Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Varadharaja Perumal Temple: தமிழகத்தின் திருப்பதி.. இந்த கோயில் பற்றி தெரியுமா?

அர்ஜுனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வரதராஜப் பெருமாள் கோயில், தமிழ்நாட்டின் திருப்பதி என அழைக்கப்படுகிறது. பஞ்சபாண்டவர்களின் வனவாசத்துடன் தொடர்புடைய இந்தக் கோயில், 7 என்ற எண்ணுடன் தொடர்புடைய சிறப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் கோயிலின் வரலாறு, சிறப்புகள், தரிசன நேரம் ஆகியவைப் பற்றிக் காணலாம்.

Varadharaja Perumal Temple: தமிழகத்தின் திருப்பதி.. இந்த கோயில் பற்றி தெரியுமா?
வரதராஜ பெருமாள் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 21 Jun 2025 11:54 AM

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் கிடைக்கும் என சொல்வார்கள். ஏழுமலையானாகிய பெருமாள் கோயில் கொண்டிருக்கும் அந்த திருப்பதிக்கு செல்லும் வாய்ப்பு அனைவருக்கும் எளிதில் கிடைக்காது. இப்படியான நிலையில் ஒவ்வொரு ஊரிலும் திருப்பதி பெருமாள் பல்வேறு பெயர்களில் அவதரித்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டின் திருப்பதி என அழைக்கப்படும் ஒரு பெருமாள் கோயிலை பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்தக் கோயிலானது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது. இக்கோயிலில் மூலவராக வரதராஜ பெருமாளும், தாயாராக பெருந்தேவி மகாலட்சுமியும் அருள்பாளித்து வருகின்றனர். இந்த பெருமாள் கோயில் தினமும் காலை 5 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இக்கோயில் உருவான வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

கோயில் உருவான வரலாறு

பஞ்சபாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் செல்கின்றனர். அப்போது பல இடங்களுக்கு சென்ற அவர்கள் சூளகிரி மலைப்பகுதிக்கு வந்துள்ளனர். இதனிடையே பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் பெருமாளை வழிபடுவதற்காக அங்கிருந்த மலையிலிருந்து ஒரு கல் ஒன்றை எடுத்து கோயில் அமைத்து வழிபாடு செய்தான். அப்படியாக அர்ஜுனன் பிரதிஷ்டை செய்த பெருமாள் தமிழக திருப்பதி என அழைக்கப்படும் அந்த கோயிலில் வரதராஜ பெருமாளாக காட்சி கொடுத்து வருகிறார். அர்ஜுனன் பிரதிஷ்டை செய்ததற்கு குறியீடாக இன்றும் சூளகிரி மலையில் 5 குண்டு எனப்படும் ஐந்து குன்றுகள் உள்ளது. இதனை தூரத்திலிருந்து பார்க்கும் போது சூலம் போன்ற அமைப்பில் இருந்ததால் இந்த இடத்திற்கு சூளகிரி என பெயர் வந்தது என்று சொல்லப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள்

இந்தப் பெருமாள் கோயிலில் எல்லாமே 7 என்ற எண்ணில் அமைந்துள்ளது. மேற்கு பார்த்து காட்சி கொடுக்கும் இந்த பெருமாளின் பாதத்தில் சூரியன் அஸ்தமனம் ஆகும்போது அதன் கதிர்கள் பட்டு அவரிடம் ஆசி வாங்குவதாக சொல்லப்படுகிறது. இந்த மலையின் உயரம் 3000 அடி என்ற நிலையில் அதன் ஆரம்பத்திலேயே கோயில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. இந்தப் பெருமாளை நாம் தரிசித்தால் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் வளரும் என்பது ஐதீகமாக உள்ளது.

அதே சமயம் பெருமாளை பார்த்தபடி கிழக்கு திசை நோக்கி இருக்கும் பெருந்தேவி மகாலட்சுமி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார் பெருமானின் காவலனாக மகா மண்டபத்தின் வலது பக்கத்தில் அனுமன் காட்சி கொடுக்கிறார். அர்ஜுனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த பெருமாள் கோயிலின் கருவறையை சோழ மன்னர்கள் கட்டியதாகவும், பிற்காலத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயரால் முன் மண்டபம் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பாளையக்காரர்கள் கர்நாடகாவை ஆண்ட ஹோய்சாளர்கள், விஜயநகர சிற்றரசர்கள் என படிப்படியாக இக்கோயில் விரிவடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் பெருமாளுக்கு உரிய அத்தனை விஷேச தினங்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேலும் கிருஷ்ணகிரி பகுதியில் மிகப்பெரிய கருடாழ்வார் வாகனம் இந்த கோயிலில் தான் அமைந்துள்ளது. அதனால் திருவிழா காலங்களில் இங்கு கருட சேவை மிகவும்  கோலாகலமாக நடைபெறும். வாய்ப்பிருப்பவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)