Lord Murugan: அடேங்கப்பா.. இந்த முருகன் கோயிலுக்கு இப்படி ஒரு பவரா?
பிரம்மனின் கர்வத்திற்கு பாடம் புகட்ட ஈசன் நினைத்த நிலையில் அதன் விளைவாக காமதேனுவால் இந்த வெண்ணையால் உருவான மலை உருவாக்கப்பட்டதாகவும், இங்கு பாலசுப்பிரமணியனாக முருகன் எழுந்தருளியுள்ளார். யோகி பகவானால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கோயில், கருவூரார் சித்தர் சன்னதியையும் கொண்டு சிறப்புமிக்கதாக திகழ்கிறது.

இந்து மதத்தைப் பொறுத்தவரை முருகப்பெருமான் மிக முக்கிய கடவுளாக வழிபடப்படுகிறார். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறியாக வெளிப்பட்டு பின்னர் குழந்தையாக அவதரித்து கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு பின்னாளில் சிவனுக்கே பாடம் சொன்ன முருகப்பெருமான் வரலாற்றில் தனித்துவ கடவுளாக திகழ்கிறார். அவருக்கு என அனைத்து கோயில்களிலும் தனி சன்னதியே அமைக்கப்பட்டுள்ளது. சிறியது முதல் பெரியது வரை பல கோயில்களில் பல்வேறு பெயர்களில் அவர் அருள்பாலித்து வருகிறார். இப்படியான நிலையில் கரூர் மாவட்டத்தில் வெண்ணைமலை என்ற ஊரில் அவதரித்திருக்கும் முருகன் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலானது தினமும் அதிகாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, முற்பகல் 11 மணி வரை திறந்திருக்கும். பின்னர் நடை அடைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். இரவு 8 மணிக்கு நடை சாற்றப்படும். இந்த கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றிக் காணலாம்.
கோயில் உருவான வரலாறு
முன்பொரு காலத்தில் படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கு தனது தொழிலின் மீது கர்வம் தோன்றியது. இதனை தெரிந்து கொண்ட ஈசன் அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என எண்ணினார். இதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் பிரம்மனுக்கு படைக்கும் திறமை இல்லாமல் போனது. தன் மீதான பிழையை உணர்ந்து கொண்ட பிரம்மன் ஈசனிடம் பொறுத்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். இதற்கிடையில் படைக்கும் தொழிலானது தேவலோக பசுவாக அறியப்படும் காமதேனுவிடம் வழங்கப்பட்டது. அது தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள் பசி இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக மலை போன்று வெண்ணையை குவித்து அருகே தேனு தீர்த்தம் எனப்படும் நீரோடையையும் உருவாக்கியது. இதனால்தான் கடும் வெயில் அடித்தாலும் இன்றும் இந்த வெண்ணைமலை குளுமையாக காட்சியளிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மலையில் முருகப்பெருமான் பாலசுப்பிரமணியர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.
கோயிலின் சிறப்புகள்
இவர் எப்படி இந்த மலையில் கோயில் கொண்டுள்ளார் என பார்த்தால் யோகி பகவான் என்ற முனிவர் இந்த மலையில் அமர்ந்து தியானத்தில் இருந்தார். அப்போது அவருக்கு முருகன் காட்சி கொடுத்து தான் இந்த மலையில் உள்ளதை அனைவரும் அறிய செய்யும்படி கட்டளையிட்டார். இது குறித்து யோகி பகவான் கருவூர் அரசனிடம் தெரிவிக்க மன்னரும் மரத்தடியில் உயர்ந்த கோபுரம் மற்றும் மண்டபம் அமைத்து அதில் முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார்.
மூலவருக்கு வடக்கு பக்கத்தில் முருகனின் யந்திரம் அமைக்கப்பட்ட நிலையில் தெற்கு பக்கத்தில் காசி விஸ்வநாதரும் விசாலாட்சி அம்மையாரும் காட்சி கொடுக்கின்றனர். மலையடி வாரத்தில் ஓடும் தேனு தீர்த்தத்தில் ஐந்து நாட்கள் நீராடி முருகனை வழிபட்டால் குழந்தை பாக்கியம், திருமண தடை, தொழிலில் வளர்ச்சியின்மை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும் என நம்பப்படுகிறது.
தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் கரூரில் இருக்கும் பசுபதீஸ்வரர் கோயில் ஆகிய இரண்டு கோயில்கள் தவிர்த்து மூன்றாவதாக இந்த வெண்ணைமலை முருகன் கோயிலில் தான் கருவூரார் சித்தருக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும். இந்தக் கோயிலில் முருகனுக்கு உரிய அத்தனை விசேஷ நாட்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கரூரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு வாய்ப்பு இருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக வரலாறின்படி சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வமாக விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)