Theertheswarar Temple: திருமால் வழிபட்ட தலம்.. இந்த சிவன் கோயில் தெரியுமா?
திருவள்ளூரில் அமைந்த தீர்த்தீஸ்வரர் கோயில், பதினெட்டாம் நூற்றாண்டு கோயிலாகும். மூர்த்தி, தீர்த்தம், தலம் சிறப்புடைய இக்கோயில், மது-கைடபர் வதத்திற்குப் பின் திருமால் வழிபட்ட தலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்த்தீஸ்வரர், திரிபுரசுந்தரி, விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்கள் இங்கு அருள்பாலிக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

நாம் வாழும் இவ்வுலகில் எங்கும் இறையருள் நிரம்பியிருக்கிறது. திரும்பும் திசையெங்கும் இருக்கும் வழிபாட்டு தலங்கள் நம் மனதில் உள்ள பாரங்களை குறைப்பதில் முதன்மையானதாக திகழ்கிறது. ஒவ்வொரு ஊரில் அனைத்து வித ஆண், பெண் தெய்வங்களுக்கும் வெவ்வேறு பெயர்கள்,வரலாற்றோடு கோயில்களும் அமைக்கப்பட்டுள்ளது. அப்படியாக திருவள்ளூர் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள தமிழ்நாட்டின் முக்கியமான சிவ ஆலயங்களில் ஒன்றான தீர்த்தீஸ்வரர் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலானது பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என சொல்லப்படுகிறது. இது மிகவும் பழமையான சிவன் கோயில் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த தீர்த்தீஸ்வரர் கோயிலானது தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். அதேபோல் மாலையில் 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த கோயில் பற்றி சிறப்புகளைக் காணலாம்.
தீர்த்தீஸ்வரர் கோயில் வரலாறு
இந்த வழிபாட்டுத்தலமானது புராண காலத்தில் தீர்த்தபுரி என அழைக்கப்பட்டது. அதாவது மூர்த்தி, தீர்த்தம் மற்றும் தலம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் மது மற்றும் கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தொடர்ச்சியாக ரிஷிகளுக்கு இடையூறு கொடுத்து தொல்லை செய்து வந்தனர். இதனால் பெரும் அவதிக்குள்ளான ரிஷிகள் நேரடியாக திருமாலிடம் சென்று முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து அவர் தனது சக்ராயுதத்தை ஏவி அரக்கர்களை அழித்தார்.
வேதத்தில் சிறந்த அரக்கர்களை அழித்ததால் திருமாலுக்கு தோஷம் ஏற்பட்டதாகவும் அவர் இந்த தீர்த்தீஸ்வரரை வழிபட்டு அது நீங்க பெற்றார் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த கோயிலின் மூலவரான தீர்த்தீஸ்வரர் மால்வினை தீர்த்தர் என்ற பெயருடன் குறிப்பிடப்படுகிறார்.,
கோயிலின் விசேஷங்கள்
இந்தக் கோயிலில் மூலவராக தீர்த்தீஸ்வரரும், அம்பாளாக திரிபுரசுந்தரியும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் மூன்று நிலை ராஜகோபுரம் கொண்ட இந்தக் கோயிலில் விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, ஐயப்பன், பைரவர், நவகிரகம் ஆகிய சன்னதிகளும் உள்ளது. இக்கோயிலில் சைவ ஆகம விதிப்படி தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது.
ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் இந்த கோயிலில் கிட்டத்தட்ட ஒரு மண்டலம் தங்கி இருந்து சுவாமி தரிசனம் செய்தார். அப்போது இந்த கோயிலில் அமைந்திருக்கும் மகிழம் மரம் மற்றும் தீர்த்தீஸ்வரரை வலம் வந்து வணங்கினால் பக்தர்கள் வாழ்வில் உள்ள துன்பங்கள் அனைத்தும் உதிர்ந்து இன்பங்கள் பிறக்கும் என தெரிவித்தார். அந்த நம்பிக்கை இன்றளவும் பக்தர்களிடையே காணப்படுகிறது.
அதே சமயம் பங்குனி மாதத்தின் அமாவாசை தொடங்கி மூன்று நாட்கள் சூரிய கதிர்கள் தீர்த்தீஸ்வரர் மீது படர்வது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு ஒரு முறை வந்து வணங்கினால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பதை நம்பிக்கையாக உள்ளது.
கோயில் வாசலில் கால் வைத்தவுடன் பறவைகள் ஒலி எழுப்பும் இனிமையான சத்தம் நம்மை வரவேற்பதோடு மனதிற்கு இதமாக அமையும். இந்தக் கோயிலில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் இடையே வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி கொடுப்பது சிறப்பானதாகும். இந்தக் கோயிலில் சிவனுக்குரிய அத்தனை விசேஷ தினங்களும் வெகு விமரிசையாக வழிபடப்படுகிறது. வாய்ப்பு இருப்பவர்கள் ஒரு முறை இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின்கீழ் இக்கட்டுரையின் தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)