கெட்ட கனவால் அவதிப்படுகிறீர்களா? – நீங்கள் செல்ல வேண்டிய கோயில்!
தூத்துக்குடி மாவட்டம், வசவபுரத்தில் அமைந்துள்ள அலங்கார செல்வி அம்மன் கோயில், கெட்ட கனவுகளால் அவதிப்படுவோருக்குத் தீர்வு அளிப்பதாக நம்பப்படுகிறது. காளியின் அம்சத்தைக் கொண்ட இந்த அம்மன், சாந்த குணத்துடன் அருள்பாலிக்கிறாள். பண்டைய பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக கனவு என்பது மனிதர்கள் ஆகிய அனைவருக்கும் வரக்கூடிய ஒரு நிகழ்வு தான் என்றாலும் சில நேரங்களில் வரக்கூடிய கெட்ட கனவுகள் நம் மகிழ்ச்சியையும், மனதையும் பாதித்து மிகப்பெரிய நினைவுகளை ஏற்படுத்துகிறது. கெட்ட கனவுகள் என்பது நாம் செய்த தவறுகளின் பின்விளைவு என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். நம்முடைய எண்ணங்கள், பார்க்கும் காட்சிகள், பயம் போன்றவை தான் கனவுகளாக மாரி நமக்குள் தோன்றுகின்றது. இப்படியான நிலையில் தொடர்ச்சியாக கனவு கண்டு பயம் கொண்டவர்களாக இருந்தால் இந்த கோயிலுக்கு சென்றால் பலன்கள் கிடைக்கும் என ஆன்மீக அன்பர்கள் தெரிவிக்கின்றனர். அப்படிப்பட்ட கோயில்பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். அந்த கோயில் ஆனது தூத்துக்குடி மாவட்டம் வசவபுரம் பகுதியில் அமைந்துள்ள அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் ஆகும். இந்த கோயிலின் சிறப்புகள் பற்றி நாம் காணலாம்.
இந்த அலங்கார செல்வி அம்மன் கோயில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலையில் 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்தக் கோயிலில் பார்ப்பதற்கு காளியின் அம்சத்தை கொண்டிருந்தாலும் சாந்தமான குணத்துடன் நான்கு கைகளுடன் பத்மினி அம்சத்தில் அலங்கார செல்வி அருள் பாலிக்கிறாள். அவளின் கைகளில் உடுக்கை கயிறு சூலம் கபாலம் கேடயம் கத்தி வில் அம்பு மணி கொப்பரை ஆகியவை உள்ளது.
கோயில் உருவான வரலாறு
விநாயகரையும் துர்க்கையையும் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக வணங்குகிறார்கள். வெற்றியின் சின்னத்திற்கு காளியின் அம்சமாக உள்ள துர்கையே அடையாளம் காட்டப்படுகிறாள். இவளே காலியாகவும் சரஸ்வதியாகவும் லட்சுமியாகவும் விளங்குகிறாள். தென் மாவட்டங்களை பொறுத்தவரை ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் காளியின் அம்சம் கொண்ட வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில்கள் ஒவ்வொரு ஊரிலும் திசைக்கு ஒன்றாக அமைந்துள்ளது. அப்படியாக பாண்டிய மன்னர் காலத்தில் இந்த அலங்கார செல்வி அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இப்படியாக காவல் தெய்வமாக விளங்கும் இந்த அம்மன் பல்வேறு வகையான பலன்களையும் பக்தர்களுக்கு அருளுகிறார் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே கருவறையில் மூன்று அம்மன்கள்.. இந்த கோயில் தெரியுமா?
கோயிலின் சிறப்புகள்
இந்தக் கோயிலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் ராகு காலத்தில் பெண் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். அதேபோல் மாதம் தோறும் சுக்லபட்ச அஷ்டமி மற்றும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இங்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அம்மனுக்கு கிரீடம் மட்டும் அவளின் உருவங்கள் செய்து காணிக்கையாக வழங்குகின்றனர்.
மேலும் கனவால் பயம் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை வாழாமல் தவித்து வருபவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் அவர்களுக்கு அலங்கார செல்வியின் அருள் கிடைத்து வாழ்க்கையில் நன்மை விளையும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நாக தோஷம் திருமணத்திற்காக காத்திருக்கும் நபர்கள், குழந்தை பாக்கியத்திற்காக ஏங்குபவர்கள், நவகிரக பாதிப்பால் அவதிப்பட்டவர்கள் என பலருக்கும் இந்த கோயிலில் வழிபாடு தீர்வளிப்பதாக நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு.. பக்தர்களின் நம்பிக்கை காக்கும் மாசாணி அம்மன்!
இக்கோயிலில் பைரவர், மாடன், மாடத்தி ஆகியோருக்கு தனித்தனி சன்னதியே உள்ளது. அலங்கார செல்வியின் தங்கையாக அறியப்படும் காளியம்மன் கோயில் 200 அடி தூரத்தில் உள்ளது. இந்த அம்மனுக்கு வைகாசி மாதத்தில் கொடை விழா மற்றும் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. வாய்ப்பிருந்தால் நீங்களும் ஒருமுறை சென்று வழிபட்டு பலன்களைப் பெறுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)