Aadi Month: 2025 ஆடி மாதப் பிறப்பு எப்போது? .. அதன் முக்கியத்துவம் தெரியுமா?
ஆடி மாதம் தமிழர்களின் ஆன்மீக மாதமாகக் கருதப்படுகிறது. பெண் தெய்வ வழிபாடு, ஆடிப்பெருக்கு போன்ற விழாக்கள் இம்மாதத்தில் கொண்டாடப்படுகின்றன. பண்டைய நம்பிக்கைகளின்படி, இம்மாதத்தில் விதைப்பு நல்ல விளைச்சலைத் தரும் என நம்பப்படுகிறது. ஆடி மாதத்தின் சிறப்புகள் மற்றும் முக்கிய நாட்களைப் பற்றி காணலாம்.

பொதுவாக இந்த உலகில் ஏராளமான மதங்களும், அதன் உட்பிரிவுகளும் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு மதத்திற்கும் ஆண்டின் 12 மாதங்களில் ஏதேனும் சில மாதங்கள் புனித காலங்களாக கருதப்படும். கிறிஸ்தவர்களுக்கு ஆங்கிலேய நாட்காட்டி என்னும் போது, இஸ்லாமியர்களுக்கென தனி நாட்காட்டி உள்ளது. அதேபோல் இந்து மதத்தைப் பொறுத்தவரை தமிழ் மாதங்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது. சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் ஆடி மாதம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது ஆன்மிக மாதம் தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆடி மாதம் என்பது பெண் தெய்வங்களுக்குரிய மாதமாக போற்றப்படுகிறது. இந்த ஒரு மாதம் பிரபலமான கோயில்கள் மட்டுமல்லாமல் மூலை, முடுக்குகளில் உள்ள சிறிய கோயில்கள் கூட திருவிழா கொண்டாட்டங்களால் களைக்கட்டும். அப்படியான ஆடி மாதத்தின் முக்கியத்துவம் பற்றிப் பார்க்கலாம்.
2025 ஆடி மாதம் பிறப்பு எப்போது?
2025 ஆம் ஆண்டு ஆடி மாதம் வரும் ஜூலை 17 ஆம் தேதி வியாழக்கிழமை பிறக்கிறது. மறுநாளே ஆடி வெள்ளிக்கிழமை வருவது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. இதனால் மாதப்பிறப்பில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.
Also Read: நம்பினால் கெடுவதில்லை.. தீராத நோய்களைப் போக்கும் நம்பு நாயகி அம்மன்!
ஆடி மாத முக்கியத்துவம்
பண்டைய நூல்களில் ஆடி மாதம் மிகவும் சக்தி வாய்ந்த மாதமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆடிப்பட்டம் தேடி விதை என்பது மிகவும் பிரபலமான சொல்லாடை ஆகும். இந்த மாதத்தில் விதை விதைத்தால் நல்ல விளைச்சல் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இம்மாதம் தான் காற்றுடன் கூடிய பருவமழையின் தொடக்க காலமாக பார்க்கப்படுகிறது. நம்மையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து பெண் தெய்வங்களை மனதார வேண்டி வழிபட்டால் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
ஆடி மாதம் வரும் செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகியவை மிகவும் விசேஷமான நாளாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஆடி 18ஆம் நாள் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம் ஆகியவையும் இம்மாதத்தின் முக்கிய விசேஷ நாளாகும். மேலும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சணாயன காலமாக பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் நாம் புனித நதிகளில் நீராடினால் மிகவும் விசேஷமாகும்.
Also Read: கோவையின் காவல் தெய்வம்.. ‘கோனியம்மன்’ கோயில் பற்றிய சிறப்புகள்!
ஆடி மாதம் எதையும் பெரிதாக செய்ய மாட்டார்கள். இம்மாதம் முழுக்க தெய்வங்களுக்காக ஒதுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை பீடை மாதம் என சொல்வார்கள். அது தவறானது. பீட மாதம் என்பதே சரியான வார்த்தையாகும். இறைவனை பீடமாக நம் மனதில் வைத்து மனதார இம்மாதம் முழுவதும் வேண்டினால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பும் வரும். ஆக மொத்தத்தில் ஆடி மாதம் மிகச்சிறப்பான மாதம் என்பதால் பெண் தெய்வங்களை வழிபட்டு அதற்கேற்ப பலன்களைப் பெற்று மகிழுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)