Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆடி மாதம்.. சென்னையில் மிஸ் பண்ணக்கூடாத அம்மன் கோயில் இதுதான்!

ஆடி மாதத்தில் களைகட்டும் முண்டகக்கண்ணியம்மன் கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. தாமரைக்குளக் கரையில் அமைந்த இந்த கோயிலில், தாமரை மொட்டு வடிவிலான அம்பாள் சுயம்புவாக எழுந்தருளியுள்ளாள். நாகதோஷ நிவர்த்தி, திருமண தோஷம், அம்மை நோய் உள்ளிட்டவற்றிற்கு இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

ஆடி மாதம்.. சென்னையில் மிஸ் பண்ணக்கூடாத அம்மன் கோயில் இதுதான்!
முண்டக கண்ணியம்மன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 17 Jul 2025 13:55 PM

ஆடி மாதம் தொடங்கி விட்டாலே அம்மன் கோயில்கள் களைகட்டி விடும். அந்த அளவுக்கு இந்த மாதத்தில் பெண் தெய்வங்களுக்கு அதிகளவில் சக்தி இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் பெண்கள் ஆடி மாதத்தில் அம்மனுக்கு விரதம் இருப்பது தொடங்கி பல்வேறு விதமான நேர்த்தி கடன்களை செலுத்துவது வழக்கம். இப்படியான நிலையில் ஆடி மாதத்தில் நாம் தமிழ்நாட்டில் பிரபலமான பெண் தெய்வங்களின் கோயில்கள் பற்றி காண்போம். அந்த வகையில் சென்னை மயிலாப்பூர் – அடையாறுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் முண்டகக் கண்ணியம்மன் கோயில் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம். இந்த கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலமாக திகழும் இந்த கோயில் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.

கோயில் உருவான வரலாறு

முன்பொரு காலத்தில் இந்தக் கோயில் இருந்த இடத்தில் ஒரு தாமரைக் குளம் ஒன்று இருந்துள்ளது. அதன் கரையில் இருந்த ஆலமரத்தின் அடியில் அம்பாள் சுயம்பு ரூபமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தாள். ஆரம்பத்தில் ஓலை குடிசை வேய்ந்து சிறிய அளவில் சன்னதி அமைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தி வந்தனர். பிற்காலத்தில் கோயில் விரிவாக கட்டப்பட்ட நிலையில் அம்பிகையின் உத்தரவு கிடைக்காததால் மூலஸ்தானம் மட்டும் தற்போதும் குடிசையிலே இருப்பது சிறப்பானதாகும்.

எளிமையை உணர்த்துவதற்காக அந்த இடத்திலிருந்து அம்பாள் அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது. தாமரை மொட்டு போன்ற வடிவத்தில் அம்பிகையின் சுயம்பு வடிவம் இருப்பதால் இவள் முண்டக கண்ணியம்மன் என அழைக்கப்படுகிறாள். முண்டகம் என்றால் தாமரை என்று பொருளாகும். இப்படியாக இந்த முண்டக கண்ணியம்மன் கோயில் உருவானதாக சொல்லப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலில் வீற்றிருக்கும் முண்டக கண்ணியம்மன் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மாவின் அம்சத்துடன் காட்சி தருவதாக நம்பப்படுகிறது. அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் ஒரு ஆலமரமும், அதற்குள் நாகபுற்றும், நாக தேவதை சன்னதியும் இருக்கிறது. இந்த கோயிலில் நாக தோஷம் உள்ளவர்கள் நாக தேவதைக்கு பால், மஞ்சள், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.

Also Read: Kamakshi Amman: ஏலக்காய் மாலை வழிபாடு.. திருமண வரன் அருளும் காமாட்சி அம்மன்!

மேலும் மூலஸ்தானத்திற்கு இடது பக்கத்தில் உற்சவ அம்பாள் இருபுறமும் சிம்ம வாகனம் இருக்கும் நிலையில் சிம்மாசனத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறாள். அது மட்டுமல்லாமல் பிரகாரத்தில் சப்த கன்னியர்களின் லிங்கம் போன்ற அமைப்பில் காட்சி தருவது விசேஷமாக பார்க்கப்படுகிறது. கோயிலுக்கு முகப்பில் அரச மரத்தின் கீழ் விநாயகர் வீற்றிருக்கிறார்.

இந்த கோயிலில் முண்டக கண்ணியம்மனின் சுயம்பு வடிவத்திற்கு நாக கிரீடம் அணிவிக்கப்பட்டு இரண்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அலங்கரிக்கிறார்கள். மேலும் காலை வேளையில் ஆறு மணியிலிருந்து நண்பகல் நடை சாற்றப்படும் வரை நடைபெறும் அபிஷேகத்தின் போது மட்டுமே அம்பாளை சுயம்பு வடிவில் தரிசிக்க முடியும்.

அம்மனுக்கு நடக்கும் அன்னாபிஷேகம்

பொதுவாக சிவன் கோயில்களில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து வேண்டிக் கொள்வார். ஆனால் அம்பிகை பார்வதியின் அம்சமாக கருதப்படுவதால் இந்த கோயிலில் முண்டகக்கண்ணி அம்மனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட செய்கிறார்கள். மேலும் பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட வறட்டியை கொண்டு சுவாமிக்கு பிரசாதமாக பொங்கல் தயாரிக்கப்படுகிறது. இதில் கிடைக்கும் சாம்பல் இங்கு பிரசாதமாகவும் தரப்படுகிறது.

Also Read: Devi Karumariamman: வேண்டியதை அருளும் தேவி கருமாரியம்மன்.. இந்த கோயில் தெரியுமா?

இந்தக் கோயிலில் அம்பாள் முன் வழிபாடு செய்யப்பட்ட எலுமிச்சை, மஞ்சள் மற்றும் வேப்பிலை ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தை மாதத்தில் பொங்கல் விழாவும், ஆடி மாதத்தில் கூழ் ஊற்றும் வைபவமும் வெகு விமரிசையாக நடைபெறும். குறிப்பாக ஆடி மாத கடைசி வெள்ளியில் 1008 மலர் கூடை அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கோயிலில் வழிபாடு செய்கிறவர்கள் வேப்பிலையை ஆடையாக அணிந்து சன்னதியை வளம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தவும் செய்கின்றனர்.

அம்மை நோய் உள்ளவர்கள், திருமண தோஷம், கண் தொடர்பான நோய் கொண்டவர்கள் அதிக அளவில் இந்த கோயிலில் வந்து வழிபட செய்கிறார்கள். வாய்ப்பு இருப்பவர்கள் ஆடி மாதத்தில் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு அதற்கான பலன்களை பெறுங்கள்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)