இல்லற வாழ்க்கை செழிக்க அருளும் பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?
காங்கேயம் வெங்கடேச பெருமாள் கோயில், திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலாக திகழ்கிறது. பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கடேச பெருமாள் மூலவராக அருள்பாலிக்கிறார். நான்கு திசைகளிலும் முருகன் கோயில்கள் அமைந்துள்ள நிலையில் நடுவில் உள்ள மலைக்குன்றில் இக்கோயில் அமைந்திருப்பது சிறப்பானதாகும்.

பெருமாள் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது திருப்பதி ஏழுமலையான் தான். விஷ்ணுவின் மறுபெயரான பெருமாளுக்கு பெரு+மால், அதாவது பெரிய திருமால் என்பதே மருவி பெருமாளாக மாறியதாக சொல்லப்படுகிறது. வைணவ சமயத்தினரின் வழிபாட்டு கடவுளாக உள்ள பெருமாள் அனைத்து சமய பக்தர்களாலும் சேவிக்கப்படுகிறார். இப்படியான நிலையில் உள்ளூர் முதல் உலகம் வரையில் பெருமாளுக்கு என தனித்துவமான கோயில்களும் உள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் அமைந்திருக்கும் பெருமாள் மலையில் உள்ள அருள்மிகு வெங்கடேச பெருமாள் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலானது தினசரி காலையில் 8.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 11 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும். இந்த கோயில் பற்றிய பல்வேறு சிறப்பு தகவல்களைக் காணலாம்.
தல வரலாறு
இந்தக் கோயிலில் மூலவராக வெங்கடேச பெருமாளும், தாயாராக பூதேவி மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர். இந்தக் கோயில் அமைந்துள்ள இடமே மிகச் சிறப்பான ஒன்றாகும். அதாவது இந்த பெருமாள் மலையை சுற்றிலும் கிழக்கு திசையில் உள்ள சிவன் மலையில் சுப்பிரமணிய சுவாமியும், மேற்கு திசையில் அமைந்திருக்கும் அழகு மலையில் முத்துக்குமார சுவாமியும் அமைந்துள்ளனர்.
வடக்கே அமைந்திருக்கும் கதித்த மலையில் வெற்றி வேலாயுத சுவாமியும், தெற்கு பக்கமாக உள்ள வட்டமலையில் உத்தண்ட வேலாயுத சாமியும் அருள் பாலிக்கின்றனர். இப்படியாக நான்கு திசைகளிலும் தமிழ் கடவுளான முருகப்பெருமான் காட்சி கொடுக்கும் நிலையில் அதன் நடுவே அவரது தாய் மாமனான பெருமாள் கோயில் கொண்டிருப்பது சிறப்பான ஒன்றாகும். இந்தக் கோயில் பாண்டிய மன்னரால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
ஒரு சமயம் சிறு தொழில் செய்யும் பக்தர் ஒருவர் தன்னுடைய தொழிலில் நஷ்டம் அடைந்ததால் மிகுந்த வேதனையோடு இந்த பெருமாளிடம் வந்து தினமும் உன்னை துதிக்கிறேன். ஆனால் என் கஷ்டங்கள் தீரவில்லை. இனியாவது எனக்கு கருணை காட்ட வேண்டும் என மனமுருக வேண்டினார். அன்றிரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய பிரசன்ன வெங்கடேச பெருமாள், உன் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து அனைத்து விதமான செல்வ வளங்களும் உன்னை வந்து சேரும் என கூற, அடுத்த சில ஆண்டுகளில் அந்த பக்தர் தொழிலில் லாபம் பெற்று பெரும் முதலியாளியாக மாறினார். தனக்கு வாழ்வு கொடுத்த பெருமாளுக்கு நன்றி கடனாக இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகளை அவர் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கோயிலின் சிறப்புகள்
பல ஏகாதசி விரதங்களை கடைபிடிப்பதற்கு சமமாக விஷ்ணுபதி புண்ணிய கால பூஜை ஆனது இந்த கோயிலில் நடைபெறுகிறது. இதனை மேற்கொண்டால் அவர்களுக்கு நற்பயன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், வருண ஹோமம் ஆகியவை இக்கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்த பூஜையில் கலந்து கொண்டு பெருமாளை வழிப்பட்டால் தொழில் வளர்ச்சி, திருமண யோகம், மகப்பேறு, குடும்ப ஒற்றுமை, கல்வி வளம் உள்ளிட்ட அனைத்து சகல விஷயங்களிலும் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.
மேலும் இந்தப் பெருமாள் கோயிலில் ராமானுஜர் வந்து வழிபட்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாது மூன்று ஆஞ்சநேயர்கள் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். மேலும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பெருமாளுக்கு நன்றி கடனாக பக்தர்கள் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக படைத்து வழிபடுகின்றனர். பிரிந்த கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கவும், கடன் தொல்லை அகலவும், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தீரவும் இந்த பெருமாளை ஏராளமானோர் வழிபட்டு பலன் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் நீங்களும் ஒருமுறை சென்று பாருங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இககட்டுரையில் கோயில் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)