Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Esakki Amman Temple: திருமண தடை நீக்கும் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில்!

Aadi Month Temples: ஆடி மாதத்தில் சிறப்பு வாய்ந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், நாகர்கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பஞ்சாயத்து நடத்திய இடத்தில் அமைந்த கோயிலாகும். இசக்கியம்மன் மற்றும் ஔவையார் வழிபாடு சிறப்பான ஒன்றாகும். கோயிலின் வரலாறு, சிறப்புகள் பற்றி அறிவோம்.

Esakki Amman Temple: திருமண தடை நீக்கும் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில்!
முப்பந்தல் இசக்கியம்மன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 18 Jul 2025 13:23 PM

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்கள் முழுக்க கொண்டாட்டமாக திகழும். பராசக்தியான பெண் தெய்வங்களின் ஆற்றல் இம்மாதத்தில் சிவபெருமானை விட அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் தான் ஆடி மாதம் ஆன்மிக மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நாம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் மிகவும் பிரபலமாக திகழும் கோயில்கள் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே அமைந்துள்ள “முப்பந்தல் இசக்கியம்மன்” கோயில் பற்றிப் பார்க்கலாம். இந்த கோயில் தென்மாவட்ட மக்களிடையே மிகவும் விசேஷமாக திகழ்கிறது. கன்னியாகுமரி, நாகர்கோயில் செல்லும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு தவறாமல் செல்லும் அளவுக்கு புகழ் பெற்றது. இந்த கோயிலின் சிறப்புகள் பற்றி அறிவோம்.

கோயிலின் தல வரலாறு

பொதுவாக கிராமங்களில் ஏதேனும் பிரச்சனை என்றால் ஒரு பெரிய ஆலமரத்தடியில் அமர்ந்து ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்து கூட்டி பேசித் தீர்ப்பது வழக்கம். அதேபோல் மன்னர்கள் காலத்திலும் இந்த பஞ்சாயத்து கூட்டி பிரச்சனைகளை தீர்க்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. குறிப்பாக சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் தங்கள் பிரச்சனைகளை பேசி தீர்ப்பதற்காக கூட்டம் நடத்துவதற்கு திருநெல்வேலி – நாகர்கோயில் சாலையில் உள்ள காவல்கிணறு என்னும் ஊரில் மூன்று பந்தல்கள் அமைத்திருந்தனர்.

இதையும் படிங்க: நம்பினால் கெடுவதில்லை.. தீராத நோய்களைப் போக்கும் நம்பு நாயகி அம்மன்!

இந்தப் பந்தலில் இசக்கியம்மனையும், தமிழ் புலவரான ஔவையாரை அம்மனாகவும் பாவித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அவர்கள் முன்னிலையில் தங்கள் பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. காலம் சென்ற நிலையில் பாண்டிய மன்னரால் இசக்கியம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

பந்தல் அமைத்து அம்மனை வழிபட்ட ஸ்தலம் என்பதால் இந்த இடம் முப்பந்தல் என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் அருள் பாலித்து வரும் இசக்கியம்மனும் அவ்வையாரும் தென் மாவட்டமான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகின்றனர். இப்படியாக இந்த கோயில் உருவானதாக சொல்லப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள் 

இந்தக் கோயிலின் மூலவராக இசக்கியம்மன் அருகில் கல்யாணியம்மன் காட்சி கொடுக்கிறாள்.  மேலும் விநாயகர், வைஷ்ணவி, பாலமுருகன், சுடலைமாடசுவாமி, பட்டவராயர், அவ்வையார் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளது.

இக்கோயிலில் அவ்வையார் அம்மனுக்கு பூஜை நடந்த பிறகு இசக்கியம்மனுக்கு வழிபாடு செய்யும் வழக்கம் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம், திருமண தடை உள்ளவர்கள், உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் ஆகியோர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கையாகும்.

இதையும் படிங்க: காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு போறீங்களா? – இதை செய்ய மறக்காதீங்க!

குறிப்பாக உடல் நல பாதிப்பால் இருப்பவர்கள் இசக்கியம்மனுக்கு தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம் என தங்களால் முடிந்த உலோகங்களால் உடல் உருவம் செய்து செலுத்துவதாக பிரார்த்தனை செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இந்த கோயிலானது காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

தமிழ் மாதத்தின் கடைசி மாதமான பங்குனியின் செவ்வாயில் திருவிளக்கு பூஜை மற்றும் தை மாத கடைசி செவ்வாயில் புஷ்பாபிஷேகம், ஆனி உத்திரத்தில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். குறிப்பாக ஆடி மாதத்தில் இந்த கோயிலுக்கு செல்ல முடியாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வாய்ப்பு இருப்பவர்கள் இந்த மாதத்தில் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு அதற்கேற்ப பலன்களை பெறுங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை)