AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Murugan Temple: முருகனுக்கு பன்னீர் அபிஷேகம்.. சென்னையில் இந்த கோயில் தெரியுமா?

சிவபக்தரின் கனவில் காட்சி அளித்த முருகன், இங்குள்ள புற்றில் குடி கொண்டிருப்பதாக கூறினார். அந்த புற்றில் கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலை, இங்குள்ள கோவிலுக்கு அடிப்படையாக அமைந்தது. கோவிலின் தனித்துவமான அமைப்பு, வழிபாட்டு முறைகள் பற்றி நாம் காணலாம். இந்த கோயில் சென்னையின் மிக பிரபலமான முருகன் கோயில்களில் ஒன்றாகும்.

Murugan Temple: முருகனுக்கு பன்னீர் அபிஷேகம்.. சென்னையில் இந்த கோயில் தெரியுமா?
கந்தக்கோட்டம் முருகன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 07 Jun 2025 18:30 PM IST

தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகப்பெருமானுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இல்லாத பக்தர்கள் கோடி பேர் உள்ளனர். திரும்பும் திசை எங்கும் சிறியது முதல் பெரியது வரை உள்ள அனைத்து கோயில்களிலும் முருகப்பெருமான் அருள் பாலித்து வருகிறார். அப்படியாக சென்னை பார்க் டவுன் பகுதியில் உள்ள கந்தக்கோட்டம் முருகன் கோயிலை பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலில் மூலவராக கந்தசாமி என்ற பெயரிலும் உற்சவரராக முத்துக்குமாரர் என்ற பெயரிலும் முருகன் அருள் பாலித்து வருகிறார். மேலும் வள்ளி, தெய்வானை அம்பாளாக காட்சி கொடுக்கும் இக்கோயிலின் தலவிருட்சமாக மகிழம் மரம் உள்ளது. சென்னையின் புகழ்பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றாக திகழும் இந்த கந்தக்கோட்டம் உருவான வரலாறு, கோயிலின் சிறப்புகள் பற்றி காணலாம்.

கோயில் உருவான வரலாறு

திருப்போரூரில் கோயில் கொண்டிருக்கும் கந்த சுவாமியை இந்தப் பகுதியைச் சேர்ந்த சிவ பக்தர் ஒருவர் நேரில் சென்று தரிசனம் செய்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவருடன் சில ஆச்சாரியர்களும் வந்தனர். வலி எங்கும் கனமழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து சிவ பக்தர் உள்ளிட்ட அனைவராலும் ஊர் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. அன்று இரவு அங்கு இருந்த மடத்தில் தங்கி இருந்த நிலையில் சிவ பக்தரின் கனவில் முருகன் காட்சி கொடுத்தார்.

அப்போது அருகில் உள்ள புற்றில் தான் குடி கொண்டிருப்பதாகவும் எனக்கு கோயில் கட்ட வேண்டும் எனவும் கூறினார். இதனைக் கேட்டு கண்விழித்த சிவ பக்தர் முருகன் சொன்ன புற்றில் முருகன் சிலை வடிவில் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார். உடனடியாக அந்த சிலையை எடுத்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்ட நிலையில் வழியில் ஓய்வெடுக்க எண்ணி ஓரிடத்தில் சிலையை வைத்தனர். சிறிது நேரம் கழித்து அதனை எடுக்க முயற்சித்த போது சிலை அசையவில்லை. இதனால் அதுவே முருகனுக்கு பிடித்த இடம் கோயில் கட்டினர். அந்த இடமே கந்தகோட்டமாக அழைக்கப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலில் சுவாமி தானாக விரும்பி நின்ற இடம் என்பதால் பீடம் இல்லாமல் தரையில் தனித்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சிறிய அளவிலான சிலை என்ற நிலையில் அவருக்கு இரு பக்கமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதியில் வீற்றிருப்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும். மேலும் ராஜகோபுரமும் பிரதான வாயிலும் வடக்கு பகுதியை நோக்கி உள்ள நிலையில் கொடி மரத்திற்கும் மூலவருக்கும் இடையில் துறைகளுடன் கூடிய சுவர் மட்டுமே உள்ளது.

உற்சவர் ஆன முத்துக்குமாரர் தனிக்கொடி மரத்துடன் முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இங்கிருக்கும் விநாயகர் குளக்கரை விநாயகர் என அழைக்கப்படுகிறார். அதேபோல் சித்தி புத்தி விநாயகர் தனி சன்னதியில் அமர்ந்த நிலையில் காட்சி கொடுக்கிறார். மேலும் லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி ஆகியோரும் உள்ளனர். இக்கோயில் குளத்தின் தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டு ஒரே சமயத்தில் குளத்தின் கரையில் இருக்கும் விநாயகர் லட்சுமி சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் செல்வமும் ஞானமும் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

பக்தர்களின் நம்பிக்கையாக திகழும் கோயில்

இங்கு முருகனுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமாக படைக்கப்படுகிறது. உடல் நலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள பசுவிற்கு பழங்கள் கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது அது மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக இக்கோயிலில் கோமாதா பூஜை தினமும் நடைபெறுகிறது அதேபோல் தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணப் பொய்கை தீர்த்தத்தில் வெல்லம் வாங்கி கரைக்கின்றனர்.

மேலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு விசேஷ பன்னீர் அபிஷேகமும் செய்யப்படுகிறது. இங்கு இருக்கும் சித்தி புத்தி விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பக்தர்கள் பால்குடம், காவடி, முடி காணிக்கை போன்றவை நேர்த்திக்கடன்களாக செலுத்தி வழிபடுகின்றனர்.

இந்த கந்தக்கோட்டம் கந்தசாமி கோயில் ஆனது தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். கோயிலுக்கு செல்ல பேருந்து மற்றும் மின்சார ரயில் வசதியும் உள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர் இந்த கோயிலில் முருகனுக்கு உரிய விசேஷ தினங்கள் அனைத்தும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் ஒரு முறை சென்று வாருங்கள்.

Follow Us