AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் ஒரு திருவண்ணாமலை.. இந்த அண்ணாமலையார் கோயில் தெரியுமா?

சென்னை யானைக்கவுனி அண்ணாமலையார் கோயில், 400 ஆண்டுகள் பழமையானது என சொல்லப்படுகிறது. இக்கோயில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் தீவிர பக்தரால் நிறுவப்பட்டது. இங்கு காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல தெய்வங்கள் காட்சியளிக்கின்றனர்.

சென்னையில் ஒரு திருவண்ணாமலை.. இந்த அண்ணாமலையார் கோயில் தெரியுமா?
அண்ணாமலையார் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 14 Jun 2025 12:13 PM IST

பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாக அறியப்படும் திருவண்ணாமலை (Tiruvannamalai) அண்ணாமலையார் கோயிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் தினம்தோறும் வந்து வழிபாடு செய்கிறார்கள். அதே சமயம் ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் கோயிலுக்குப் பின்புறம் இருக்கும் தீப மலையில் பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். மிகவும் சக்தி வாய்ந்த கடவுளான சிவன் (Lord Shiva) அருணாச்சலேஸ்வரர் என்னும் பெயரில் திருவண்ணாமலையில் கோயில் கொண்டிருக்கிறார். அதேசமயம் சென்னையிலும் ஒரு அண்ணாமலையார் கோயில் இருப்பது பலருக்கும் தெரியாது. இந்தக் கோயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருக்கும் யானை கவுனியில் உள்ள பள்ளியப்பன் தெருவில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக அண்ணாமலையாரும், தாயாராக உண்ணாமலை அம்மனும் காட்சி கொடுக்கின்றனர். இக்கோயில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும் மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்த அண்ணாமலையார் கோயில் சிறப்புகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

கோயில் உருவான வரலாறு

சுமார் 400 வருடங்களுக்கு முன் இந்தப் பகுதியில் சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. தனது மூச்சு காற்றில் கூட சிவபெருமான் புராணம் தான் நிறைந்திருக்கும் அளவுக்கு பக்தியில் மெச்சியவர். அவர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் தீவிர பக்தராகவும் திகழ்ந்தார். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா அன்று திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அந்த சிவபக்தருக்கு வயதானதால் அவரால் திருவண்ணாமலைக்கு செல்ல முடியாமல் போனது.

உடனடியாக கண்ணீர் விட்டு வருத்தத்துடன் சிவபெருமானிடம் அழுத போது அவர் ஜோதி சொரூபமாக இவருக்கு காட்சி கொடுத்து அசரீரியாக ஒலித்தார். அதன்படி உனக்கு கிடைக்கும் ஒரு லிங்கத்தை வைத்து இங்கு கோயில் கட்டி வழிபடு. அவ்வாறு செய்வதால் திருவண்ணாமலையில் வழிபட்டால் கிடைக்கும் பலனை பெறுவாய் என கூறினார். இதனைத் தொடர்ந்து அந்த சிவ பக்தர் தனக்கு தெரிந்த நண்பர் மூலம் காசியிலிருந்து கிடைத்த பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அண்ணாமலையாராக வழிபட தொடங்கினார்.

அன்று முதல் இந்த கோயில் சென்னையின் திருவண்ணாமலை என அழைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திருக்கார்த்திகை அன்றும் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் ஜோதி சொரூபமாக சிவனை திருவண்ணாமலை இருப்பதை போல வழிபட்டு வருகின்றனர்.

கோயிலின் சிறப்புகள்

இந்த அண்ணாமலையார் கோயில் ஒரு சைவ கோயிலாக கருதப்பட்டாலும், ஆனால் வைணவ பேதம் இன்றி வரதராஜ பெருமாள் இங்கு தனி சன்னதி கொண்டு ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராக காட்சியளிக்கிறார். அது மட்டுமல்லாமல் பிரகாரத்தில் விஸ்வநாதர், துர்க்கை அம்மன் ,விஜய கணபதி, விசாலாட்சி நாயகி, வராஹி, பைரவர், மகிஷாசுரமர்த்தினி, அனுமன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளது.

இதில் முருகன் மயில் மீது இருக்க வள்ளி தெய்வானை இருவரும் யானை மீது வீற்றிருந்து காட்சி கொடுப்பது விசேஷமாக பார்க்கப்படுகிறது. இந்த கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கந்த சஷ்டி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மேலும் திருமண தடை, குழந்தை பாக்கியம், செல்வ வளம், கல்வியில் வளர்ச்சி, வேலைவாய்ப்பில் ஏற்றம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற பக்தர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்து பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். வாய்ப்பிருந்தால் இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையில் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கோயில் பற்றிய தகவல்கள் அமைந்துள்ளது. இதற்கு அறிவியல்பூர்வமான விளக்கம் இல்லை)

Follow Us