AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நம்பினால் கெடுவதில்லை.. தீராத நோய்களைப் போக்கும் நம்பு நாயகி அம்மன்!

தனுஷ்கோடியில் அமைந்துள்ள நம்புநாயகி அம்மன் கோயில், ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ளது. இங்குள்ள தீர்த்தங்கள் நோய் தீர்க்கும் என்பது நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. குழந்தை பாக்கியம், திருமணத் தடை, மனநோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண இக்கோயிலில் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த கோயிலின் சிறப்புகள் பற்றிக் காணலாம்.

நம்பினால் கெடுவதில்லை.. தீராத நோய்களைப் போக்கும் நம்பு நாயகி அம்மன்!
நம்பு நாயகி அம்மன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 30 Jun 2025 15:50 PM IST

இந்தியாவின் புனித தலங்களில் ஒன்றாக தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் திகழ்கிறது. பித்ரு தோஷம் நீங்க, முன்னோர்களுக்கு தர்ப்பணம் மேற்கொள்ள உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளுக்காக நாடு முழுவதிலும் இருந்து மக்கள் ராமேஸ்வரத்துக்கு வருகின்றனர். மிகச்சிறந்த சுற்றுலா தளமாக திகழும் இந்த ஊரில் தனுஷ்கோடி என்பது வணிகரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது. அப்படியான தனுஷ்கோடியில் அமைந்துள்ள நம்புநாயகி அம்மன் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் சரியாக 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த அம்மன் கோயில் ஆனது அமைந்துள்ளது. இக்கோயில் ஆனது தினமும் காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பின்பு நடை சாற்றப்பட்டு மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை மீண்டும் தரிசனம் செய்வதற்கான கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோயில் உருவான வரலாறு

ஒரு காலத்தில் இந்த இடத்தில் பச்சிமத்துருவன், தட்சிணத்துருவன் என இரண்டு முனிவர்கள் கடுமையான தவம் மேற்கொண்டனர். அதன் விளைவாக இவர்களுக்கு நேரில் காளி வடிவத்தில் பர்வதவர்த்தினி காட்சி கொடுத்தார். அன்று முதல் இரண்டு முனிவர்களும் காளியை வழிபட்டு வந்த நிலையில் அவளின் அருளால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தீர்வுகளை இந்த முனிவர்கள் வழங்கி வந்துள்ளனர். சிங்கள மன்னன் சூலோதரன் என்பவனது பிடியில் ராமேஸ்வரம் இருந்தபோது அவன் வடக்கு பக்கமாக ஒரு உயரமான மண் குன்றின் மேல் கோட்டை அமைத்து ஆட்சி செய்து வந்தான்.

அந்த மன்னனுக்கு தீராத நோய் ஒன்று இருந்த நிலையில் எந்த வைத்தியமும் செய்து பயன் அளிக்கவில்லை. இதனால் காளியின் மகிமையை அறிந்து அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்தான். மன்னனின் சகோதரர்கள் மற்றும் அமைச்சர்கள் இதெல்லாம் நடக்கும் காரியமா என கேலிப்பேச்சு பேசிய நிலையில் சூலோதரன் காளியம்மனே கதி என்ற நிலையில் குடிசை வீட்டில் வசித்து கோயிலுக்கு அருகில் இருந்த நன்னீர் தடாகங்களில் நீராடி நோய் பாதிப்பில் இருந்து தீர்வடைந்தான்.

தன்னுடைய நோயை தீர்த்த காளியம்மனுக்கு சூலோதரன் சிறிய கோயில் ஒன்றை கட்டி தன்னை போல் தீராத நோயால் இங்கு வருபவர்கள் குணமடைந்து செல்வதற்கு ஏற்ப பல வசதிகளையும் செய்து கொடுத்தான். நாயகியை நம்பு, வணங்கினால் வம்பில்லை என்பது காலப்போக்கில்  மருவி நம்பு நாயகி அம்மன் என பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.

கோயிலின் பல்வேறு சிறப்புகள்

இந்தக் கோயிலை சுற்றியுள்ள பல்வேறு நன்னீர் தடாகங்கள் நோய் போக்கும் தன்மையுடையதாக இருப்பதாக இன்றுவரை நம்பப்படுகிறது. அதனால் இவை அனைத்தும் சர்வ லோக நிவாரண தீர்த்தம் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்தடையால் அவதிப்படுபவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர் விரதம் இருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நம்பு நாயகியை வழிபட்டால் விரைவில் தங்களுடைய பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மேலும் மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீராத உடல் நலக் குறைவால் அவதிப்படுபவர்கள் இந்த கோயிலில் மாத கணக்கில் தங்கி  நீராடி குணமடைவதாக சொல்லப்படுகிறது. ராமேஸ்வரம் தனுஷ்கோடி சென்றால் கண்டிப்பாக இந்த கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.

(இறை நம்பிக்கை அடிப்படையில் கோயில் பற்றி பதிவிடப்படும் தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)

Follow Us