliyamman Temple: நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!

கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலில் அம்மன் மல்லாந்த நிலையில் கால் நீட்டி வாய் திறந்து பிரசவ காலத்தில் துடிக்கும் பெண்ணை போல் காட்சி அளிக்கிறாள். அம்மனுக்கு பின்புறம் கருவறைக்குள் விநாயகர் மற்றும் தாண்டவராயன் என்ற பெயரில் நடராஜர், அங்காள பரமேஸ்வரி ஆகியோர் உள்ளனர். எதிரே நந்தி வாகனம் உள்ளது. சுற்று பிரகாரத்தில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள மண்புற்று, விநாயகர், நாகதேவதை, கருமாரி ஆகியோர் உள்ளனர்.

வேம்பு மரமும் அங்கு உள்ளது. குழந்தை பாக்கியம், திருமண தடை போன்ற பிரச்சனை இருப்பவர்கள் கோயிலின் வெளியில் உள்ள மண் புற்று அருகே இருக்கும் வேப்ப மரத்தில் தங்களது புடவை முந்தானையிலிருந்து சிறிய பகுதியைக் கிழித்து கட்டி விடுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவுடன் அம்மனுக்கு பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

கோயில் முழுவதும் மஞ்சள் மற்றும் குங்கும வாசனை இருப்பதால் உள்ளே நுழைந்த தன்மை உடலில் ஒரு சிலிர்ப்பு இறை பக்தியும் தானாகவே ஏற்பட்டுவிடும். இந்த கோயிலில் சிவராத்திரி, மாசி மகம் அன்று மயான கொள்ளை, ஆடி வெள்ளி மற்றும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் சிறப்பு பூஜை அன்று நடைபெறும்.

வாய்ப்பு இருப்பவர்கள் மீறி ஒருவரை சென்று வாருங்கள். சென்னையில் இருந்து சரியாக 38 கிலோமீட்டர் தொலைவிலும், புட்லூர் ரயில் நிலையம் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் அமைந்துள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)