என்ன வேண்டினாலும் நிறைவேறும்.. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மகிமை!
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயிலாகும். திப்பு சுல்தான் காலத்துடன் தொடர்புடைய இக்கோயில், தமிழ்நாட்டில் தசாவதாரம் கொண்டாடப்படும் ஒரே கோயில் என்பது சிறப்பானதாகும். தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கு தினமும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.

ஆடி மாதம் வந்துவிட்டாலே அம்மன் கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆன்மீக மாதத்தில் பெண் தெய்வங்களுக்கு சக்தி அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால்தான் சாஸ்திரத்தில் ஆடி மாதம் முழுக்க இறை நம்பிக்கை காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் இந்த காலகட்டத்தில் அம்மன் கோயில்களில் பல்வேறு வகையான விசேஷ தினங்கள் சிறப்பாக நடைபெறும். அப்படியாக ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பல்வேறு வகையான அம்மன் கோயில்கள் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் அமைய பெற்றுள்ள கோட்டை மாரியம்மன் கோயில் பற்றி அறிந்து கொள்வோம்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில்
ஏற்கனவே வட தமிழ்நாட்டில் சேலத்தில் ஒரு கோட்டை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அதேசமயம் தென் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தினமும் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த கோட்டை மாரியம்மன் கோயில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் அதே சமயம் மாலையில் 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Esakki Amman Temple: திருமண தடை நீக்கும் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில்!
கோயில் உருவான வரலாறு
திருச்சியில் எப்படி மலைக்கோட்டை புகழ்பெற்றதாக திகழ்கிறதோ அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் மலைக்கோட்டை சிறப்பு வாய்ந்த இடமாக உள்ளது. இதன் அடிவாரத்தில் தான் கோட்டை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆட்சி செய்த காலத்தில் மன்னர் திப்புத் சுல்தான் ஆட்சியின் கீழ் திண்டுக்கல் இருந்துள்ளது. மலையின் மேலே கோட்டை இருந்த நிலையில் திப்புசுல்தானின் படைவீரர்கள் அடிவாரத்தில் போர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம் அப்போது தங்கள் காவல் தெய்வமாக மாறிய மனைவி வைத்து வழிபட்டு வந்துள்ளனர் ஆரம்ப காலத்தில் மாரியம்மன் கோயில் என அழைக்கப்பட்ட இந்த புனித தளம் காலப்போக்கில் கோட்டை மாரியம்மன் கோயில் என அழைக்கப்பட்டது.
கோயிலின் சிறப்புகள்
இந்த கோட்டையில் இருந்து பழனிக்கு சுரங்கப்பாதை இருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை இந்த பாதையின் வழியே திப்பு சுல்தான் பழனி முருகனை சென்று வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. இக்கோயிலில் அமர்ந்த கோலத்தில் எழில் மிகுந்த சூழலில் வீற்றிருக்கும் கோட்டை மாரியம்மன் தனது எட்டு கைகளில் பாம்பு,சூலாயுதம், மணி, கபாலம், வில், கிண்ணம் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கிறார். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் 20 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் கொடியேற்றம், பூ அலங்காரம், பூச்சொரிதல் விழா, பூக்குழி இறங்குதல், தேரோட்டம், ஊஞ்சல் உற்சவம், தெப்ப உற்சவம் என அனைத்தும் நடைபெறும். பொதுவாக கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்தால் அதனை நிறைவேற்றாமல் அவள் இருக்க மாட்டாள் என்பதை பக்தர்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது. அதனால் தான் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் வருகை தந்து வழிபாடு செய்தும், தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும் வருகின்றனர்.
Also Read: Vekkaliyamman Temple: நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோயில்களில் தசாவதாரம் கொண்டாடப்படும் ஒரே கோயில் இந்த திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் தான். கோயிலுக்கு மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் சமூக மக்கள் வருகை தருவது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
இக்கோயிலின் சன்னதியின் உட்புறத்தில் தாமிரத்தால் கலந்து செய்யப்பட்ட கம்பத்தடி உள்ளது. மேலும் விநாயகர், மதுரை வீரன், நவக்கிரகங்கள், முனீஸ்வரர், கருப்பண்ணசாமி, காளியம்மன், துர்க்கை ஆகியோரும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். இந்த கோயிலில் உள்ள மாரியம்மன் சிலை மற்ற கோயில் தெய்வங்களை காட்டிலும் அதன் அடிப்பகுதி பூமியின் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.. வாய்ப்பு இருப்பவர்கள் ஒரு முறை இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)