Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Saneeswaran Temple: சனி தோஷத்தால் அவதியா? – இந்த 21 அடி சனீஸ்வரர் கோயில் போங்க!

Tamilnadu Temples: விழுப்புரம் மாவட்டம், கல்பட்டு சனீஸ்வர பகவான் கோயில் மற்ற சனீஸ்வரன் கோயிலை விட வித்யாசமானது. இங்கு 21 அடி உயரத்தில் நின்றவாறு அவர் காட்சிக் கொடுக்கிறார். நாம் இந்த கோயில் அமைந்துள்ள இடம், உருவான வரலாறு உள்ளிட்ட தகவல்களைக் காணலாம்.

Saneeswaran Temple: சனி தோஷத்தால் அவதியா? – இந்த 21 அடி சனீஸ்வரர் கோயில் போங்க!
சனீஸ்வரன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 12 Jun 2025 13:03 PM

ஜோதிடத்தைப் (Astrology) பொறுத்தவரை இந்த உலகம் இயங்க நவக்கிரகங்கள் தான் காரணம் என நம்பப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கடவுளுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சனிக்கிரகத்தின் அதிபதியான சனீஸ்வரன் (Lord Shani Dev) மீது பலரும் நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துகள் உள்ளது. சனி பகவான் கொடுக்கவும் செய்வார், கெடுக்கவும் செய்வார் என ஒரு கருத்து ஆன்மிகத்தில் உள்ளது. உண்மையில் சனி பகவான் நியாயத்தின்  பக்கம் நிற்பவர். அவர் தவறு செய்பவர்களை மட்டுமே தண்டிப்பார். அதனால் தான் நவக்கிரகங்களில் சனீஸ்வரனுக்கு தனி சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது. இத்தகைய சனீஸ்வரரருக்கு தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களிலும் இடமுண்டு. அதேசமயம் சில இடங்களில் அவர் தனி கோயில் கொண்டு வீற்றிருக்கிறார். அப்படியான ஒரு கோயிலைப் பற்றி நாம் காணலாம்.

இந்த கோயில் எங்குள்ளது?

இந்த சனீஸ்வர பகவான் கோயிலானது வட மாவட்டமான விழுப்புரத்தில் உள்ள கல்பட்டு என்ற இடத்தில் தான் உள்ளது. இந்த கோயிலானது காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.

கோயில் உருவான வரலாறு

சாஸ்திரத்தில் சூரிய தேவன் – சாயாதேவி தம்பதியினருக்கு பிறந்த சனீஸ்வரனுக்கு ஒரு கால் சிறிது குறைபாடு கொண்டது என்று சொல்லப்படுகிறது. அதாவது தனக்கு கிடைக்காத சாகா வரம் தனக்கு பிறக்கப் போகும் மகன் இந்திரஜித் கிடைக்க வேண்டும் என ராவணன் விரும்புகிறான் இதற்காக கடும் தவம் செய்யும் அவனைக் கண்டு தேவர்கள் கவலை கொண்டனர். தவத்தின் வலிமையால் கிரகங்கள் எல்லாம் ராவணனுக்கு அடிமைப்பட்டு கிடந்த நிலையில் சனியின் பார்வை குழந்தையின் மீது பட வழி இல்லாமல் போகும் சூழல் உண்டாகிறது.

சனீஸ்வர பகவானிடம் இதனை உணர்ந்த நாரதர் எப்பாடுபட்டாவது அந்த குழந்தையை ஒரு முறை பார்த்து விடு எனக் கூறுகிறார் அதனை தொடர்ந்து குழந்தை பிறக்கவும் சனீஸ்வரன் பார்க்க தான் கஷ்டப்பட்டு செய்த தவம் வீணாகி விட்டதே என ராவணன் ஆத்திரத்தில் சனி பகவானின் காலில் ஓங்கி அடித்தான். இதனால் அவரது வலது காலில் குறைபாடு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனை நினைவூட்டும் வகையில் இந்த கோயிலில் சனீஸ்வரனின் ஒரு கால் தரையிலும் மற்றொரு கால் அவரது வாகனமான காகத்தின் மீது இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோயிலின் சிறப்புகள்

இந்த சனீஸ்வரன் கோயில் ஆனது பிரம்மானந்த சுவாமியால் கட்டப்பட்ட ஒரு பிரார்த்தனை தளமாக திகழ்கிறது. கோயிலின் அமைந்திருக்கும் சனீஸ்வர சன்னதியில் அமர்ந்து அமைதியாக பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் நுழைவிடத்தில் உள்ள பிரணவ கணபதி சிலை அங்கிருக்கும் குளத்தில் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் கோயிலுக்குள் இருக்கும் விநாயகர் வலம்புரி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இந்தக் கோயிலில் 11 அடி பஞ்சமுக ஈஸ்வரர் புவனேஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் உச்சிஷ்ட கணபதி, புவனேஸ்வரி, கோபாலகிருஷ்ணன், பஞ்சமுக ஆஞ்சநேயர், 8 அடி உயர தண்டாயுதபாணி, 18 அடி உயர அஷ்டதசபுஜ துர்க்கை ஆகியோருக்கும் தனித்தனி விமானங்களுடன் கூடிய சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் சிறப்பு என்னவென்றால், 21 அடி உயரத்தில் நின்ற நிலையில் கருப்பும் நீலமும் கலந்த உடை அணிந்து, விழிகள் கருணை பார்வை பார்க்கும் வகையில், சனீஸ்வரர் காட்சி தருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமை தோறும், இங்கு எள்விளக்கு ஏற்றி, பிரார்த்தனை செய்தால், சனி தோஷ நிவர்த்தி பெறலாம் என பக்தர்கள் தீராத நம்பிக்கை கொண்டுள்ளனர். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.

(இந்தக்கட்டுரை இறை நம்பிக்கையின் அடிப்படையிலான ஆன்மிக வரலாறுபடி கோயில் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)