Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aadi Perukku Worship: ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?

ஆடிப்பெருக்கு, இந்துக்களின் முக்கியமான பண்டிகையாகும். இது ஆடி மாதம் 18 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இந்நாளில் வீட்டுப் பூஜை மற்றும் ஆற்றுப்படுகை வழிபாடுகளுக்கு செய்தால் பல பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Aadi Perukku Worship: ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?
ஆடிப்பெருக்கு வழிபாடு
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 29 Jul 2025 11:20 AM

ஆடிப்பெருக்கு (Aadi 18) என்பது இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். இந்து மதத்தில் மற்ற பண்டிகைகள் திதிகள் அடிப்படையில் கொண்டாடப்படும் நிலையில் நாட்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு கொண்டாடப்பட்டு பண்டிகை ஆடி 18ம் பெருக்கு (Aadi Perukku) ஆகும். இந்நாள் மிகவும் புனிதமான நாளாக பார்க்கப்படுகிறது. ஆடிப்பெருக்கு, ஆடி நோம்பி என பல வகை பெயர்களால் அழைக்கப்படும் இந்நாள் உழவர்களின் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. ஆடி 18ம் தேதி ஆற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து வருவது தான் ஆடிப்பெருக்கு என குறிப்பிடப்படுகிறது. அதேசமயம் இந்நாளில் வீட்டிலும், ஆற்றுப்படுகைகளிலும் மிக முக்கியமான வழிபாடு பெண்களால் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் வழிபாடு செய்வது எப்படி என்பது பற்றி நாம் இந்த கட்டுரையில் காணலாம்.

இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பல்வேறு விதமான வளர்ச்சிகளும், செல்வ வளமும் பெருகும் என்பது நம்பிக்கையாகும். திருமணமாகாத பெண்கள் விரதம் மேற்கொண்டால் நல்ல கணவனும், எதிர்கால இல்வாழ்க்கை சுபமாகவும் அமையும் என்பது ஐதீகமாக உள்ளது. அதேசமயம் திருமணமான பெண்கள் தாலிச்சரடு மாற்றியும், சிறந்த வழிபாடும் செய்தால் கணவரின் ஆயுள் நீண்டும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் அமையும் என்பது தீராத நம்பிக்கையாக உள்ளது.

Also Read: கடன் பிரச்னைகளை தீர்க்கும் ஆடி செவ்வாய் வழிபாடு.. எப்படி செய்ய வேண்டும்?

2025ம் ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 2ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளில் நல்ல மழை பெய்து நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?

ஆடிப்பெருக்கு நாளில் அதிகாலையில் எழுந்து பெண்கள் புனித நீராட வேண்டும். அதற்கு முந்தைய நாள் வீட்டை முழுவதுமாக சுத்தப்படுத்த வேண்டும். ஆனால் முந்தைய நாள் ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டாம். வியாழக்கிழமை வீடு மற்றும் பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஆடிப்பெருக்கு நாளில் அதிகாலை வழிபாடு செய்வதற்கு முன்னர் பூஜையறை அல்லது அங்கு வழிபாடு செய்ய வேண்டிய இடத்தை மட்டும் சுத்தம் செய்தால் போதுமானது.

முதலில் வழிபாடு நடக்கும் இடத்தில் கோலமிட வேண்டும். பின்னர் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். முன்னால் வாழையிலை விரித்து அதில் தேங்காய், பூ, பழம், வெற்றிலை பாக்கு, காதோலை கருகுமணி, வளையல் ஆகியவற்றை வைக்க வேண்டும். அப்போது நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், ஏதேனும் இனிப்புகள், சர்க்கரை கலந்த பால் என ஏதாவது ஒன்றை வைத்து வணங்கலாம்.

Also Read:  ஆடி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு கூழ் காய்ச்சினால் இவ்வளவு பலனா?

நீர்நிலைகள் பற்றி மனதார வேண்டி இயற்கைக்கு நன்றி செலுத்த வேண்டும். தூப ஆராதனைகள் செய்து தீபமேற்றி வழிபடலாம். மேலும் திருமணமான பெண்கள் வழிபாடு முடிந்த பிறகு தாலிக்கயிறு அல்லது தாலிச்சரடு மாற்றலாம். அதேபோல் சுமங்கலி பெண்களுக்கு தாலிக்கயிறு கொடுப்பதும் 16 வகையான பலன்களையும் தரும் என நம்பப்படுகிறது.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)