திருமண வரம் அருளும் தீப்பாய்ச்சி அம்மன்.. கோயில் எங்கே இருக்கு தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள தீப்பாச்சியம்மன் கோயில், அக்கம்மாள் என்ற பக்தியுள்ள பெண்ணின் தியாகக் கதையுடன் தொடர்புடையது. தன் கணவர் இறந்த பின்னர், அவருடன் உடன்கட்டை ஏறிய அக்கம்மாளின் பக்தியும், தோழி லட்சுமியின் உடன்பாடுமே கோயில் நிர்மாணத்திற்கு அடிப்படையாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.

பொதுவாக பெண் தெய்வங்கள் இறைவழிபாட்டில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. நம்மை சுற்றி, நமக்காக, இந்த சமூகத்திற்காக உயிர் நீத்த பலரையும் நாம் தெய்வமாக வணங்கி வருகின்றோம். உதாரணமாக கண்ணகியை சொல்லலாம். கற்புக்கரசி என அழைக்கப்படும் கண்ணகி அடிப்படையில் தெய்வம் கிடையாது. அவள் ஒரு மனித பிறப்பாகவே இந்த பூமியில் அவதரித்து வாழ்ந்து மறைந்து இன்று தெய்வமாக திகழ்கிறாள். அதேபோல் ஒவ்வொரு பெண் தெய்வத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் அமைந்திருக்கும் அருள்மிகு தீப்பாய்ச்சி அம்மன் திருக்கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்தக் கோயில் சாலை ஓரத்தில் பெரிதும் கவனிக்கப்படாமல் இருந்தாலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணி கொண்ட தலமாக அமைந்துள்ளது. இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.
கோயிலின் வரலாறு
கற்புக்கரசி கண்ணகியை போல் இந்த உலகில் உயிர் நீத்த பெண்கள் ஏராளமானோர் உண்டு. முன்பே சொன்னது போல அவர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் தமிழர்களிடையே இருந்து வருகிறது. அப்படியான ஒரு கண்ணகியாக பார்க்கப்படுகிறாள் இந்த தீப்பாச்சியம்மன். எட்டயபுரம் பகுதியில் அக்கம்மாள் என்ற பெண் வசித்து வந்த நிலையில், அவள் சிறுவயதிலேயே அதிக தெய்வ பக்தி உடையவளாக திகழ்ந்தாள்.
Also Read: குழந்தை வரம்.. பக்தர்களின் நம்பிக்கையாக திகழும் சின்ன மாரியம்மன் கோயில்!
அவளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்த நிலையில் தன் கணவர் மீது உயிரையே வைத்திருந்தாள். இருவருக்குள்ளும் சொல்ல முடியாத அளவுக்கு அன்பு அதிகமாக இருந்தது. ஒரு நாள் அக்கம்மாள் தனது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அருகில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தவர்களிடம் தனக்கு இப்போது ஒரு செய்தி வரும் என கூறினார். உடன் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால் அவள் சொல்வதை பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.
அந்த நேரத்தில் சில உறவினர்கள் அங்கு வந்து அக்கம்மாளை வீட்டிற்கு அழைத்தனர். ஏன் எதற்கு என காரணம் கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் உடன் உடனே வரும்படி கட்டாயப்படுத்தினர். ஆனால் அக்கம்மாள் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த என் கணவர் இறந்துவிட்டார். அதற்காகத்தானே அழைக்கிறீர்கள் என கூற உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் பின்னர் உறவினர்களுடன் ஊருக்கு சென்ற அக்கம்மாள் தன் கணவர் உடலை பார்த்து கண்ணீர் விடவில்லை. இதனால் நீ என்ன கல்லாய் மாறி விட்டாயா? என சுற்றி இருந்தவர்கள் கேட்டனர். நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. எங்களது ஆன்மா ஒன்றோடு ஒன்று கலந்தது. உடல் தான் மடிந்திருக்கிறது என விளக்கம் அளித்தாள். மேலும் நான் அவரோடு ஒன்றாக கலக்கப்போகிறேன் என கூற சுற்றி இருந்தவர்கள் புரியாமல் விழித்தனர்.
Also Read: திருமண தடையை நீக்கும் ஆடி செவ்வாய் ஔவையார் விரதம்.. இருப்பது எப்படி?
அதாவது உடன்கட்டை ஏறப்போகிறேன் என அக்கம்மாள் விளக்கம் அளித்தாள். ஆனால் இதற்கு அவரது குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இந்த செய்தி எட்டயபுரம் மன்னருக்கு சென்றது. அவரும் அக்கமாளிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தும் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தாள். தனது கணவரின் உடலுக்கு தாமிரபரணி நதிக்கரையில் எரியூட்ட அக்கம்மாள் விரும்பினாள். பின்னர் தாமிரபரணியில் நீராடி தீயில் பாய்ந்து உயிரை விட்டாள்.
அக்கமாளுடன் இளவயது முதல் பழகிய தோல்வி லட்சுமியும் பிரிவை தாங்க முடியாமல் அதே தீயில் பாய்ந்தாள். மக்கள் அவளது பத்தினி தன்மையை உணர்ந்து அந்த இடத்தில் கோயில் கட்டினர். தீயில் பாய்ந்தவள் என்பதால் தீப்பாய்ந்த அம்பாள் என அழைக்கப்பட்டு காலப்போக்கில் தீப்பாச்சியம்மன் என பெயர் மருவியதாக சொல்லப்படுகிறது.
கோயிலின் சிறப்புகள்
இந்தக் கோயிலில் தீப்பாய்ச்சி அம்பாளுடன் அவளது கணவனும் இருக்கிறார். அதேபோல் தோழி லட்சுமி அம்பாளும் கணவன் குழந்தையுடன் காட்சி கொடுக்கின்றனர். தீப்பாய்ச்சி அம்மனை வழங்குபவர்கள் சிவராத்திரி தினத்திலும், லட்சுமி அம்பாளை வணங்குபவர்கள் பங்குனி உத்திரத்திலும் தனித்தனியே விழா கொண்டாடுகின்றனர். முன் மண்டபத்தில் விநாயகர் இருக்கும் நிலையில் இல்லற வாழ்க்கை மற்றும் திருமண தடை ஆகியவற்றில் பிரச்சனை இருப்பவர்கள் இந்த அம்பிகையை வழிபட்டு பலன் பெறுகிறார்கள். ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய் மற்றும் கடைசி வெள்ளிக்கிழமையில் இந்த அம்பாளை வழிபடுவது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. வாய்ப்பிருந்தால் ஒருமுறை நேரில் சென்று வழிபட்டு பலன்களைப் பெறுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள செய்திகள் இடம்பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை)