தொழில் வளர்ச்சியில் தடையா? – வழிபட வேண்டிய முத்துமாரியம்மன் கோயில்!
கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேட்டில் தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. 1984ல் நிறுவப்பட்ட இக்கோயில், வற்றிய கிணற்றில் நீர் பெருக்கெடுத்ததன் மூலம் புகழ் பெற்றது. திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்ட பிரார்த்தனைகளுக்கு புகழ்பெற்ற இக்கோயிலில் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. அதேபோல் ஆன்மீகத்தை எடுத்துக் கொண்டாலும் பெண் தெய்வங்களின் பங்கு அளப்பரியது. அதனால் தான் நாம் பெண் தெய்வங்களை மகத்தான அளவில் கொண்டாடுகிறோம். அவர்களுக்கு என திருவிழாக்கள், விசேஷ தினங்கள் என நடத்துகிறோம். இப்படியான நிலையில் ஆன்மீகத்தில் ஆடி மாதம் பெண் தெய்வங்களுக்கான மாதமாக பார்க்கப்படுகிறது. மற்ற காலங்களை விட இந்த மாதத்தில் அவர்களின் சக்தி பன்மடங்கு அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் பெரிதும் அறியப்படாத அம்மன் கோயில்கள் பற்றி நாம் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம்.
தண்ணீர்பந்தல் முத்து மாரியம்மன் கோயில்
அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்தக் கோயில் புராண பெயர் தண்ணீர் பந்தல் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலானது விளாங்குறிச்சி ரோடு தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த முத்து மாரியம்மன் கோயில் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
தண்ணீர் பந்தல் பகுதியில் தோன்றிய முதல் கோயில் என்ற சிறப்பை இந்த முத்து மாரியம்மன் பெற்றிருப்பதால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் இந்த கோயிலுக்கு வருகை தந்து தினசரி வழிபட்டு செல்கின்றனர்.
கோயில் உருவான வரலாறு
பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரி உருவானபோது அதனையொட்டி பின்புறம் இருந்த வனப்பகுதியில் புதிதாக குடியிருப்புகள் வரத் தொடங்கியது. அன்றைய விளாங்குறிச்சி பகுதியில் இயங்கி வந்த மில் ஒன்றுக்கு பீளமேடு பகுதியில் இருந்து செல்லும் தொழிலாளர்களுக்கு ஒருவர் தண்ணீர் பந்தல் அமைத்து, ஓய்வு மண்டபமும் கட்டிக் கொடுத்தார் அப்படியான இடமே பிற்காலத்தில் தண்ணீர் பந்தல் என்ற பெயருடன் அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே 1972 ஆம் ஆண்டு விளாங்குறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் இருந்த சிறிய மேடை ஒன்றில் இளைஞர்கள் கோயில் அமைத்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து சுயம்புவாக எடுத்து வரப்பட்ட அம்மனை வைத்து வழிபட்டனர். அந்த இடம் மற்றொருவருக்கு சொந்தமானதாக இருந்ததால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு பின் அம்மன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
அதன் பிறகு நத்தம் புறம்போக்கு நிலத்தில் வற்றியிருந்த ஒரு கிணற்றின் அருகே 1984 ஆம் ஆண்டு சிறிய மூலவர் மண்டபம் அமைக்கப்பட்டு அம்மன் கோயிலானது கட்டப்பட்டது. இந்த கோயில் அமைந்த பிறகு அந்த வற்றிய கிணற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இது அம்மனின் சக்தியால் தான் நிகழ்ந்தது என்ற புகழ் ஊரெங்கும் பரவ இ கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இப்படியான நிலையில் அன்றைய விளாங்குறிச்சி பஞ்சாயத்து நிர்வாகம் இந்த கிணற்றிலிருந்து பொதுமக்கள் நீர் எடுத்து செல்ல அனுமதி அளித்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு பெரிதும் உதவியது. இப்படியாக இந்த முத்து மாரியம்மன் கோயில் உருவானது.
Also Read: கோவையின் காவல் தெய்வம்.. ‘கோனியம்மன்’ கோயில் பற்றிய சிறப்புகள்!
கோயிலின் சிறப்புகள்
தண்ணீர் பந்தல் பகுதியில் வசித்த மக்களின் தாகம் தணித்து அம்மன் என்ற பெருமை இந்த முத்து மாரியம்மனுக்கு உள்ளது. இக்கோயிலில் அவள் வடக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். தொடர்ந்து கன்னிமூல கணபதி, பாலமுருகன், ஆதி விநாயகர், தட்சிணாமூர்த்தி, சித்தி விநாயகர் எலி வாகனம், சிம்மவாகனம், மயில்வாகனம், நவக்கிரக சன்னதி, பலிபீடம், சக்திவேல் ஆகியவையும் இக்கோயிலில் அமைந்துள்ளது.
பீளமேடு பகுதி தொழிற்சாலைகள் நிறைந்த இடம் என்பதால் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக இங்கு அதிக அளவில் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் திருமண வரன், குழந்தை பாக்கியம், உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இக்கோயிலில் வழிபட்டால் தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
Also Read: மாங்கல்ய பலம் அருளும் மீனாட்சி திருக்கல்யாணம்.. இதன் வரலாறு தெரியுமா?
இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியில் பக்தர்கள் உணவு அளித்து தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். மேலும் அம்மனுக்கு புடவை சாற்றுதல், மற்ற தெய்வங்களுக்கு வஸ்திரம் சாற்றுதல், மாவிளக்கு எடுத்தல் போன்ற வகையிலும் தங்கள் நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துகின்றனர்.
இந்த கோயிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல் ஆடி வெள்ளி, ஒவ்வொரு மாத அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்கள் ஆகியவையும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் நீங்களும் ஒருமுறை இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)