AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தாமிரபரணி நதிக்கரையில் அருள்பாலிக்கும் சனி பகவான்.. இந்த கோயில் தெரியுமா?

NavaKailayam Temples: திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டம் கைலாசநாதர் கோயில், நவகைலாய தலங்களில் ஒன்றாகும். உரோமச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இக்கோயில், சனி பகவானின் அம்சமாகக் கருதப்படுகிறது. சனி தோஷ நிவர்த்திக்குப் பிரசித்தி பெற்ற இவ்வாலயம், திருமாலும், திருமகளும் தங்கியிருந்ததாக ஐதீகம் கொண்டது.

தாமிரபரணி நதிக்கரையில் அருள்பாலிக்கும் சனி பகவான்.. இந்த கோயில் தெரியுமா?
ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 30 Jun 2025 11:16 AM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் நவகைலாய தலங்கள் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த உலகமே நவகிரகங்கள் அடிப்படையில் சுழல்வதாக ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் பல்வேறு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய எண்ணினார். இது தொடர்பாக அகத்தியர் அருளிய ஆலோசனையின் படி சிவ வழிபாட்டில் இருந்த தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் வீசி எறிந்தார். அது எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய அகத்தியர் சொல்ல அதன் படி உரோமச முனிவர் பிரதிஷ்டை செய்தார். அப்படியாக பாபநாசம் (சூரியன்), சேரன்மகாதேவி (சந்திரன்), கோடகநல்லூர் (செவ்வாய்), குன்னத்தூர் (ராகு), முறப்பநாடு (குரு) ஆகிய இடங்களில் கோயில் அமைந்தது. இதனைத் தொடர்ந்து நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் சனி பகவானுக்கு அமையப்பெற்ற ஸ்ரீ வைகுண்டம் கைலாசநாதர் திருக்கோயில் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

நவகைலாயங்களில் இக்கோயிலானது ஆறாவது வழிபாட்டுத்தலமாக கருதப்படுகிறது. இந்த கைலாசநாதர் கோயில் தினமும் காலை 6:00 மணி முதல் 12 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

கோயில் உருவான வரலாறு

உரோமச முனிவர் தாமரபரணி ஆட்சியில் மிதக்க விட்ட ஆறாவது மலர் கரை ஒதுங்கிய இடத்தில் அவரது விருப்பப்படி சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் கைலாசநாதர் என அழைக்கப்பட்ட நிலையில் சனிபகவான் அம்சத்துடன் காட்சி தருகிறார். அவருடன் சிவகாமி அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இந்த கோயிலில் சிவன் சன்னதிக்கு எதிரே உள்ள நந்தியை சுற்றிலும் 108 விளக்குகள் உள்ளது.  இந்த விளக்குகளை ஏற்றி சுவாமியை வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது.

அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கோயில் உருவாக காரணமாக இருந்த உரோமச முனிவர் சிற்பமானது தூணில்  வடிவமைக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் நடராஜர், அக்னி பத்திரர், வீரபத்திரர் ஆகியோரின் சிற்பங்களும் அதில் இடம்பெற்றுள்ளது. மேலும் இக்கோயிலில் உள்ள கொடிமரம் கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்டதாகும். இந்த கைலாசநாதர் கோயிலில் உள்ள நடராஜர் சந்தன சபாபதி என அழைக்கப்படுகிறார்.

சனி தலமாக அழைக்கப்பட காரணம்

இந்த கைலாசநாதர் கோயிலில் சனிபகவானுக்கு என தனி சன்னதி உள்ளது. அங்கு சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல் சனி தசையால் பாதிக்கப்பட்ட ராசிக்காரர்கள் இங்கு பரிகாரம் செய்து கொண்டால் திருமண தடை விலகும் என்பது நம்பிக்கையாகும். மேலும் இழந்த சொத்துக்களை பெறுவார்கள் எனவும் பக்தர்கள் கூறுகின்றனர். இக்கோயில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு ஈடானது என சொல்லப்படுகிறது.

சனிப்பெயர்ச்சி நடக்கும்போது பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் இந்த கைலாசநாதர் கோயிலுக்கு வந்து சனி பகவானே வேண்டிக் கொண்டால் அவரின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பது நம்பிக்கையாகும். திருமாலும், திருமகளும் இந்த கோயிலில் தங்கி இருப்பதாக ஐதீகம் உள்ளதால் இந்த இடமானது ஸ்ரீ வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. இதே ஊரில் தான் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கள்ளபிரான் கோயிலும் அமைந்துள்ளது.

ஒரே ஊரில் நவகைலாயமும் நவதிருப்பதியும் அமைந்துள்ளது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. இந்த கள்ளபிரான் கோயில் நவ திருப்பதிகளில் சூரியனுக்கு உரிய தலமாக அறியப்படுகிறது. இந்த கைலாசநாதர் கோயிலில் காவல் தெய்வமான பூதநாதர் சிலை மரத்தால் செய்யப்பட்டு சித்திரை திருவிழாவின் போது அவருக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது.  சாஸ்தாவின் அம்சமாக கருதப்படும் இவர் மீது மூன்றாம் நாள் விழாவின்போது சுவாமி எழுந்தருளி காட்சி கொடுக்கிறார்.

அவருக்கு புட்டு, சர்க்கரை பொங்கல் மற்றும் புளியோதரை ஆகியவை பிரசாதமாக படைக்கப்படுகிறது. இந்த சாஸ்தாவுக்கு சந்தனாதி தைலம் மட்டுமே தடவப்படுகிறது. சிறப்பு அபிஷேகம் என்பது கிடையாது.  முற்காலத்தில் கோயிலை பூட்டி அர்ச்சகர்கள் சாவியை இந்த பூதநாதர் முன்பாகவே ஒப்படைத்து விட்டு சென்றார்கள் எனவும்,  இவரை மீறி யாரும் உள்ளே நுழைய முடியாது எனவும் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us