AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவையின் காவல் தெய்வம்.. ‘கோனியம்மன்’ கோயில் பற்றிய சிறப்புகள்!

கோயம்புத்தூரின் மையத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோனியம்மன் கோயில், கொங்கு மண்டலத்தின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறது. கோவன் ஆட்சிக்காலத்தில் தோன்றிய இந்த கோயில், பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டுள்ளது. தினசரி பூஜைகள், ஆடி மாத ஊஞ்சல் உற்சவம், மாசி மாத திருவிழா என இக்கோயில் புகழ் பெற்றது.

கோவையின் காவல் தெய்வம்.. ‘கோனியம்மன்’ கோயில் பற்றிய சிறப்புகள்!
கோனியம்மன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 28 Jun 2025 13:38 PM IST

தமிழ்நாட்டில் கொங்கு மண்டலமாக அறியப்படும் கோயம்புத்தூரில் ஏராளமான புகழ்பெற்ற வழிபாட்டு தலங்கள் உள்ளது. சிவ ஆலயங்கள் தொடங்கி விநாயகர், முருகன், அம்மன் என பல தெய்வங்களுக்கும் தனித்தனியே கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. அப்படியாக கோயம்புத்தூர் மாநகரத்தின் மையப் பகுதியில் ரயில் நிலையத்திலிருந்து சரியாக ஒரு கிலோமீட்டர் தொலைவில் பெரிய கடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம். இந்த அம்மன் கோயம்பத்தூர் மாவட்டத்தின் காவல் தெய்வமாக அனைவராலும் வழிபட செய்கிறாள். இந்த கோயிலானது தினமும் காலை 6:30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும், மாலையில் 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்த கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. அது மட்டுமல்லாமல் அரசமரம் மற்றும் நாகலிங்க பூ மரம் ஆகியவையும் தல விருட்சமாக அறியப்படுகிறது.

கோயிலின் தல வரலாறு

முன்னொரு காலத்தில் இந்த கோயில் அமைந்துள்ள இடம் மரங்கள் நிறைந்த காடாக உள்ளது. இருளர்களின் தலைவனாக இருந்த கோவன் அந்த இடத்தை சீர்ப்படுத்தி அழகுபெற ஆட்சிப் புரிந்து வந்தான். அப்படியான ஒருநாள் கோவனின் ஆட்சியில் மிகப்பெரிய அளவில் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வாழ வழியில்லாமல் தவித்தனர். அவர்களின் நிலையைக் கண்டு வருத்தப்பட்ட கோபன் மக்கள் வாழ்க்கையில் நன்மைகள் பெற்று பஞ்சம், நோய்கள் என எதுவும் ஏற்படாமல் சிறப்பாக வாழ்ந்திட வனப்பகுதியில் இருந்த சிறு நிலத்தை சீரமைத்தான்.

அங்கு கல் ஒன்றை அமைத்து அதனை அம்மனாக எண்ணி வழிபட்டு வந்தான். இதனைத் தொடர்ந்து கொங்கு நாட்டு மக்கள் செழிப்புடன் வாழ தொடங்கினர். அதன் பின் இருளர் இன மக்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி வழிபடத் தொடங்கினர். கோவையின் வடக்கு பக்கத்தில் இந்த அம்பிகை காவல் தெய்வமாக இருந்து வந்தாள். கோவனின் ஆட்சிக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து இளங்கோசர் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான்.

சேர மன்னர் ஒருவர் படையெடுத்து வந்தபோது அதிலிருந்து தன்னுடைய கொங்கு நாட்டை காப்பதற்காக கோவன்புத்தூரில் மையத்தில் ஒரு கோட்டையையும் மற்றும் மணமேடையையும் கட்டி அதில் அம்மனை வைத்து வழிபட்டான். அவளே கோனியம்மனாக இன்றளவும் அருள்பாலித்து வருகிறாள். தன்னுடைய எட்டு கரங்களில் வால், உடுக்கை, சூலம், கபாலம், அக்னி, சங்கம், சக்கரம், மணி ஆகியவை ஏந்தி காட்சி கொடுக்கும் இந்த கோனியம்மன் சிவனைப் போல இடது  காதில் குண்டலம் அணிந்திருக்கிறாள்.

அம்பிகை சன்னதிக்கு நேர் எதிர் திசையில் சிம்ம வாகனம் உள்ளது சிறப்பான ஒன்றாகும். முன் மண்டபத்தில் சாந்த விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், தம்பதி சமேதராக நவகிரகங்கள் ஆகியவை அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் 

கோவை மாவட்டத்தின் மூன்று கண்கள் என சொல்லப்படும் கோயில்களில் ஒன்றாக கோனியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் ஆடி மாதத்தில் 30 நாட்களும் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். இப்பகுதி மக்கள் தாங்கள் எந்தவிதமான சுப காரியங்கள் செய்தாலும் கோனியம்மனை வணங்கி உத்தரவு கேட்ட பின்னர் தான் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மாசி மாத திருவிழாவின் போது சிவன் அம்பிகையை திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு நடைபெறும்.

அப்போது குண்டத்தில் எழும் அக்னியை சிவனாக நினைத்து பாவித்து பூஜை செய்வார்கள். பூஜையில் பயன்படுத்தப்படும் தீர்த்த கலசத்தின் மேலே மாங்கல்யத்தை வைத்து அதனை அம்பிகைக்கு அணிவிப்பார்கள். உடல் நலக்குறைவுகள் சரியாக, மாங்கல்ய பலம் அதிகரிக்க , திருமண தடை நீங்க இந்த கோயிலில் மாவிளக்கு எடுத்து பொங்கல் விட்டு மக்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இந்த கோயிலில் தம்பதியினர் ஒற்றுமைக்காகவும், ராகு ,கேது, சனி மற்றும் குரு பெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டியவர்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர். கோனியம்மன் கோயிலில் மாசி மாதத்தில் 14 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதனை தவிர்த்து அமாவாசை,பௌர்ணமி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல் ஆகிய நாட்களில் விசேஷ வழிபாடு நடைபெறும். இந்த கோயிலுக்கு வாய்ப்பு இருந்தால் சென்று வாருங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வமாக விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us