AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதன் தோஷத்தால் அவதியா? – வழிபட வேண்டிய நவகைலாய கோயில்!

தூத்துக்குடி அருகிலுள்ள தென் திருப்பேரை கைலாசநாதர் கோயில், நவக்கிரகங்களில் புதனுக்குரிய ஆலயமாகும். நவகைலாயங்களில் ஏழாவது தலமாகவும் விளங்கும் இக்கோயிலில், தாமரை மலர் போன்ற பீடத்தின் மீது சிவலிங்கம் அமைந்துள்ளது. புதன் தோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்ற நான்கு நவக்கிரக பகவான்கள் குதிரை வாகனத்தில் காட்சி கொடுக்கின்றனர்.

புதன் தோஷத்தால் அவதியா? – வழிபட வேண்டிய நவகைலாய கோயில்!
அருள்மிகு கைலாசநாதர் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 26 Jun 2025 12:21 PM IST

ஜோதிட சாஸ்திரத்தில், தனி மனித வாழ்கையானது நவகிரகங்களின் செயல்பாடு அடிப்படையில் இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த கிரகங்களின் பெயர்ச்சி உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் துல்லியமாக கணக்கிடப்படுகிறது. இப்படியான நிலையில் அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் பல்வேறு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய எண்ணி பூஜையில் வழிபட வைக்கப்பட்ட தாமரை மலர்களை தாமிரபரணி நதியில் வீசினான். அது 9 இடங்களில் ஒதுங்க அங்கெல்லாம் சிவலிங்கம் நிறுவப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இந்த 9 கோயில்களும் நவக்கிரகங்களில் ஒவ்வொன்றுக்கும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. அப்படியாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு அருகே உள்ள தென் திருப்பேரை பகுதியில் அமைந்துள்ள கைலாச நாதர் கோயில் பற்றிப் பார்க்கலாம். இந்த கோயில் நவக்கிரகங்களில் புதனுக்காக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலின் சிறப்புகள் 

இந்த கைலாசநாதர் ஆலயம் நவகைலாயங்களில் ஏழாவது தலமாக அறியப்படுகிறது. இங்கிருக்கும் சிவலிங்கத்தின் பீடமானது தாமரை மலர் போன்று அமைக்கப்பட்டுள்ளது. புதன் பகவானின் அனுக்கிரகம் பெற விரும்பும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தந்து கைலாசநாதர் சுவாமிக்கு பச்சை நிற வஸ்திரம் சாற்ற வேண்டும். பின்னர் வாசிப்பயிறு மற்றும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக படைத்து வழிபட்டால் அவரின் அருள் ஆசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

மேலும் பிரகாரத்தில் திருச்செந்தூர் முருகனைப் போன்று கையில் தாமரை மலருடன் சுப்பிரமணியர் காட்சி கொடுக்கிறார். இவருடன் வள்ளி தெய்வானையும் வீற்றிருக்கின்றனர். சனி பகவானுக்கும் இந்த கோயிலில் தனி சன்னதியானது அமைக்கப்பட்டுள்ளது.

நான்கு கிரகங்கள் அமையப்பெற்ற கோயில்

நவகிரகங்களில் குதிரையானது சூரியனுக்குரிய வாகனமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கோயிலில் சூரியன் சந்திரன் சுக்கிரன் குரு ஆகிய நான்கு கிரகங்களும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இதில் எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் சுக்கிரனும் குருவும், ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியனும் 10 குதிரைகள் பூட்டிய தேரில் சந்திரனும் காட்சியளிக்கின்றனர்.

கொம்பு முளைத்த தேங்காய்

தொடர்ந்து கைலாசநாதருக்கு வலது பக்கமாக அம்பிகையாக கிழக்கு நோக்கி காட்சி கொடுக்கும் அழகிய பொன்னம்மை சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. இதற்குப் பின்னால் ஒரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது கேப்டன் துரை என்பவர் ஆங்கிலேய ஆட்சியில் இப்பகுதியின் கலெக்டராக இருந்துள்ளார். அவர் ஒரு முறை தான் தங்கியிருந்த சாவடிக்கு இளநீர் கொண்டு வரச் சொல்லியுள்ளார்.

கலெக்டரின் பணியாளர் ஒரு தென்னந்தோப்பிற்கு சென்று இளநீர் கேட்க அங்கிருந்த விவசாயி, இந்த தோப்பில் இருக்கும் அனைத்து இளநீர்களும் சுவாமி கைலாசநாதர் அபிஷேகத்திற்கு பயன்படுத்தக்கூடியது என்பதால் என்னால் தர முடியாது என சொல்லிவிட்டார். இதனை கேட்டு கடும் கோபம் அடைந்த கேப்டன் துரை இந்த தோப்பில் இருக்கும் இளநீருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என கேட்டு எனக்கு இளநீரை பறித்துக் கொடு என மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரின் உத்தரவை தட்ட முடியாமல் அந்த விவசாயி ஒரு இளநீரை வெட்ட அதில் மூன்று கொம்பு முளைத்திருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டார். ஆனால் இதைக்கண்டு கலெக்டர் துரை பயந்துவிட்டார். உடனடியாக கைலாசநாதர் கோயிலுக்கு சென்று மன்னிப்பும் கேட்டார். மேலும் தினமும் பூஜைக்காக அப்போதைய பண மதிப்பில் மிகப்பெரிய தொகை ஒன்றை வழங்கினார். இந்தக் கொம்பு முளைத்த தேங்காய் இப்போதும் அந்த கோயிலில் இருக்கிறது. இதன் ஒவ்வொரு கொம்பு உடைந்து விட்ட நிலையில் தற்போது இரண்டு கொம்புகளுடன் அது காட்சி கொடுக்கிறது.

நந்திக்கு தலைப்பாகை கட்டி அலங்காரம்

அதேபோல் இங்கிருக்கும் நந்திக்கு தலைப்பாகை கட்டி அலங்காரம் செய்யப்படுவது விசேஷமாக பார்க்கப்படுகிறது. கோயிலில் வீற்றிருக்கும் கால பைரவர் ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இவருக்கு நாய் வாகனம் கிடையாது. பொதுவாக பெரிய கோட்டைகள் இருக்கும் ஊரை பேரை என அழைப்பார்கள் அப்படியாக தெற்கு பக்கத்தில் அமைந்திருக்கும் இந்த ஊர் தென்திருப்பேரை என பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் புதன் தோஷம் இருப்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால் அவை நீங்கும் என்பது நம்பிக்கையாகும். வாய்ப்பிருப்பவர்கள் ஒரு முறை இந்த கோயிலுக்கு வந்து வழிபடலாம்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கோயில் பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us