Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

5 அஷ்டமி வழிபாடு.. வேண்டியதை நிறைவேற்றும் கல்யாண காமாட்சி!

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்யாண காமாட்சி அம்மன் கோயிலின் சிறப்புகள், வழிபாட்டு முறைகள் மற்றும் தல வரலாறு பற்றி காணலாம். சூலினி ராஜ துர்க்கையாக அறியப்படும் அம்மன், 18 படிகளில் அருள்பாலிக்கும் அற்புதம், எலுமிச்சை பழம் குத்திய சூலத்தின் தோற்றம் ஆகியவை இதன் சிறப்பாகும்.

5 அஷ்டமி வழிபாடு.. வேண்டியதை நிறைவேற்றும் கல்யாண காமாட்சி!
கல்யாண காமாட்சியம்மன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 12 Jul 2025 13:08 PM

பொதுவாக இந்து மதத்தில் உள்ள அத்தனை ஆண், பெண் தெய்வங்களும் பல்வேறு அவதாரங்களில், வெவ்வேறு பெயர்களில் ஒவ்வொரு ஊரிலும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தகைய தெய்வங்கள் வித்தியாசமான வழிபாடு, விரத முறை, நேர்த்திக்கடன், திருவிழா கொண்டாட்டங்கள் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் பராசக்தியின் அவதாரமாக அறியப்படும் காமாட்சியம்மன் ஒவ்வொரு ஊரிலும் அருள்பாலித்து வருகிறாள். அவர் தருமபுரி மாவட்டத்தில் கல்யாண காமாட்சி என்ற பெயரில் காட்சிக்கொடுக்கிறாள். ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கல்யாண காமாட்சியம்மன் கோயில் உள்ள நிலையில் தருமபுரியிலும் அப்படி ஒரு கோயில் அமைந்துள்ளது விசேஷமாக பார்க்கப்படுகிறது. இந்த கோயில் சிறப்புகள் பற்றிக் காணலாம்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுவட்டார மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த காமாட்சியம்மன் கோயிலானது தினமும் அதிகாலை 5.30 மணி முதல் 11 மணி வரையும், பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

Also Read: அடேங்கப்பா.. இந்த முருகன் கோயிலுக்கு இப்படி ஒரு பவரா?

தல வரலாறு அறிவோம்

இந்தக் கல்யாண காமாட்சி கோயில் தர்மபுரி கோட்டை கோயில் என அனைவராலும் அழைக்கப்படுகிறது. தர்மர் உள்ளிட்டோர் வழிபட்ட சூலினி ராஜ துர்க்கை அனைவராலும் தரிசிக்கப்பட வேண்டிய மிக முக்கிய தெய்வமாக இக்கோயிலில் அருள்பாலிக்கிறாள். மகிஷனை வதம் செய்த நிலையில் சூரன் எருமை தலையும் மனித உடலும் கொண்டு கத்தி மற்றும் கேடயம் ஏந்தி கீழே விழுந்த நிலையில் மூன்று வகை சூலங்களைக் கொண்டு சூலினி மிக அற்புதமாக காட்சி கொடுக்கிறாள். தமிழ்நாட்டில் சூழினிக்காக அமைக்கப்பட்ட ஒரே கோயில் இதுதான் என்பதும், இக்கோயிலில் 18 படிகளுக்கு மேல் நின்று அம்மன் அருள் பாலிப்பதும் மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள்

பொதுவாக அனைத்து அம்மன் கோயிலிலும் அமைக்கப்பட்டிருக்கும் சூலத்தில் எலுமிச்சை பழம் குத்தப்பட்டிருப்பதை கண்டிருக்கலாம். அத்தகைய பழக்கம் இந்த தர்மபுரி பகுதியில் இருந்து தான் பரவியதாக வரலாறு கூறுகிறது. சூலத்தில் எலுமிச்சை பழம் குத்தப்பட்ட காட்சியானது தூணில் செதுக்கப்பட்டு இந்த கோயிலில் உள்ளது.

Also Read:நம்பினால் கெடுவதில்லை.. தீராத நோய்களைப் போக்கும் நம்பு நாயகி அம்மன்!

அமாவாசை நாளில் பெண்கள் இந்த கோயிலில் கலந்து கொண்டு திருப்படி பூஜை செய்கிறார்கள். திருக்கோயிலில் அம்மனை தாங்கி வலம் வருவது தொடங்கி குடை எடுப்பது வரை அனைத்தும் பெண்களால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த கோயில் தாய் கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த கல்யாண காமாட்சியை வேண்டுபவர்களுக்கு வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

அதே சமயம் ஆண் பெண் யாராக இருந்தாலும் ஐந்து அஷ்டமி திதிகள் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் நிறைவேறி நல்வாழ்க்கை அமையும் என நம்பப்படுகிறது. வருடத்தில் ஆடி மாதத்தில் வரும் மூன்றாவது செவ்வாய்க்கிழமை மட்டுமே மாலை 4:30 மணி முதல் இரவு 9 மணி வரை முழுவதுமாக நம்மால் அம்மனை தரிசிக்க முடியும் ஏனைய நாட்களில் முகம் மட்டுமே தரிசிக்கும்படி விதிமுறை உள்ளது. திருமணத் தடை, குழந்தை பாக்கியம், இல்லறப் பிரச்னை, வியாபார வளர்ச்சி என அனைத்து பிரச்னைகளுக்கும் இந்த கல்யாண காமாட்சி தீர்வளிப்பதாக நம்பப்படுகிறது. வாய்ப்பிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கு அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)