Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பலன்களை அள்ளித்தரும் ஆடி வெள்ளிக்கிழமை விரதம்.. இருப்பது எப்படி?

ஆடி மாதம், குறிப்பாக வெள்ளிக்கிழமைகள், பெண் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த நாட்களில் விரதம் இருந்து அம்பாளை வழிபடுவதால் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும் என நம்பப்படுகிறது. விரதம் இருக்கும் முறை, வழிபாட்டு முறைகள் மற்றும் பெறக்கூடிய நன்மைகள் பற்றி நாம் காணலாம்.

பலன்களை அள்ளித்தரும் ஆடி வெள்ளிக்கிழமை விரதம்.. இருப்பது எப்படி?
ஆடி வெள்ளி விரதம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 17 Jul 2025 11:23 AM

பொதுவாக ஆன்மிகத்தில் ஆடி மாதம் என்பது பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு ஏற்ற மாதம் என சொல்லப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சிவனை விட பராசக்தியின் தாக்கம் வீரியமாக இருக்கும் என்பது ஐதீகமாகும். அதனால் தான் ஆடி மாதம் சாஸ்திரத்தில் ஆன்மிக மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் நம் எண்ணம் முழுக்க இறை சிந்தனையாகத் தான் இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இப்படியான ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மிகவும் விசேஷம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆடி ஞாயிற்றுக்கிழமை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி 18ம் பெருக்கு, ஆடி பௌர்ணமி என அத்தனை விசேஷ நாட்கள் வருகிறது. இந்த நிலையில் நாம் இக்கட்டுரையில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை இருக்க வேண்டிய விரதம் பற்றி காணலாம்.

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை

2025 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த ஒரு மாதத்தில் 5 வெள்ளிக்கிழமைகள் வருகிறது. அதன்படி ஜூலை 18, ஜூலை 25, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய தினங்கள் வெள்ளிக்கிழமை ஆகும். இப்படியான நிலையில் இந்த நாட்களில் நாம் விரதம் இருந்து வழிபட்டால் கேட்டதெல்லாம் கிடைக்கும், வாழ்க்கையில் இருந்த துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும், திருமணத்தடை, குழந்தைப்பேறு உள்ளிட்ட பிரச்னைகள் சரியாகும் என சொல்லப்படுகிறது.

Also Read: Aadi Month: ஆடி மாதத்தின் முக்கியத்துவம் தெரியுமா?

ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

பொதுவாக ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மாலை வேலைகளில் அம்பிகையை ராஜராஜேஸ்வரி, அகிலாண்டேஸ்வரி, புவனேஸ்வரியாக பாவித்து கோயில்களிலும், வீடுகளின் பூஜை அறைகளிலும் அலங்காரம் செய்து வழிபாடு நடைபெறுவது உண்டு. அதனால் தான் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் விரதம் இருந்து வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது. முடியாதவர்கள் ஏதேனும் ஒரு வாரமாவது விரதம் கடைபிடித்து அதற்கான பலன்களை பெற வேண்டும் என முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அதிகாலையில் இருந்து புனித நீராட வேண்டும். பின்னர் சுத்தமான ஆடை அணிந்து வீட்டின் பூஜை அறையில் இறை வழிபாடு செய்து விளக்கேற்றி வணங்க வேண்டும். முடிந்தவர்கள் காலையில் அருகில் உள்ள கோயிலுக்கு செல்லலாம். வீட்டில் ஏதேனும் ஒரு அம்மனின் படம் இருந்தால் அதன் முன் நெய் தீபம் ஏற்றி வைக்கலாம். எதுவும் இல்லை என்றால் விளக்கை மகாலட்சுமியாக பாவித்து விளக்கேற்றி பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

Also Read: Astrology: 2027 வரை சனியின் பார்வையால் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம்!

விரதம் இருக்க முடிந்தவர்கள் காலை மற்றும் மதியம் ஆகிய இரு வேளைகளிலும் இருக்கலாம். ஒருவேளை சூழல் காரணமாக முடியாதவர்கள் காலை உணவு எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் பால் மற்றும் பழம் உண்டு விரதத்தை கடைபிடிக்கலாம். மாலையில் கண்டிப்பாக வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும். அப்போது அம்பிகைக்குரிய மந்திரம், பாடல்கள் என எதை வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம். இந்த வழிபாட்டின் போது உங்களால் முடிந்த இனிப்பு பதார்த்தத்தை நைவேத்தியமாக வைக்கலாம். எதுவும் முடியாவிட்டால் இனிப்பு கலந்த பாலை வைத்து வழிபடலாம். இறை வழிபாடு முடிந்த பிறகு விரதத்தை முடித்து இரவு உணவு எடுத்துக் கொள்ளலாம்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)