Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆடி அமாவாசை.. சொரிமுத்து அய்யனார் கோயில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Sorimuthu Ayyanar Temple: சொரிமுத்து அய்யனார் கோயிலில் 2025 ஆடி அமாவாசை விழாவிற்கான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 22 முதல் 25 வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஜூலை 19 முதல் 21 மற்றும் 27 மற்றும் 28 தேதிகளில் கோயில் பகுதி மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை.. சொரிமுத்து அய்யனார் கோயில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சொரிமுத்தய்யனார் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 18 Jul 2025 10:56 AM

ஆடி மாதத்தில் (Aadi Masam) வரும் மிகவும் விசேஷமான நாளாக ஆடி அமாவாசை (Aadi Amavasya 2025) திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனச்சகரத்தில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் (Sorimuthu Ayyanar Temple) செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 2025, ஜூலை 24 ஆம் தேதி வியாழக்கிழமை அமாவாசை திதி வருகிறது. இதனை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பக்தர்கள் சுமார் ஒரு வார காலம் அங்கு தங்கி இறை வழிபாட்டில் ஈடுபடுவார்கள். இப்படியான நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வனத்துறையினர் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான விதிமுறைகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ளார். அதனைப் பற்றிக் காணலாம்.

பக்தர்கள் கவனத்திற்கு

அதன்படி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவுக்காக பக்தர்கள் நலன் கருதி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. நான்கு மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமிரபரணி ஆறு மற்றும் கோயில் அமைந்துள்ள வனப்பகுதியில் இயற்கை சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Also Read: குலத்தை காக்கும் கடவுள்.. குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம் தெரியுமா?

கூட்ட நெரிசலால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி வழிப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2025 ஜூலை 22ஆம் தேதி காலை 6  மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பாபநாசம் சோதனை சாவடியில் இருந்து தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

ஜூலை 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை கோயிலின் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் காரணத்தினால் பாபநாசம் வன சோதனை சாவடி மூடப்பட்டு அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது.

ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரை பாரம்பரிய சடங்குகளை மேற்கொள்ள திருக்கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள். அம்பாசமுத்திரம் அகஸ்தியர் பட்டியில அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்துகளில் மட்டுமே திருக்கோயிலுக்கு பக்தர்கள் சென்று வர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதி கிடையாது.

Also Read:Ghee Lamp: நெய் தீப வழிபாடு.. இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? 

ஜூலை 29 முதல் வழக்கமான தரிசனம்

ஜூலை 26 ஆம் தேதி காலை குறைவான எண்ணிக்கையில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் பக்தர்கள் கீழே கொண்டு வருவதற்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு ஜூலை 26 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை பாபநாசம் திருக்கோயில் பார்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும் கீழே இறங்கும் பக்தர்களுக்காக அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 27 மற்றும் ஜூலை 28ஆம் தேதி தூய்மை பணிகள் காரணமாக பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. ஜூலை 29ஆம் தேதி முதல் வழக்கம் போல பக்தர்கள் சென்று வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.