Kaveri Amman: ஆடிப்பெருக்கு நாள்.. கண்டிப்பாக வழிபட வேண்டிய கோயில் இதுதான்!
Aadiperukku Worship: திருச்சியில் உள்ள காவேரி அம்மன் கோயில், ஆடிப்பெருக்கின் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் இருந்து கரை ஒதுங்கிய அம்மன் சிலை இக்கோயிலில் வீற்றிருக்கிறது. ஆடிப்பெருக்கு நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். நீர்வளம், குடும்ப நலன், விவசாயம் போன்றவற்றிற்காக மக்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

ஆடி மாதத்தில் ஏராளமான ஆன்மீக நிகழ்வுகள் இருப்பதால்தான் இந்த மாதத்தில் பிற சுப நிகழ்வுகள் நடைபெறாமல் தள்ளி வைக்கப்படுவதாக ஐதீகம் உள்ளது. இந்த மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என வாரத்தின் மூன்று நாட்களும், மிகவும் விசேஷ விதமாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அமாவாசை, பௌர்ணமி, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை என பிற விசேஷ தினங்களும் இந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதத்தின் 18 ஆம் நாள் ஆடிப்பெருக்கு என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. இந்நாள் நீர்நிலைகளுக்கு நன்றி சொல்லும் நாளாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் சுமங்கலி பெண்கள் தங்கள் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க இந்த நாளில் தாலி கயிறு மாற்றிக்கொள்ளும் வழக்கமும் உள்ளது. இப்படியான நிலையில் ஆடிப்பெருக்கு நாளில் நாம் வழிபட வேண்டிய ஒரு கோயில் பற்றி இன்று காணலாம்.
என்னதான் தமிழ்நாடு முழுக்க ஆடிப்பெருக்கு மிகவும் விசேஷமான திருநாளாக பார்க்கப்பட்டாலும், ஒரு படி மேல் காவிரி ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களுக்கு இந்நாள் புனிதமான நாளாக இருக்கிறது. ஆற்றில் புது வெள்ளம் பெருக்கெடுத்து வருவது ஆடிப்பெருக்காக கணக்கிடப்படுகிறது. 2025ம் ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
திருச்சி காவேரி அம்மன் கோயில்
இந்தக் கோயிலானது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு வடக்கு பக்கமாக அமைந்துள்ளது. காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 5 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக இந்த காவேரி அம்மன் கோயில் திறந்திருக்கும்.
Also Read:தொழில் வளர்ச்சியில் தடையா? – வழிபட வேண்டிய முத்துமாரியம்மன் கோயில்!
கோயிலின் வரலாறு
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காவிரி நதியானது பரந்து விரிந்து ஓடிய நிலையில் மழைக்காலத்தில் அவ்வப்போது ஊருக்குள் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்துவதும் உண்டு. அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கரிகாலச் சோழன் வாய்க்கால் வெட்டி சீர் செய்தான். அந்த காலகட்டத்தில் காவிரி நதியில் இருந்து வெள்ளத்தில் ஓர் அம்மன் சிலையானது கரை ஒதுங்கியது. அதனை மக்கள் எடுத்து கரையோரமாக வைத்து வழிபட்டு வந்தார்கள்.
காவிரி நதியில் இருந்து இந்த சிலை கிடைத்ததால் இந்த அம்மனுக்கு காவேரி அம்மன் என பெயர் சூட்டினார்கள். காலப்போக்கில் சுற்றியுள்ள இடங்கள் கட்டடங்களுடன் மாற இன்று திருச்சியின் மிக முக்கியமான பகுதியில் கோயில் கொண்டு காவேரி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
Also Read: அனைத்து வளங்களையும் அருளும் தையல்நாயகி அம்மன்.. இந்த கோயில் தெரியுமா?
கோயிலின் சிறப்புகள்
காவேரி அம்மனின் தனி சிறப்பாக நீர் வளம் பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதியில் கோடைகாலத்தில் நீர்வளம் குறைந்து விட்டால் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு நல்ல மழை பெய்ய வேண்டும் என வேண்டப்படுகிறது. மேலும் திருச்சியில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டில் கிணறு அல்லது குடிநீர் தொடர்பான விஷயங்கள் செய்வதற்கு முன் காவேரி அம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். விவசாயிகள் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்ட பிறகு தங்கள் நிலங்களில் கிணறுகளை தோண்டும் பணியை தொடங்குவதாக சொல்லப்படுகிறது.
ஆண்டுதோறும் காவிரி ஆறு ஓடும் கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் அந்த நாளில் இந்த கோயிலில் காலை 7 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இரண்டு கால விசேஷ பூஜைகள் நடைபெறும்.
இக்கோயிலில் அம்மன் முன்பு நந்தி அமைந்திருக்கிறது. இது அதிகார நந்தி என அழைக்கப்படும் நிலையில், அம்மன் கோயில்களில் நந்தி இருப்பது அபூர்வமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நந்தி நேராக அம்மனை பார்க்காமல் சற்று வலது புறம் திரும்பியது போல காட்சி கொடுப்பது சிறப்பான ஒன்றாகும்.
ஆடி மாதம் 18 ஆம் நாள் இந்த கோயிலில் சென்று வழிபாடு செய்தால் வாழ்க்கையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளும் வெள்ளம் போல் அடித்து செல்லப்பட்டு புதுநீராய் வாழ்க்கை வசப்படும் என நம்பப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)