AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Saptha Kannigal: வேண்டிய வரம் தரும் சப்த கன்னிகள் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?

இறை வழிபாட்டில் சப்த கன்னிகள் வழிபாடு என்பது மிக முக்கியமானது. பல்வேறு கோயில்களிலும் தங்களுக்கென தனி சன்னதி கொண்டு எழுந்தருளியுள்ள சப்த கன்னிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் தனிக்கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றனர். அந்த கோயிலின் வரலாறு, சிறப்பு உள்ளிட்ட தகவல்களை நாம் காணலாம்.

Saptha Kannigal: வேண்டிய வரம் தரும் சப்த கன்னிகள் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
சப்த கன்னியர்கள் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 24 Jun 2025 12:40 PM IST

இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் ஏராளமான வழிபாட்டு தெய்வங்கள் உள்ளது. ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறான பின்னணியும், அவதார வரலாறும் சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் பெண் தெய்வமான அன்னை பராசக்தியின் ஏழு அம்சமாக கருதப்படுபவை “சப்த கன்னியர்கள்” என அழைக்கப்படுகின்றனர். பிராம்ஹி, கௌமாரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, இந்திராணி, வராஹி, சாமுண்டி ஆகிய 7 பேரும் சப்த கன்னியர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்த சப்த கன்னியர்கள் வழிபாடு என்பது தமிழ்நாட்டைப் பொருத்தவரை கிராமப்புற வழிபாட்டில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. பெரும்பாலான கோயில்களில் சப்த கன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சப்த கன்னியர் கோயில்

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெட்டைக் குளம் என்ற பகுதியில் உள்ள சப்த கன்னியர் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்தக் கோயில் ஆனது காலை 5 மணி முதல் காலை 10 மணி வரையும், மாலையில் நான்கு மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியாக உள்ள சாத்தான்குளம் என்ற ஊரில் தான் இந்த கோயில் ஆனது உள்ளது. இந்தக் கோயில் உருவான வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

கோயில் உருவான வரலாறு

இயற்கை எழில் கொஞ்சும் பெட்டைக் குளம் கிராமத்தில் கன்னி பெண்கள் ஏழு பேர் அங்கு இருக்கும் ஊரணியில் நீராடச் சென்றுள்ளனர். அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சூரியன், விட்டு விட்டு பெய்த சாரல் மழை, குளிர் வீசிய தென்றல் காற்று என ரம்யமான அந்த சூழல் கன்னிப் பெண்களை நீராடி விட்டு விரைவில் கரையேர விடாமல் தடுத்துள்ளது ஏழு பேரும் நேரம் போவதே தெரியாமல் குளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பக்கமாக ஆடு மேய்க்கும் இளைஞன் ஒருவன் வந்துள்ளான். அவன் விளையாட்டாக கன்னிப்பெண்கள் ஆடைகள் மொத்தமும் கரையில் இருந்த நிலையில் அதனை மூட்டையாக கட்டிக் கொண்டு எடுத்துச் செல்ல முயன்றான்.

இதனைப் பார்த்த அந்தப் பெண்கள் தங்களது ஆடைகளை கொடுத்து விடும்படி கெஞ்சி கேட்டனர் ஆனால் எவ்வளவு சொல்லியும் அந்த இளைஞன் கேட்காமல் அங்கிருந்து சென்று விட்டான் இதனால் கலங்கி போன பெண்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்தனர் பின்னர் அனைவரும் ஒரு முடிவுக்கு வந்து ஒவ்வொருவராக ஊரணிக்குள் மூழ்கினர் அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை அந்த ஊரணி நீரோடின் வழியே அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் சென்ற அவர்கள் சப்த கன்னியர்கள் என்ற பெயரில் தெய்வமாக எழுந்தருளியதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே குளிக்கப் போன பெண்களை காணாமல் பெற்றோர்கள் தேடிய நிலையில் அந்த ஊரின் பூசாரிக்கு கனவில் காட்சி கொடுத்து தாங்கள் வனப்பகுதியில் தெய்வமாக எழுந்தருளியுள்ளதாக தெரிவித்தனர். மேலும் எங்களை வழிபட்டால் நாங்கள் காவலாய் இருந்து இந்த ஊரை இன்னும் வளமாக்குவோம் என உறுதியளித்தனர். ஏழு பேர் நீரில் மூழ்கியதால் இந்த கோயில் அமைந்துள்ள ஊர் எழுவரைமுக்கி என அழைக்கப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலின் மூலவராக சப்த கன்னியர்கள் அருள்பாலிப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இதே கோயிலில் அய்யனார், முத்து பார்வதி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களும் காட்சி கொடுக்கின்றனர். இந்த ஒன்பது தெய்வங்களையும் நாம் வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் இங்கிருக்கும் சப்த கன்னியர் கோயிலுக்கு வருகை தந்து சர்க்கரை பொங்கல் வைத்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

மேலும் தொழிலில் மிகச்சிறந்த முன்னேற்றம் ஏற்படவும், குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கவும் சப்த கன்னியரை வழிபட்டால் பலன்களை பெறலாம் என சொல்லப்படுகிறது. சப்த கன்னியர்கள் பிரம்மன், சிவன், முருகன், விஷ்ணு, இந்திரன், காளி, மகேசன் ஆகிய தெய்வங்களின் பெண் அம்சமாக போற்றப்படுகிறார்கள். வாய்ப்பு கிடைப்பவர்கள் ஒரு முறை நேரில் சென்று வாருங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கோயில் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் இல்லை)

Follow Us