Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vaikasi Visakam: வைகாசி விசாகம்.. முருகனுக்கு பிடித்த பிரசாதம் எது தெரியுமா?

வைகாசி விசாகம் 2025 ஜூன் 9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முருகனின் அவதார தினமாகக் கருதப்படும் இந்த நாளில், பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு செய்கின்றனர். சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் போன்ற முருகனுக்குப் பிடித்த பிரசாதங்களை வழிபாட்டின்போது வைத்து வணங்கினால் பலன்களைப் பெறலாம்.

Vaikasi Visakam: வைகாசி விசாகம்.. முருகனுக்கு பிடித்த பிரசாதம் எது தெரியுமா?
கடவுள் முருகன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 04 Jun 2025 11:16 AM

தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகனுக்கு ஒவ்வொரு நாளும் விசேஷமானதாக பார்க்கப்பட்டாலும் ஒவ்வொரு மாதத்திலும் வரும் சில திதிகளும், நட்சத்திரங்களும் சாஸ்திரத்தைப் பொறுத்தவரை அவருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி போல முருகனின் மிகப்பெரிய விசேஷ நாளாக பார்க்கப்படுவது “வைகாசி விசாகம்”. 2025 ஆம் ஆண்டு இந்த பண்டிகையானது ஜூன் 9 ஆம் தேதி திங்கட்கிழமை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே பக்தர்கள் 48, 21, 11 நாட்கள் விரதத்தை தொடங்கி விட்டார்கள். அனைத்து முருகன் கோயில்களிலும் கொடியேற்றம் நடைபெற்று வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படு வருகிறது. இப்படியான நிலையில் இந்த நன்னாளில் முருக வழிபாட்டில் என்ன மாதிரியான பிரசாதம் வைத்தால் முருகன் மனதை குளிர வைக்கலாம் என்பது பற்றி காணலாம்.

வைகாசி விசாக வரலாறு

அசுரனான சூரபத்மனை அழிப்பதற்காக தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற ஈசன் தனது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறியை உருவாக்கி அதனை கங்கை நதியில் விட்டார். அது ஆறு பகுதிகளாக பிரிந்து குழந்தைகளாக மாறி சரவணப் பொய்கையில் பார்வதி தேவியால் கார்த்திகை பெண்களிடம் வளர்க்குமாறு ஒப்படைக்கப்பட்டது. அவர்தான் முருகப்பெருமான். ஆறுமுகங்களும் ஒரே முகமாக மாறி முருகன் எனும் அவதாரம் எடுத்து சூரபத்மனை திருச்செந்தூரில் வீழ்த்தினார். இப்படியாக முருகப்பெருமான் உருவான தினம் தான் வைகாசி விசாகம் என சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முருகப்பெருமானுக்கு உள்ளூர் தொடங்கி உலகம் வரையில் சிறியது முதல் பெரியது வரையிலான பல்வேறு கோயில்கள் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் முருகனை பின்பற்றி தினமும் மனதார வழிபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் வைகாசி விசாக தினத்தன்று பலரும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு விரதம் இருக்கும் வேலையில் காலையில் புனித நீராடி விட்டு முருகனை வணங்கி விரதத்தை தொடங்குவார்கள். பகல் முழுவதும் எதுவும் சாப்பிடாமலும், அல்லது பால் பழம் எடுத்துக்கொண்டு நோன்பை தொடர்வார்கள். மாலையில் கண்டிப்பாக வழிபாடு செய்யும்போது முருகனுக்கு பிடித்த உணவு வகைகளை உங்களால் முடிந்த அளவு செய்து பிரசாதமாக வைத்து வணங்கலாம்.

முருகனுக்கு பிடித்த உணவுகள்

சிலருக்கு முருகப்பெருமானுக்கு என்ன உணவுகள் பிடிக்கும் என்பது குழப்பம் ஏற்படலாம். அதாவது முருகனுக்கு சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், எலுமிச்சை சாதம், வெண்பொங்கல், புளியோதரை, எள்ளு சாதம், தேன் மற்றும் தினை மாவு கலந்த உணவு ஆகியவை நெய் வைத்தியமாக படைக்கப்படுகிறது. இவ்வாறு நாம் படைக்கும் போது முருகன் மனம் குளிர்ந்து நம்முடைய வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் சிலருக்கு இவற்றையெல்லாம் செய்வதற்கு நேரமோ அல்லது பொருளாதார வசதியோ இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குறைந்தபட்சம் பழம் வெற்றிலை பாக்கு பால் ஆகியவையாவது வைத்து வணங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் செய்தி தரப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)