Aadi Sunday: ஆடி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு கூழ் காய்ச்சினால் இவ்வளவு பலனா?
Aadi Sunday Significance: ஆடி மாதம் என்பது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த காலமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மனுக்கு உகந்த கூழ் காய்ச்சி வழிபடுவது சிறப்பான ஒன்றாகும். அந்த வகையில் ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ் தானம் செய்வதால் பெரும் புண்ணியம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

ஆடி மாதம் (Aadi Masam) பிறந்து விட்டாலே ஆன்மிக அன்பர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான காலமாக அமையும். அந்த வகையில் இம்மாதத்தின் ஒவ்வொரு நாளும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும். ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை, பூரம் நட்சத்திரம், 18ம் பெருக்கு என ஏராளமான ஆன்மிக தினங்கள் வருவதால் தான் மற்ற மாதங்களை காட்டிலும் இம்மாதம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புராணங்களில் இந்த ஒரு மாத காலமும் பெண் தெய்வங்களுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ஆடி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளும் வெகு சிறப்பான நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி வழிபடும் வைபமும் செய்யப்படுகிறது. அதற்கான காரணமும், அப்படி கூழ் காய்ச்சுவதால் கிடைக்கும் பலன்களும் பற்றி நாம் காணலாம்.
ஆடி மாதமும்.. அம்மனுக்கு உகந்த கூழும்
சாஸ்திரங்களை பொறுத்தவரை ஆடி மாதமும், மார்கழி மாதமும் எந்தவித சுப காரியங்களும் செய்வதற்கு ஏற்ற காலம் இல்லை என கூறப்படுகிறது. இவ்விரு மாதங்களும் முழுக்க முழுக்க ஆன்மீக மாதங்களாக கருதப்பட்டு அதற்கேற்ப நடைமுறைகள் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயிலில் ஊற்றப்படும் கூழ் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். மருத்துவ குணம் கொண்ட மூலிகை பொருள்கள் நிறைந்த இந்த கூழை நாம் குடித்தால் உடல் ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் நம்மை அண்டாது என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
Also Read: பலன்களை அள்ளித்தரும் ஆடி வெள்ளிக்கிழமை விரதம்.. இருப்பது எப்படி?
ஆடி ஞாயிற்றுக்கிழமை உகந்த நாள்
இப்படியான நிலையில் ஆடி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் அம்மனுக்கு கூழ் காய்ச்ச உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. காரணம் இந்த ஞாயிற்றுக்கிழமை நாளில் செய்யக்கூடிய தானமானது மிகப்பெரிய கோடி புண்ணியத்தை நமக்கு அளிக்கும் என நம்பப்படுகிறது. அதனால் அம்மனுக்கு மிகவும் உகந்த கூழ் காய்ச்சி ஏழை எளிய மக்களுக்கு உணவாக வழங்கப்படுகிறது. பொருளாதார வசதி கொண்டவர்கள் இந்த நாட்களில் அன்னதானம் செய்து அதற்கான பலனை பெறலாம்.
கூழ் காய்ய்ச்சுவதோடு மட்டுமல்லாமல் இந்த நாளில் முருங்கைக்கீரை, காராமணி, வாழைக்காய், கொழுக்கட்டை, கருவாடு, கத்தரிக்காய்,மாவிளக்கு, மொச்சை ஆகிய பதார்த்தங்கள் தயார் செய்து அம்மனுக்கு பிரசாதமாக படைத்து பூஜை செய்து தானம் வழங்க வேண்டும்.இந்த நாளில் தானம் கொடுப்பவர்களுக்கும் சரி தானம் வாங்குபவர்களுக்கும் சரி, பெரும் புண்ணியம் அம்பாளின் அருளால் வந்து சேரும் என்பது ஐதீகமாக உள்ளது.
Also Read: Deepam: நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ஒருவேளை உங்களால் இந்த நாளில் கூழ்,உணவு போன்றவற்றை வழங்க முடியாவிட்டால் பணம், தேவையான பொருட்கள் ஆகியவற்றையும் எளியவர்களுக்கு தானமாக வழங்கலாம். இதனால் மிகப்பெரிய துன்பங்கள் வந்தாலும் அவையெல்லாம் தாங்கக்கூடிய சக்தியை அம்மன் உங்களுக்கு அளித்து வாழ்க்கையை நன்மை பெறச் செய்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது)