AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kotagiri Murugan: பல்வேறு பிரச்னைகளையும் தீர்க்கும் வெற்றிவேல் முருகன் கோயில்!

Kotagiri Sakthimalai Sri Vetrivel Murugan Kovil : கோத்தகிரியில் அமைந்துள்ள பிரமாண்ட வெற்றிவேல் முருகன் கோயிலானது சுற்றுலாப் பயணிகள் இடையே மிக பிரபலமாக திகழ்கிறது. நாகமும் மயிலும் வழிபட்ட சுயம்பு மூர்த்தியாகக் கருதப்படும் இந்தக் கோயில், சக்திமலை என அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் பற்றிய பல்வேறு தகவல்களையும் காணலாம்.

Kotagiri Murugan: பல்வேறு பிரச்னைகளையும் தீர்க்கும் வெற்றிவேல் முருகன் கோயில்!
கோத்தகிரி முருகன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 27 Jun 2025 11:10 AM IST

தமிழ்நாடு (Tamilnadu) ஒரு ஆன்மிக தலமாகும். இங்கு எங்கு திரும்பினாலும் பல்வேறு மதங்களின் வழிபாட்டு தலங்களும் நிறைந்துள்ளது. அப்படியாக ஒவ்வொருவருக்கும் வழிபாட்டு தெய்வங்கள் தவிர்த்து இஷ்ட தெய்வங்களும் உள்ளது. அப்படியான தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகப்பெருமானுக்கு (Lord Murugan) என தனி பக்தர்கள் கூட்டமே உள்ளது. வருடம் 365 நாட்களும் வீட்டின்  அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின் தான் பலரும் வேலையை தொடங்குகிறார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிரமாண்ட கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலானது சக்திமலை கிளப் ரோடு அருகில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் முருகப்பெருமான் வெற்றிவேல் என்ற திருப்பெயர் கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலையில் 3  மணி முதல் 6 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்திருக்கும். இந்த வெற்றிவேல் முருகன் கோயில் பற்றிய பல்வேறு தகவல்களையும் காணலாம்.

கோயில் உருவான வரலாறு

கோத்தகிரி பகுதியில் இருந்த குன்று ஒன்றில் அடர்த்தியான மரங்கள் நிறைந்திருந்த ஓர் இடத்தில் குறிப்பிட்ட ஒரு மரத்தின் கீழ் சுயம்பு மூர்த்தம் இருந்தது. இதனை தினமும் ஒரு நாகமும், மயிலும் வந்து வழிபாடு செய்வதை அந்த பகுதியில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் மற்றும் பழைய பொருட்களை சேகரிப்பவர்கள் கண்டு வியந்துள்ளனர். தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கும் மேல் இது நிகழ்ந்ததால் இந்த செய்தியை ஊர் பெரியவர்களிடம் தெரிவிக்க அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போதே நாகமும் மயிலும் பூஜை செய்வதை கண்டு வியப்படைந்தனர்.

அவை அந்த இடத்தை விட்டு சென்ற பின்பு மக்கள் அனைவரும் அந்த சுயம்பு மூர்த்ததை வழிபட்டனர். நாகம் மற்றும் மயில் பூஜை செய்ததால் இது நிச்சயம் முருகனாகத்தான் இருக்கும் என உறுதியாக மக்கள் நம்பினர். ஒன்று கூடி அந்த இடத்தில் கோயில் ஒன்றை கட்ட முடிவு செய்து முதலில் சிறிய அளவிலான கோயிலைக் கட்டி அதில் சுயம்பு மூர்த்ததை வைத்து பூஜை செய்தனர். பின்னர் முருகனுக்கு கற்சிலை ஏற்பாடு செய்து அந்த சுயம்பு மூர்த்ததிற்கு பின்னால் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்தனர். இதன் பின்னர் நாளடைவில் இந்தக் கோயில் ஆனது மிகப்பெரிய வளாகமாக உருவெடுத்தது

கோயிலின் சிறப்புகள்

இந்தக் கோயிலில் சோமாஸ் கந்தர் ரூபத்தில் முருகப்பெருமான் காட்சி கொடுக்கிறார். பொதுவாக முருகன் நின்ற கோலத்தில் தண்டாயுதத்துடன் இருப்பது போன்று தான் சிலை வடிக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு முருகன் வேலுடன் இருப்பது போன்று சிலை உருவாக்கப்பட்டு இருந்தது. வேல் என்பது ஞானம் என பொருள்படும். இதன் மூலம் அனைத்தையும் வெல்லலாம். அப்படியாக அந்த வேலை தாங்கி நிற்கும் முருகப்பெருமான் வெற்றிவேல் என அழைக்கப்படுகிறார். மேலும் ஞானத்தின் சக்தியாக விளங்குவதால் இந்த கோயில் இருக்கும் இடம் சக்திமலை என பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.

ஒருமுறை கிருபானந்த வாரியார் சுவாமிகள் இந்த கோயிலுக்கு வருகை தந்த போது அவரின் எண்ணத்தில் வழியாக தோன்றிய முருகன் பிற்காலத்தில் இக்கோயில் மிகப்பெரியதாக மாறி தங்கத்தேர் ஓடும் அளவிற்கு முன்னேறும் என கூறினார். கிருபானந்த வாரியாரின் அந்த சொற்படி இன்று கோயில் சீரும் சிறப்புமாக திகழ்ந்து வருகிறது. கோத்தகிரிக்கு வரும் வெளிநாட்டு பக்தர்கள் நிச்சயம் இந்த வெற்றிவேல் முருகன் கோயிலுக்கு அதிக அளவில் வருகை தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல் அங்கு சுற்றுலா வரும் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் இந்த கோயிலுக்கு வந்து முருகனை வழிபட்டு நீண்ட நேரம் தியானத்தில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

பிற தகவல்கள்

இந்தக் கோயிலில் முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை தோறும் உடல்நலம் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும், மயில் இறக்கையால் வருடி கொடுத்து திருநீறு பூசினால் விரைவில் உடல் நலம் தேடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதேசமயம் நீதிமன்ற வழக்குகள், குடும்ப பிரச்சினைகள் ஆகியவை தீர சத்ரு சம்ஹார திரிசக்தி பூஜை பலரும் செய்து வழிபடுகின்றனர்.

இந்த வெற்றிவேல் முருகன் கோயிலில் சொர்ணபுரீஸ்வரர், சொர்ணாம்பிகை அம்பாள், பைரவர், ஆதி விநாயகர், சண்டிகேஸ்வரர், நாகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத் பவர், பிரம்மா என பலரும் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு உரிய அத்தனை விசேஷ தினங்களும் கொண்டாடப்படும். குறிப்பாக தைப்பூச திருவிழா 11 நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது.

கோவிலை சுற்றி இருக்கும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் காவடி மற்றும் பால்குடங்கள் சுமந்து நடைபயணமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. கோத்தகிரிக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் இந்த முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

(இந்தக்கட்டுரை இறை நம்பிக்கையின் அடிப்படையிலான ஆன்மிக வரலாறுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை)

Follow Us