கண் தொடர்பான பிரச்னையை தீர்க்கும் கண்ணுடைய நாயகி அம்மன்!
ஆடி மாதத்தில் சிறப்பு வாய்ந்த சிவகங்கை நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலின் சிறப்புகள் பற்றி நாம் காணலாம். சுயம்பு மூர்த்தியாகக் காட்சியளிக்கும் அம்மன், பல்வேறு பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதிலும் புகழ்பெற்றவர். ஆன்மிக சிறப்பு வாய்ந்த இந்த ஆடி மாதத்தில் இந்த கோயிலில் வழிபட்டால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

பொதுவாக ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் பெண் தெய்வங்களின் சக்தியை மிகவும் வீரியமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆடி மாதம் எந்தவித சுப காரியங்களும் செய்யக்கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த காலம் முழுக்க இறையருள் எண்ணம் மனதிற்குள் நிறைந்து இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இப்படியாக ஆடி மாதத்தில் ஊர் முழுக்க இருக்கும் அம்மன் கோயில்களில் பல்வேறு விதமான கொண்டாட்டங்கள் நடைபெறும். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் அமைந்திருக்கும் கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் சிறப்புகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
கண்ணுடைய நாயகி அம்மன்
இந்தக் கோயில் ஆனது தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். கோயிலில் காலை 7.30 மணி மணிக்கு முதல் கால பூஜை, 8.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நண்பகல் 12 30 மணிக்கு உச்சிக்கால பூஜை நடைபெறும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாயரக்ஷ பூஜை நடைபெறும். தொடர்ந்து 8:30 மணிக்கு அடுத்த ஜாம பூஜை நடைபெறும். அதேபோல் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.
Also Read: Aadi Tuesday: பலன்களை அள்ளித்தரும் ஆடி செவ்வாய்.. விரதம் இருப்பது எப்படி?
கோயில் உருவான வரலாறு
நாட்டரசன் கோட்டையின் தெற்கு பக்கமாக இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அப்போது அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டுப்பகுதி இருந்தது. அங்கு சில கிராமங்கள் இருந்த நிலையில் தினமும் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்காக நாட்டரசன் கோட்டைக்கு வருவது வழக்கம். சரியாக பிரண்டகுளம் கிராம எல்லையில் வரும்போது விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் போன்ற பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடத்தில் தட்டி கீழே கொட்டி தொடர்ந்து வீணாகி கொண்டே இருந்தது.
அவற்றை விற்க முடியாமல் கிராம மக்கள் வேதனையுடன் திரும்புவது வாடிக்கையாக இருந்த நிலையில், பல நாட்களாக இதற்கு காரணம் தெரியாமல் புலம்பி போயினர். இதன் பின்னர் பிரச்சினையை சிவகங்கை மன்னரிடம் கொண்டு செல்ல முடிவு செய்தனர். மக்கள் நாளை போய் பேசலாம் என நினைத்த நிலையில் முதல் நாள் மன்னருக்கு கனவில் அம்பாள் காட்சி கொடுத்தாள்.
நான் பிரண்டகுளம் கிராமத்தில் பலாமரம் பக்கத்தில் பூமிக்கடியில் இருக்கிறேன் என கோடிட்டு காட்டினாள். மறுநாள் மக்கள் வந்து விஷயத்தை கூற மன்னரும் மக்களுடன் சென்று குறிப்பிட்ட இடத்தில் தரையை தோண்டி பார்த்தார். அங்கு அம்பாள் சிலை சுயம்பு வடிவத்தில் காட்சியளித்தாள். அப்போது எதிர்பாராத விதமாக கடப்பாரையை நுனிப்பட்டு தரையை தோண்டியவன் பார்வை பறிபோய் ரத்தம் கொட்டியது . ஆனால் தொடர்ந்து தோண்டும் பணி நடைபெற்றது.
அம்பாள் சிலை மேலே வந்ததும் பாதிக்கப்பட்டவனின் கண் பிரச்சனை சரியானது. மீண்டும் அவருக்கு கண் கொடுத்த காரணத்தால் கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள் என போற்றப்பட்டு தற்போது கண்ணுடைய நாயகி அம்மன் என அழைக்கப்படுகிறாள்.
Also Read: திருத்தணி முருகன் கோயில் வழிபாடு.. எவ்வளவு பலன்கள் தெரியுமா?
கோயிலின் சிறப்புகள்
இந்தக் கோயிலில் மன்னர் பரம்பரையால் மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டது. இதன் பின்னர் அம்மனுக்கு அலங்காரம் மண்டபம், அபூர்வமான சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய ராஜகோபுரம் என ஆகியவை பிற்காலத்தில் கட்டப்பட்டது. கோயிலுக்கு எதிரே அழகிய தெப்பக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மனுக்கு விழா நாட்களில் வீதி உலா வர மரத்திலான வாகனங்களும், வெள்ளிக் குதிரை, வெள்ளி ரதம் ஆகியவையும் இருக்கிறது.
இந்த கோயிலில் திருமண தடை, கல்வியில் சிறந்து விளங்கவும், கண் தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகை தந்து பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் ஒரு முறை இந்த கோயிலுக்கு சென்று பாருங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் கோயில் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)