Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kathayee Amman: ஒரே கருவறையில் மூன்று அம்மன்கள்.. இந்த கோயில் தெரியுமா?

சோழர் கால வரலாற்றுடன் தொடர்புடைய இந்த கோயிலில், காத்தாயி அம்மன், பூங்குறத்தி அம்மன், பச்சை வாழியம்மன் ஆகிய மூன்று அம்மன்கள் அருள்பாலிக்கின்றனர். ஆடி மாதம் மற்றும் நவராத்திரி விழாக்கள் பிரசித்தி பெற்றவையாகும். பக்தர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

Kathayee Amman: ஒரே கருவறையில் மூன்று அம்மன்கள்.. இந்த கோயில் தெரியுமா?
காத்தாயி அம்மன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 19 Jul 2025 12:44 PM

ஆடி மாதத்தில் சிறியது முதல் பெரியது வரையிலான அம்மன் கோயில்கள் களைகட்டி விடும். திருவிழாக்கள், பக்தர்களின் நேர்த்திக்கடன் என இந்த மாதம் முழுவதும் மிகவும் விசேஷமாக இருக்கும். சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஆடி மாதம் ஆன்மிக மாதம் என அழைக்கப்பட்டு வருகிறது. அந்த அளவிக்கு இம்மாதத்தில் பெண் தெய்வங்களுக்கு மிகுந்த சக்தி இருக்கும் என நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரபலமாக பக்தர்களிடையே திகழும் கோயில்கள் பற்றி தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதியில் இருக்கும் காத்தாயி அம்மன் திருக்கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலானது தினந்தோறும் காலை 6 மணி நடை திறக்கப்பட்டு 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மாலையில் 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு 8.30 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம்.

கோயில் உருவான வரலாறு

சோழர்கள் தங்கள் குலதெய்வமான அம்பிகையை பல்வேறு பெயர்களில் வழிபாடு செய்து வந்த நிலையில் முதலாம் விக்ரம சோழன் காத்தாயி அம்மனை வணங்கி வந்தான். ஒருமுறை விக்கிரம சோழன் மதுரையை ஆண்டு வந்த வமிசசேகர பாண்டிய மன்னன் மீது படையெடுத்தான். ஆனால் அந்த மன்னனுக்கோ போர் செய்வதிலும் உயிர்களை பலி வாங்குவதிலும் எந்த உடன்பாடும் இல்லை. இதனால் சிவபக்தனான அந்த மன்னன் சோழ அரசனிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுமாறு சொக்கநாதரிடம் வேண்டினான்.

இதையும் படிங்க: அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு.. பக்தர்களின் நம்பிக்கை காக்கும் மாசாணி அம்மன்!

அவனது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் குறவன் வேடத்தில் சென்று விக்கிரம சோழனுடன் போரிட்டார். அவரை எதிர்க்க முடியாத மன்னன் ஒரு கட்டத்தில் வந்திருப்பது சிவன் என்பதை அறிந்து அவர் பாதத்தில் சரணடைந்தார். உடனடியாக அவனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான் மண் ஆசை கொண்டு செய்யப்படும் போரால் உயிரிழப்பு தான் ஏற்படும், எந்த நன்மையும் உண்டாகாது என உபதேசம் செய்தார். மேலும் நீ மறுபிறப்பிலும் மன்னனாக பிறந்து நல்லாட்சி கூறுவாய் என ஆசீர்வதித்தார்.

அந்த மன்னனே மறுபிறப்பில் இரண்டாம் விக்கிரம சோழனாக பிறந்தான். முற்பிறப்பில் தான் வழிபட்ட காத்தாயி அம்பாளை தொடர்ந்து வழிபட்ட அந்த மன்னன் தனது பங்காளிகளிடமிருந்து ஏற்பட்ட தொந்தரவை தவிர்க்கும் பொருட்டு பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டினான். அதன்படி குறத்தி வேடத்தில் வந்த காத்தாயி அம்மன் பிரச்சினையை தீர்த்து வைக்க மகிழ்ந்த இரண்டாம் விக்கிரம சோழன் காத்தாயி அம்பாளுக்கு கோயில் எழுப்பி பிரதிஷ்டை செய்தான்.

இதையும் படிங்க: ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களுக்கு இலவச ஆன்மிகப் பயணம்: செல்வது எப்படி?

கோயிலின் சிறப்புகள் 

இந்த கோயிலில் மூலஸ்தானத்தில் மூன்று அம்மன்கள் அருள்பாலிப்பது மிக சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதில் காத்தாயி அம்பாள் முருகனை இடுப்பில் தூக்கி வைத்தபடி காட்சி கொடுக்கிறாள். அதனால் பக்தர்கள் இவளை குழந்தை அம்மன் என அன்போடு அழைக்கின்றனர். மேலும் குறத்தி வடிவில் பூங்குறத்தி அம்மனும், சங்கு சக்கரத்துடன் பச்சை வாழியம்மனும் அருள்பாலிக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் தெற்கு நோக்கி கைலாய சிவன் சன்னதியும், தட்சணாமூர்த்தி சன்னதியும் உள்ளது. கோயிலின் பிரகாரத்தில் வாழு முனி,  கருமுனி, லாடமுனி, ஜடாமுனி, செம்முனி, முத்து முனி, வீரமாமுனி ஆகிய காவல் தெய்வங்கள் அமைந்திருக்கின்றனர்.

இந்த கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் நவராத்திரி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தீர்த்து வாழ்க்கையில் காத்தாயி அம்மன், இன்பம் அளிப்பாள் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் தினந்தோறும் மனதார வந்து வேண்டி செல்கின்றனர். வாய்ப்பு இருந்தால் நீங்களும் சென்று பாருங்கள்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)