Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அக்னி காவடி எடுத்தால் தீராத நோயும் தீருமாம்.. இந்த கோயில் தெரியுமா?

நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்றது. கோயில் வரலாறு, தினசரி நேரங்கள், விழாக்கள் மற்றும் சிறப்புகள் பற்றி நாம் காணலாம். இந்த கோயிலைச் சுற்றி 9 மலைக் குன்றுகள் உள்ளது. இங்கு பங்குனி மாத திருவிழா மிகவும் விசேஷமானது.

அக்னி காவடி எடுத்தால் தீராத நோயும் தீருமாம்.. இந்த கோயில் தெரியுமா?
முத்து மாரியம்மன் கோயில்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 02 Jul 2025 16:58 PM

பொதுவாக மாரியம்மன் கோயில் என்பது தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாக திகழ்கிறது. அதேசமயம் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் மாரியம்மன் கோயில்கள் செயல்படுகின்றன. பராசக்தியின் அவதாரங்களில் ஒன்றான மாரியம்மன், “மழையை தருபவள்” என்பதால் தான் மாரி (மழை) அம்மன் என போற்றப்படுகிறார். வெக்கை நோயில் இருந்து நம்மை காக்கும் மாரியம்மன் பல பெயர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிக் கொடுக்கிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை என்ற இடத்தில் அமைந்திருக்கும் முத்து மாரியம்மன் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலானது தினமும் காலையில் 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 11 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலையில் 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இந்த கோயில் உருவான வரலாறும், அதன் சிறப்புகள் பற்றியும் நாம் காணலாம்.

கோயில் உருவான வரலாறு

நார்த்தா மலையில் இருந்து சரியாக 4 கிலோ மீட்டர் தொலைவில் கீழக்குறிச்சி என்னும் கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு வயலில் இந்த முத்து மாரியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும் அதனை ஊரில் உள்ள குருக்கள் பிரதிஷ்டை செய்து தற்போது உள்ள இடத்தில் சிறிய கோயில் ஒன்றை கட்டியதாகவும் சொல்லப்படுகிறது. பிற்காலத்தில் வந்த திருவண்ணாமலை ஜமீன்தார் வம்சத்தை சேர்ந்த மலையம்மாள் என்ற பெண் மாரியம்மனின் அருளறிந்து தன் சொந்த முயற்சியால் இத்திரை கோயிலை விரைவுப்படுத்தும் நோக்கில் மண்டபங்கள் எழுப்பியும் பல்வேறு விழாக்களை நடத்தியும் புகழ் பெற செய்ததாக சொல்லப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள்

முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ள நார்த்தாமலையை சுற்றிலும் ஆளூருட்டி மலை, பறையர் மலை, உவக்கண்மலை, கோட்டை மலை, மேல மலை, கடம்பர் மலை, மண்மலை, பொன்மலை, பொம்மாடி மலை என ஒன்பது வகையான மலை குன்றுகள் உள்ளது. இதன் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி கதையானது சொல்லப்படுகிறது.

அதாவது ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே போர் ஏற்பட்டபோது அதில் இறந்த வீரர்களை உயிர்பிக்க வடக்கில் இருந்து சஞ்சீவி மலையை அஞ்சனையின் மைந்தனான அனுமான் அடியோடு பெயர்த்து வான் வழியே தூக்கி வந்தார். அப்போது அந்த மலையில் இருந்து பெயர்ந்து விழுந்த துகள்கள் தான் நார்த்தாமலையை சுற்றி இருக்கும் குன்றுகள் என நம்பப்படுகிறது. நாரதர் இந்த மலையில் வந்து தங்கியதால் முதலில் நாரதர்மலை என அழைக்கப்பட்டு காலப்போக்கில் இது நார்த்தாமலை என மருவியதாக சொல்லப்படுகிறது.

விசேஷ வழிபாட்டு தினங்கள்

இந்தக் கோயிலில் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஒன்று கூடுவார்கள் என்பது விசேஷமான தகவலாகும். அது மட்டுமல்லாமல் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை ஒரு நாள் திருவிழா நடைபெறும். இதிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு மாரியம்மனின் அருளை பெற்று செல்வார்கள். மேலும் ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், விஜயதசமி உள்ளிட்ட சிறப்பு நாட்களில் அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.

இங்குள்ள அம்மன் சன்னதியின் வடக்கு பக்க சுவற்றில் கல்லிலான முருகன் எந்திரம் பதிக்கப்பட்டுள்ளது. மூலிகை தாவரங்கள் நிறைந்த இந்த மலை அம்மை நோய் கண்டவர்களுக்கு தீர்வளிக்கும் இடமாக உள்ளது. மாவிளக்கு, அக்னி காவடி, கரும்புத்தொட்டில், பறவை காவடி எடுத்தல், விளக்கேற்றி வழிபடுதல், அம்மனுக்கு புடவை சாற்றுதல் ஆகியவை  அபிஷேக ஆராதனைகளாக செய்யப்படுகிறது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கரும்பு தொட்டில் செய்து வழிபட்டால் விரைவில் வீட்டில் மழலை சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கையாகும். அதுபோல் தீராத நோய்களும் குணமாக அக்னி காவடி எடுக்க வேண்டும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வாய்ப்பிருந்தால் நீங்களும் ஒருமுறை இக்கோயிலுக்கு சென்று வாருங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)