நவலிங்க தரிசனம் பார்க்கணுமா? – இந்த ஒரே கோயில் போதும்!
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜபதி கைலாசநாதர் கோயில், நவகிரகங்களில் கேது பகவானுக்குரிய தலமாகும். அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவரின் தவத்தின் பயனாக உருவான இக்கோயில், வெள்ளப்பெருக்கால் அழிந்து மீண்டும் 2011ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கண்ணப்ப நாயனார் சன்னதி உள்ளிட்ட பல சிறப்புகளை இக்கோயில் கொண்டது.

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை நவக்கிரங்களின் செயல்பாடுகள் தான் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றி வருவதாக சொல்லப்படுகிறது. பூலோகத்தில் இத்தகைய நவக்கிரகங்களுக்கு என தனிக்கோயில்களும், தெய்வங்களும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தின் உயிர் நாடியாக திகழும் தாமிரபரணி நதியானது தென்பொதிகை மலையான பாபநாசத்தில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கரையைக் கடக்கிறது. இப்படியான நிலையில் இந்த தாமிரபரணி நதிக்கரையில் நவக்கிரகங்களுக்கும் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம் என பல இடங்களில் கோயில் அமைந்துள்ளது.
கேது பகவானுக்குரிய தலம்
அப்படியான நிலையில் இந்த கட்டுரையில் நவகைலாயங்களில் கேது பகவானுக்குரிய தலமாக திகழும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ராஜபதி கைலாச நாதர் திருக்கோயில் பற்றிக் காணலாம். இந்த திருக்கோயிலானது தினந்தோறும் காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணி நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும். ஞாயிற்றுகிழமை மட்டும் பிற்பகல் 1.30 மணி வரை நடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கோயில் உருவான வரலாறு
அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் ஜீவ முக்தி அடைய எண்ணி சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டார். அப்போது அவர் முன் தோன்றிய ஈசன் “குருவருள் பெற்று உய்க” என கூறி மறைந்தார். தொடர்ந்து அகத்தியரை அணுகி விவரத்தை உரோமச முனிவர் சொல்ல, அவரோ, இறைவனுக்கு படைத்த தாமரை மலர்களை தாமிரபரணி நதிக்கரையில் வீசு. அது எங்கெல்லாம் ஒதுங்குகிறதோ அங்கு சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்கு. அப்படியாக இந்த நதி கடலில் கலக்கும் இடத்தில் நீ ஜீவ முக்தியடைவாய் என கூறினார். அப்படியாகத்தான் நவகைலாய கோயில்கள் உருவானது.
Also Read: இல்லற வாழ்க்கை செழிக்க அருளும் பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?
அப்படியான தாமரை மலர்களில் எட்டாவது மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இருந்த இந்த பகுதியில் கரை ஒதுங்கியது. மன்னரின் அரண்மனை இருந்ததால் இந்த ஊர் ராஜபதி என அழைக்கப்பட்டு வந்தது. உரோமச முனிவர் அகத்தியரின் உத்தரவுப்படி இங்கு சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்து வந்தார். அந்த இடத்தில் சந்திரகுல பாண்டிய மன்னன் கோயில் எழுப்பியதாக கூறப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் இந்த கோயில் முழுவதுமாக அழிந்து போனது.
இது நீண்ட நாட்களாக அப்பகுதியில் இருந்த சிவனடியார்கள் மனதில் உறுத்தலாக இருந்து கொண்டிருந்தது. இதனை எடுத்து அனைவரும் ஒன்று கூடி முன்பு கோயில் இருந்த இடத்திலேயே மீண்டும் புதிய கோயிலை அமைத்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தக் கோயிலின் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோயிலின் சிறப்புகள்
இந்தக் கோயில் ஆனது கேது பகவான் வணங்கிய தலமாக போற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவு கண்ணப்ப நாயனார் தனி சன்னதியில் காட்சி கொடுக்கிறார். மேலும் இந்த கோயிலில் தினம் தோறும் நித்ய அக்னி எனப்படும் விநாயகர், கைலாசநாதர் மற்றும் சௌந்தரநாயகி அம்பாள் ஆகியோருக்கு மூன்று கலசங்கள் வைத்து யாகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. மேலும் ஈசனுக்கு பஞ்ச தீபாரதனை, ஞாயிறு தோறும் நண்பகல் 12 மணி முதல் 1:30 மணி வரை நடைபெறும் பூஜை, அதே போல் செவ்வாய் என்று காலை 9 மணி முதல் 10:30 மணி வரை நடக்கும் பரிகார பூஜையிலும் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
Also Read: அக்னி காவடி எடுத்தால் தீராத நோயும் தீருமாம்.. இந்த கோயில் தெரியுமா?
மேலும் சர்ப்ப தோஷம், திருமண தடை, பிதுர் தோஷம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இக்கோயில் சிறந்த பரிகார தலமாக திகழ்வதாக கூறப்படுகிறது. பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரக சன்னதி இருக்கும். ஆனால் இந்த கோயிலில் நவலிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இக்கோயில் காளகஸ்திக்கு இணையான தலமாக தென்காளகஸ்தி என அழைக்கப்படுகிறது.
இந்த கோயிலில் சிவனுக்குரிய அத்தனை விஷேச தினங்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலில் லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும் நான்கு சக்கர வடிவங்கள் உள்ள நிலையில் கைலாசநாதர் காட்சி கொடுக்கிறார். அவருக்கு இடது பக்கத்தில் அம்பாளாக சௌந்தரநாயகி அருள்பாலிக்கிறார். மேலும் ஆதி கைலாசநாதர், காளஹஸ்தி விநாயகர், 63 நாயன்மார்கள், வள்ளி தெய்வானை சமேத முருகன், பைரவர் ஆகியோருக்கும் இக்கோயிலில் தனி சன்னதி உள்ளது. வாய்ப்பு இருப்பவர்கள் இந்த கோயிலுக்கு ஒரு முறை சென்று வழிபட்டு பலன்களை பெற்று மகிழுங்கள்.
(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கோயில் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)