Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மிருகசீரிஷம் நட்சத்திரமா நீங்கள்? – வழிபட வேண்டிய கோயில் இதுதான்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மிருகசீரிடம் நட்சத்திர ஆலயமான ஆதி நாராயண பெருமாள் கோவிலின் சிறப்புகள் பற்றி நாம் அறிந்துக் கொள்வோம். சோழ மன்னனின் சாப விமோசனம், கோவிலின் தனித்துவமான கட்டமைப்பு, மற்றும் மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு இக்கோயிலின் முக்கியத்துவம் ஆகியவை இக்கோயிலின் பின்னணியில் உள்ளது.

மிருகசீரிஷம் நட்சத்திரமா நீங்கள்? – வழிபட வேண்டிய கோயில் இதுதான்!
ஆதி நாராயணப் பெருமாள் கோயில்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 05 Jul 2025 11:28 AM

இந்த பூமியில் படைக்கப்பட்டவை யாவும் ஒவ்வொரு கடவுளுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் நவகிரகங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் ஆகியவையும் ஒவ்வொரு கடவுளுக்கு என தனித்தனியாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரிஷப ராசி நட்சத்திரங்களாக கிருத்திகை, ரோகிணி மற்றும் மிருகசீரிஷத்தில் ஆகியவை அறியப்படுகிறது. இதில் மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்களுக்கான திருக்கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த விசேஷ வழிபாட்டு தலமானது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவராக ஆதிநாராயணப் பெருமாள் அருள்பாலிக்கிறார். தாயாராக ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் காட்சிக் கொடுக்கின்றனர். இந்த பெருமாள் கோயில் எண்கண் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் பற்றிய பல்வேறு தகவல்களைக் காணலாம்.

கோயில் உருவான வரலாறு 

ஒரு சமயம் வன்னிமரக்காடு என அழைக்கப்பட்ட இந்த கோயில் அமைந்துள்ள இடத்தில் முனிவர் சமிவனம் பெருமாளை நினைத்து தவம் இருந்தார். அப்போது இந்தப் பக்கமாக சோழப் பேரரசின் மன்னர் ஒருவர் தனது படைகளுடன் பெரும் குரல் எழுப்பியபடி சிங்கம் ஒன்றை வேட்டையாட வந்தார். அவர் போட்ட சத்தத்தில் முனிவரின் தவம் கலைந்து கோபம் எழுந்தது. என்னுடைய தவத்தை கலைத்த நீ சிங்கத்தை வேட்டையாட வந்த நிலையில் சிங்க முகத்துடன் அலைவாய் என சாபமிட்டார்.

தான் செய்த தவறை எண்ணி வருந்திய மன்னன் சாப விமோசனம் தரும்படி முனிவரிடம் வேண்டுகோள் விடுக்க அவர் மனம் இறங்கினார். இதனை அடுத்து விருத்த காவேரி எனப்படும் வெற்றாற்றில் புனித நீராடி இந்த தலத்தில் அமைந்துள்ள பெருமாளை வழிபாடு செய்து வந்தால் சாபம் நீங்கும் என முனிவர் கூற மன்னனும் அதன்படி செய்து வந்தான்.

அவனது பக்தியில் மகிழ்ந்த பெருமாள் கருட வாகனத்தில் காட்சி கொடுத்தார். இதன் பின்னர் சாப விமோசனம் பெற்று அரசனுக்கு மீண்டும் பழைய முகம் கிடைத்தது. மிருகத்தின் முகம் நீங்கி நன்மை பெற்றதால் இந்த கோயில் மிருகசீரிட நட்சத்திர காரர்களுக்கான கோயிலாக அமைந்தது. மிருகசீரிட சக்திகள் நிறைந்த இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தன்று வெற்றாற்றில் நீராடி பெருமாளை வழிப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை சார்ந்துள்ள தீய எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலின் மூலவரான ஆதிநாராயண பெருமாள் பிரயோக சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். அதே சமயம் பெருமாள் கோயில்களில் மூலவர் நின்ற அல்லது சயன கோளத்தில் அருளாசி வழங்குவது வழக்கம். அவருக்கு எதிர் திசையில் கருடாழ்வார் அமைந்திருப்பார். விசேஷ காலங்களில் கருடன் மீது எழுந்தருளி பெருமாள் சேவை செய்வார். ஆனால் இந்த கோயிலில் கருடன் மீது அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார். அதனைக் காண்பதே மிகவும் விசேஷமானது என சொல்லப்படுகிறது.

மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய நட்சத்திரத்தில் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால் அவர்கள் வாழ்க்கையில் அமைந்துள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த கோயிலின் பிரகாரத்தில் அனுமன், நர்த்தன விநாயகர், கருடன் ஆகியோருக்கு சன்னதி உள்ளது. கோயிலானது காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இக்கோயிலில் பெருமாளுக்குரிய அதனை விசேஷ தினங்களும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வாய்ப்பு இருப்பவர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்க்ட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)