Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கிரகங்களின் தாக்கத்தால் அவதியா? – இப்படி விளக்கேற்றினால் தீர்வு கிட்டும்!

இந்து மதத்தில் தீபமேற்றி வழிபாடு செய்வது மிகவும் முக்கியமானது. விளக்குகள் தெய்வீக ஒளியின் அடையாளமாக கருதப்படுகின்றன. நவகிரகங்களின் தாக்கத்திலிருந்து விடுபடவும், குடும்பத்தில் மகிழ்ச்சியைப் பெருக்கவும் தீப ஆராதனை உதவும். எந்தக் கிரகத்திற்கு என்ன வகையான விளக்கு, எண்ணெய், மற்றும் திசை சிறந்தது என்பது பற்றிப் பார்க்கலாம்.

கிரகங்களின் தாக்கத்தால் அவதியா? – இப்படி விளக்கேற்றினால் தீர்வு கிட்டும்!
நவக்கிரக தீபம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 10 Jul 2025 15:30 PM IST

இந்து மதத்தைப் பொறுத்தவரை இறை வழிபாடு என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த வழிபாட்டின்போது தீபமேற்றி வணங்குவதற்கு என ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. காரணம் விளக்குகள் கடவுளின் உண்மையான உருவகமாகக் கருதப்படுகின்றன. அதிலிருந்து வரும் வெளிச்சம் கடவுள் நம்மை இருளில் இருந்து நீக்கி ஒளிமயமான வாழ்க்கைக்கு கூட்டிச் செல்வார் என்பது நம்பிக்கையாகும். இப்படியான நிலையில் இறை வழிபாடு முடிந்த பிறகு விளக்குகளை வழிபடுவது கடவுளின் ஆசீர்வாதங்களைத் தருவதாகவும், குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும் தருவதாகவும் நம்பப்படுகிறது. ஒரே சமயத்தில் பல விளக்குகளை ஏற்றுவது ஞானம் மற்றும் மங்களகரமானதன் அடையாளமாக கருதப்படுகிறது. அதேசமயம் இந்த விளக்குகளால் நவகிரகங்கள் கொடுக்கும் தாக்கத்தால் ஏற்படும் சிரமங்கள் மற்றும் அசுப விளைவுகளை தடுக்க முடியும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிப் பார்க்கலாம்.

கிரகங்களின் தாக்கங்கள்

ஜோதிடத்தில் நவக்கிரகங்கள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. சொல்லப்போனால் இந்த நவக்கிரகங்கள் தான் மனித வாழ்வை இயக்குவதாக நம்பப்படுகிறது. அதனால் தான் இதன் செயல்பாடுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றது. ஜாதகத்தில் நிகழும் மாற்றத்தால் யாராவது ஏதேனும் ஒரு கிரகத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த கிரக தோஷத்திலிருந்து நிவாரணம் பெற விளக்குகள் தொடர்பான சில பரிகாரங்களைச் செய்யலாம்.

Also Read: குடும்ப ஆரோக்கியம்.. கவனிக்க வேண்டிய 8 வாஸ்து விஷயம்!

எந்த பகவானுக்கு என்ன விளக்கு ஏற்றலாம்?

  • சூரிய பகவானுக்கு செம்பு அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட விளக்கைப் பயன்படுத்துவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சூரிய பகவானின் அருளைப் பெற, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்தின்போது பசு நெய் அல்லது எள் எண்ணெய் கொண்டு விளக்கேற்ற வேண்டும். இந்த விளக்கை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும்.
  • செவ்வாய் பகவானுக்கும் களிமண் அல்லது செம்பு விளக்குகளையும் ஏற்றலாம். இதற்காக, செவ்வாய்க்கிழமை தெற்கு திசை நோக்கி எள் எண்ணெயால் தீபம் ஏற்றவும். இதைச் செய்வதன் மூலம், செவ்வாய் தொடர்பான பிரச்சினைகள் அகலும்.
  • புதன் பகவானுக்கு வெண்கலம் அல்லது பித்தளையால் செய்யப்பட்ட விளக்கில் பசு நெய் சேர்த்து தீபம் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு வடக்கு அல்லது வடகிழக்கு திசை சிறந்தது என்று கருதப்படுகிறது.
  • குரு அல்லது வியாழன் கிரகத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து நல்ல பலன்களைப் பெற, பசு நெய்யை பித்தளை விளக்கில் ஊற்றி தீபமேற்ற வேண்டும். இதற்கு வடகிழக்கு திசை சிறந்தது என்று கருதப்படுகிறது.

Also Read: இல்லற வாழ்க்கை செழிக்க அருளும் பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?

  • சுக்கிரனுக்கு, வெள்ளி அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட விளக்கை ஏற்றலாம். இதற்கு நெய் அல்லது வெள்ளை எள் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். இந்த விளக்கை ஏற்றுவதற்கு கிழக்கு திசை சிறந்தது என்று கருதப்படுகிறது.
  • சந்திர தோஷம் நீங்க திங்கட்கிழமை இரவு அல்லது சந்திர உதயத்தின் போது சந்திரனுக்கு தீபம் ஏற்றலாம். விளக்கில் கற்பூரம் அல்லது நெய்யை வைத்து மேற்கு நோக்கி வைக்கவும். இதைச் செய்வதன் மூலம் ஒருவர் மன அமைதியைப் பெறுவதாக சொல்லப்படுகிறது
  • சனி பகவானின் அருளைப் பெற, சனிக்கிழமை நாளில் களிமண் அல்லது இரும்பினால் செய்யப்பட்ட விளக்கில் தீபத்தை ஏற்றலாம். கடுகு எண்ணெய் அல்லது கருப்பு எள் எண்ணெய் இதற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த விளக்கை ஏதேனும் மரத்தின் கீழ் அல்லது வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்கவும்.
  • ராகு பகவானுக்கு கடுகு எண்ணெயுடன் சனி அல்லது புதன்கிழமைகளில் களிமண் அல்லது இரும்பாலான விளக்குகளில் தீபம் ஏற்றலாம். வீட்டின் தென்மேற்கு மூலையிலோ அல்லது துளசிக்கு அருகிலோ இந்த தீபத்தை வைப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
  • செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் கேதுவுக்கு கடுகு எண்ணெய் விளக்கேற்றுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. வீட்டின் தெற்கு திசையில் இந்த விளக்கை ஏற்றலாம்.

(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)