மாங்கல்ய பலம் அருளும் மீனாட்சி திருக்கல்யாணம்.. இதன் வரலாறு தெரியுமா?
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2025 மே 10 அன்று நடைபெற உள்ளது. புராணக் கதையின்படி, மீனாட்சி பார்வதியின் அவதாரமாவார். ராணியான மீனாட்சி சிவனை கைலாயத்தில் போர்க்களத்தில் சந்தித்து மணந்தார். இந்த திருக்கல்யாணம் மாங்கல்ய பலத்திற்கும், திருமண வரனுக்கும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மதுரை என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் திருக்கோயில் (Meenakshi Amman Temple) தான். அந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா (Madurai Chitirai Festival) உலகப்புகழ் பெற்றது. 20 நாட்கள் நடக்கும் இந்த விழாவுக்கு உள்ளூரைச் சார்ந்த மக்கள் வெளியூரில் பணியாற்றினாலும், வசித்து வந்தாலும் குடும்பம் குடும்பமாக மதுரைக்கு படையெடுப்பது வழக்கம். மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும் நிலையில் சித்திரை திருவிழாவில் நடைபெறும் நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒன்று மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஆகும். பொதுவாக வரலாற்றில் இல்லறத்தின் அவசியத்தை உணர்த்தவும், அதனை சிறப்பாக கொண்டு செல்லவும் பல தெய்வங்களின் திருமணக் கதைகள் சொல்லப்பட்டிருக்கும். அப்படியாக மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
புராணத்தின்படி பாண்டிய மன்னன் மலையத்துவ பாண்டியன் மற்றும் காஞ்சனா மாலை ராணியின் மகள்தான் மீனாட்சி ஆவார். நீண்ட காலமாக இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லாத நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து மலையத்துவ பாண்டியன் பிரார்த்தனை செய்தார். அப்போது 3 வயது சிறுமி நெருப்பிலிருந்து வெளிப்பட்டு மன்னனின் மடியில் அமர்ந்தார். உடனே ஒரு அசரீரி ஒலித்தது. இந்த குழந்தை பார்வதியின் அவதாரம் என்றும், சிறுவயதிலேயே சிவன் அவளை மணக்க வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஈசனின் மீது காதல் கொண்ட மீனாட்சி
மலையத்துவ பாண்டியனின் மகளான மீனாட்சி போர்ப்பயிற்சி பெற்றார். தொடர்ந்து தனது தந்தை மறைவுக்குப் பிறகு பாண்டிய சாம்ராஜ்யத்தின் ராணி ஆக முடி சூட்டப்பட்டார். தனது போர் திறமையால் உலகம் முழுவதையும் வென்ற அவர் கடைசியில் கைலாயத்திற்கு சென்றார். அங்கு சிவனை நேருக்கு நேராக எதிர்கொண்ட போது அவர் மீது காதல் கொண்டார். பிறக்கும்போது மூன்று மார்பகத்துடன் பிறந்த மீனாட்சியின் ஒரு மார்பகம் சிவனை சந்தித்ததும் விழுந்தது. இதற்கிடையில் மீனாட்சி பார்வதியின் மறு வடிவம் என்பதை உணர்ந்த சிவன் அவளை மணக்க மதுரைக்கு வருவதாக உறுதியளித்தார்.
அதன்படி மதுரைக்கு மற்ற தெய்வங்கள் மற்றும் முனிவர்களுடன் வந்த சிவன், சுந்தரேஸ்வரராக மீனாட்சி மணந்து சுந்தரபாண்டியன் என்ற பெயரில் பாண்டிய சாம்ராஜ்யத்தை ஆண்டார். இப்படியாக மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்வானது மதுரை சித்திரை திருவிழாவில் 2025 ஆம் ஆண்டு மே 10ம் தேதி நடைபெற உள்ளது மேற்கு ஆடி வீதியில் இருக்கும் பிரம்மாண்ட திருக்கல்யாண மண்டபத்தில் தான் இந்த வைபவம் வெகு விமரிசியாக நடைபெற உள்ளது.
வியாழக்கிழமை காலையில் 8:35 மணி முதல் 8.59 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தம்பதியினர் சமேதமாக இருவரும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள்.
இந்த நாளில் வாய்ப்பிருப்பவர்கள் நேரில் திருக்கல்யாணம் கண்டு தங்களது மாங்கல்ய கயிறை மாற்றுவார்கள். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் இருந்த இடத்திலேயே மாற்றிக் கொள்வார்கள். இதனால் மாங்கல்ய பலம், திருமண வரம் அமைதல் உள்ளிட்டவை சிறப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
(ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)