நினைத்ததை நிறைவேற்றும் மதுரை திரௌபதி அம்மன்.. இந்த கோயில் தெரியுமா?
மதுரை தவிட்டுச் சந்தையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் மிகவும் விசேஷம் வாய்ந்தது. கோயிலின் திறப்பு நேரம், வழிபடக்கூடிய தெய்வங்கள், கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் போன்றவை பற்றி நாம் இக்கட்டுரையில் காணலாம். சந்தோஷி மாதா இங்கு வழிபடப்படுவது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை வழிபாட்டுத்தலங்கள் இல்லாத ஊரை பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு இந்தியா ஆன்மீக பூமியாக திகழ்கிறது. இங்குள்ள மக்களின் கலாச்சாரம் தொடங்கி உணவு வரை அனைத்தும் வேறுபட்டு இருந்தாலும் கடவுள் நம்பிக்கை என்பது ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் திரும்பும் திசை எங்கும் பல்வேறு மதங்களின் வழிபாட்டுத்தலங்கள் நிரம்பி கிடக்கிறது. மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் மக்கள் ஒருவருக்கொருவர் மற்ற மதங்களை மதித்தும், அவர்களின் நம்பிக்கைகளை கடைபிடித்தும் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நிலையில் மதுரை மாவட்டம் தவிட்டு சந்தையில் அமைந்திருக்கும் திரௌபதி அம்மன் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த கோயில் ஆனது காலை 6 மணி முதல் 10 மணி வரையும் மாலையில் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். இந்த கோயிலில் திரௌபதி அம்மன் தவிர்த்து சந்தோஷி மாதா, சனீஸ்வரர், வலம்புரி விநாயகர், ஸ்ரீ சத்ய நாராயண சுவாமி, திருநங்கைகள் வணங்கும் ஸ்ரீ நல்லமுடி அரவான், காவல் தெய்வமாக வணங்கப்படும் ஸ்ரீ வீரபத்திரர், பத்திரகாளி குரு உள்ளிட்ட பல தெய்வங்கள் அருள்பாலிக்குகின்றனர்
Also Read: Mahalakshmi Temple: சகல செல்வங்களையும் அளிக்கும் இந்த மகாலட்சுமி கோயில் தெரியுமா?
கோயில் உருவான வரலாறு
செய்யாத தவறுக்காக தனது கணவன் கோவலனை கொன்றதற்காக பாண்டிய மன்னன் மீதும், பாண்டிய நாடு மீதும் கடும் கோபம் கொண்ட கண்ணகி மதுரையை எரித்தாள் என்பது வரலாறு. அந்த நேரத்தில் மதுரை எந்தவித பாதிப்பும் அடையாமல் இருக்க இங்கு வாழ்ந்த மக்கள் பார்வதி தேவியை வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற பார்வதி அசரீதியாக ஒழித்து பஞ்சபாண்டவர்களின் துணைவியான திரௌபதியை கைகாட்டினாள். பஞ்சபூதங்களையும் அடக்கியாளும் சக்தி கொண்டவள் திரௌபதி. எனவே கண்ணகியின் கோபத்தால் ஏற்பட்ட பஞ்சபூத சீற்றங்களினால் மதுரை நகரம் பாதிப்படையாமல் இருப்பதற்காக இவளுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள் என்று பார்வதி தேவி கூறியதாகவும் அதன் அடிப்படையில் இப்பகுதி மக்கள் கோயில் கட்டியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.
கோயிலின் சிறப்புகள்
இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் சந்தோஷி மாதா பொதுவாக வடஇந்திய மக்களால் தான் அதிக அளவில் வணங்கப்படுகின்றனர். தென்னிந்தியாவில் விநாயகரின் புதல்வியாக அறியப்படும் சந்தோஷி மாதாவுக்கு வழிபாடுகள் மிகவும் குறைவு. அது இந்த தலத்தில் நடைபெறுவது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சித்திரகுப்தரும் தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
Also Read:Saneeswaran Temple: சனி தோஷத்தால் அவதியா? – இந்த 21 அடி சனீஸ்வரர் கோயில் போங்க!
ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் குரு பகவானையும், வெள்ளிக்கிழமையில் திரௌபதி அம்மனையும், சனிக்கிழமையில் சனீஸ்வரர் என மூன்று நாட்கள் தொடர்ந்து இங்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் ராகு காலத்தில் திரௌபதி அம்மனுக்கு அரளிப்பூ மாலை சாத்தி நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துகின்றனர்.
இங்கிருக்கும் சந்தோஷி மாதாவை வழிபட்டால் குழந்தை பேரு, சகல ஐஸ்வர்யம், ஆகியவை கிடைக்கும் என நம்பப்படுகிறது மேலும் திருமண தடை நீங்கவும், தீய சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலவும் பொதுமக்கள் இந்த கோயிலில் வழிபடுகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் நடைபெறும் திருவிழா மற்றும் வைகாசி மாதத்தில் 16 நாட்கள் நடைபெறும் திருவிழா ஆகியவை இக்கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். வாய்ப்பு இருந்தால் ஒரு முறை இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.