அனைத்து வளங்களையும் அருளும் தையல்நாயகி அம்மன்.. இந்த கோயில் தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள தையல் நாயகி அம்மனின் சகோதரியே இங்கு கோயில் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற அம்மனை வணங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாத நல்லூர் கிராமத்தில் இந்த கோயிலானது அமைந்துள்ளது.

என்னதான் வாழ்க்கையில் பல பிரச்னைகள் இருந்தாலும் அனைவரின் நம்பிக்கையும் கடைசியில் தெய்வத்திடம் சென்று முறையிடுவதில் தான் முடியும் என சொல்வார்கள். தீர்வுகள் கிடைக்காவிட்டாலும் மனதிற்கு எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மக்களை தங்களின் குழந்தைகளாக நினைத்து அன்பு, அறிவுரை,கண்டிப்பு, கோபம் உள்ளிட்ட சகல எண்ணங்களையும் தெய்வங்கள் வெளிப்படுத்தும் என நம்பப்படுகிறது. அப்படியான நிலையில் இதில் பெண் தெய்வங்களின் அனுக்கிரகம் ஒருபடி மேல் தான் இருக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதம் என அழைக்கப்படும் இந்த ஆன்மிக மாதத்தில் பெண் தெய்வங்களுக்கு நாம் செய்யும் வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் அனைத்தும் நிச்சயம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் என நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் அரியலூர் மாவட்டம் அருகே கோயில் கொண்டிருக்கும் தையல் நாயகி அம்மன் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
தையல் நாயகியாக அம்மன்
இந்த கோயிலானது அம்மாவட்டத்தில் பொய்யாத நல்லூர் என்ற ஊரில் உள்ளது. இந்த கோயில் நடையானது காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும். மயிலாடுதுறையில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் அம்பாள் தையல் நாயகியின் சகோதரி தான் இக்கோயிலில் தையல் நாயகியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
கோயிலின் அற்புத வரலாறு
முன்பு காலத்தில் இரு சகோதரிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து நடந்தே பயணம் மேற்கொண்டு வந்தனர். அவர்கள் இருவருக்கும் தையல் நாயகி என பெயர் இருந்தது. வெகு தூரம் இருவரும் நடந்து வந்த நிலையில் களைப்பில் மூத்த பெண் கரிசல் மண் நிறைந்த பகுதியில் அயர்ந்து தூங்கினாள். சகோதரி அமர்ந்ததை அறியாமல் தொடர்ச்சியாக நடந்த தங்கை வளம் பொருந்திய நஞ்சை மண்ணை அடைந்தாள். பின்னால் திரும்பிப் பார்க்கும்போது தனது சகோதரி இல்லாததை கண்டு இந்தப் பெண் கூவி அழைத்தாள்.
Also Read: Lakshmi Devi: லட்சுமி தேவி ஆசீர்வாதம் வேண்டுமா? – இரவில் இதெல்லாம் செய்யுங்க!
ஆனால் தனக்கு இந்த கரிசல் மண் பிடித்து போய் விட்டதால் இங்கேயே கோயில் கொள்கிறேன் என அந்த சகோதரி கூறினார். அதற்கு இந்த பெண்ணும் சம்மதம் சொல்ல, எனக்கு ஊரில் மக்கள் விழா எடுத்தால் நீ அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டாள். அதற்கு கரிசல் மண்ணில் இருந்த சகோதரியும் இசைந்தாள். இப்படியாக மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் விழா நடைபெறும் போது பொய்யாத நல்லூர் கோயிலில் உள்ள உற்சவ அம்மனை மக்கள் தோளில் சுமந்து சாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டு திரும்புவது வழக்கமாக உள்ளது.
கோயிலின் மகிமைகள்
பொய் பேசாத மக்கள் வாழும் ஊர் என்பதால் இந்த ஊருக்கு பொய்யாத நல்லூர் என பெயர் ஏற்பட்டதாக கூறுவார்கள். எப்படி வைத்தீஸ்வரன் கோயிலில் வீற்றிருக்கும் தையல்நாயகி அம்மனுக்கு பேரும் புகழும் உள்ளதோ அதேபோல் இங்கு உள்ள தையல்நாயகி அம்மனுக்கும் எதற்கும் குறைவில்லாத புகழ் உள்ளது. இந்தக் கோயிலின் அருகிலேயே வைத்தீஸ்வரன் குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதுமட்டுமல்லாமல் அய்யனார், காமாட்சியம்மன், பொன்னியம்மன், சாமுண்டீஸ்வரர், வீரமுத்தையா, மருதையன் ஆகியோரும் இந்தக் கோயிலில் காட்சி கொடுக்கின்றனர்.
Also Read: ராமரின் சிவ வழிபாடு.. நிற்கும் அம்பாளுக்கு உட்கார்ந்த நிலையில் அலங்காரம்.. இந்த கோயில் தெரியுமா?
இந்த கோயிலில் ஆடி மாதத்தில் அமாவாசை, பௌர்ணமி, மற்றும் ஆடி வெள்ளி ஆகிய மூன்று தினங்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும் வந்து இந்த அம்மனை வணங்கி தங்களுடைய பணிகளை தொடங்குகின்றனர். இங்குள்ள அம்மனுக்கு எந்த பலி பூஜையும் நடைபெறாத நிலையில் மருதையனுக்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக ஆடு, கோழி ஆகியவற்றை படையிலிடுகின்றனர். அதே சமயம் அம்மனுக்கு படையல் இட்டு அபிஷேகம் செய்து தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த அம்மனை வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். வாய்ப்பு இருந்தால் நீங்களும் ஒருமுறை இந்த கோயிலுக்கு சென்று வணங்கி பலன்களை பெறுங்கள்.
(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)